Saturday, 12 October 2019

"இறைவன் வந்துவிட்டான்

அன்புடைய ஆன்மீக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்,

“யதா யதா ஹி தர்மஸ்ய க்ளானிர்பவதி பாரத,
சாப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ரஜாம்யாஹம்”

என்று கீதையில் பகவான் கிருஸ்ணன் கூறுகின்றான். இதன் பொருள் “ஓ பாரத, தர்மம் சரிந்து அதர்மம் தலை தூக்குகின்றபோது, என்னுடைய பஞ்சபூத காரணிகளைக் கொண்டு நானே என்னை படைத்துக்கொள்கிறேன்” என்பதாகும்.
“க்ளானி” என்றால், ஒரு பொருள் அது இருக்க வேண்டிய நிலையில் இல்லாமல் மாறி இருப்பது என்று பொருள். இந்த ஸ்லோகத்தில் பகவான் கூறுகிறார், “தர்மஸ்ய க்ளானிர்” என்று. தர்மம் அது இருக்க வேண்டிய நிலையில் இல்லாமல் நிலை மாறுகின்ற போது, அதாவது அதர்மத்தின் கை ஓங்கி இருக்கின்றபோது, மனிதர்கள் எல்லோரும் அய்யோக்கியர்களின் முன்னால், இரக்கமில்லா அரக்கர்களின் முன்னால் தலை குணிந்து வாழுகின்ற நிலை வரும்போது, அதைப் பார்த்துக்கொண்டு இவ்வுலகைப் படைத்த இறைவனால் சும்மா இருக்க முடியாது, அதனால் அந்த அதர்மவாதிகளை அழித்து, நிலைமாறிய தர்மத்தை மீண்டும் அது இருக்க வேண்டிய நிலையில் நிலை நிறுத்துவதற்காக அவன் மனித உருவில் இந்த உலகிற்கு வந்தே ஆகவேண்டும். அதனால்தான் அவன் கூறினான்,

 “பரித்ராணாய ஸாதூனாம் வினா~hய ச துஸ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்று
 (அறவோர்களை காக்கவும், அரக்கர்களை அழிக்கவும், தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்தவும் ஒவ்வொரு யுகத்திலும் என்னையே நான் படைத்துக்கொள்கிறேன்).
த்ராணா என்றால் ஒருவரை ஆபத்தில் இருந்து காப்பாற்றுதல் என்று பொருள், இன்று ஒருவரை நீங்கள் காப்பாற்றுகிறீர்கள் என்றால் அப்படி காப்பாற்றுகின்ற அந்த செயலுக்கு “த்ராணா” என்று பெயர். ஆனால் அவருக்கு நாளை மீண்டும் ஆபத்து வரலாம். அந்நிலையில் அவருக்கு இனிமேல் ஆபத்தே இல்லை என்ற நிலையை நீங்கள் தந்தால் அந்த செயலுக்கு “பரித்தராணா” என்று பெயர். ஆனால் அத்தகைய பாதுகாப்பை இந்த உலகில் வாழும் உயிர்களுக்கு பரம்பொருளால் மட்டுமே, இறைவனால் மட்டுமே, இந்த அகிலத்தைப் படைத்த ப்ரஹ்மத்தால் மட்டுமே தர முடியும்.
சரி, அவன் எதற்காக இந்த பஞ்ச பூத காரணிகளோடு தொடர்புடையவனாக வரவேண்டும்? காலம், இடம், நபர் என்ற அடிப்படை சார்பியல் காரணிகளின் எல்லைக்குள் எதற்காக அவன் வரவேண்டும்? இதற்கு காரணம் என்ன? இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது.
முதலாவது காரணம்: உறவில்லாதவனாக இருக்கின்ற அவனை, மனிதர்கள் தொடர்புகொள்கின்றபோது மனிதனுடைய அறிவு வேண்டுமானால் திருப்தி அடையலாம், ஆனால் மனித இதயம் விரும்புவது ஒரு நெருக்கமான உறவைத்தான், நெருக்கமான பாசத்தைதான், மிகவும் மனதிற்கு பிடித்தமான ஒன்றைதான். அதற்காக, அவனுடைய அந்தப் பிள்ளைகளை திருப்தி செய்வதற்காக, மகிழ்விப்பதற்காக, இந்த சார்பியல் காரணிகளின் எல்லைக்குள் அவன் மனித உருவில் வருகிறான். மனிதர்களின் இறைவனாக வருகிறான். அப்போது என்ன நடக்கிறது? பரம்பொருளாய் இருப்பவன் தாரக ப்ரம்மாவாக மாறுகிறான்.
 இரண்டாவது காரணம்: படைக்கப்பட்ட இந்த உலகில், இந்த ப்ரபஞ்சத்தில் ஒவ்வொரு முன்னேற்றமும், மோதல்களாலும் இணைதல்களாலும்தான் நடைபெறுகிறது. இதில் வருகின்ற தடைகளையும் குறுக்கீடுகளையும் எதிர்த்து போராடி முன்னேறவேண்டுமானால், மனிதர்கள் போதுமான அறிவு பலத்தை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இந்த மனித சமுதாயம் முன்னேறுவதில் உதவக்கூடிய புதுமையான எதையும் மனிதர்களுடைய அறிவினால் செய்ய முடியாமல் தோற்றுப்போகின்றபோது, சீரழிகின்ற அந்த மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுவதற்காக, அந்த பரமபுருஸன் காலம், இடம் மற்றும் நபர் என்ற காரணிகளைக் கொண்ட இவ்வுலக எல்லைக்குள் தன்னைத்தானே அவன் படைத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியே கிடையாது. இதுதான் இரண்டாவது காரணம்.
பிரிவினை உணர்வுகளும், தமோகுணமும் அதிக பலம் பெற்று, சமுதாயமே கீழ்நிலைக்கு போகின்றபோது அல்லது சீரழிவுக்கு போகின்றபோது, மனித உணர்வுகளையும், மனித ஓலங்களையும், மனித தேவைகளையும் பார்த்துக்கொண்டு பரமபுருஸனால் சும்மா இருக்க முடியாது. அப்போதுதான் அவன் தாரக ப்ரம்ம என்ற வடிவெடுத்து வருகிறான். “தாரக” என்றால், “விடுதலையளிப்பவன்” என்று பொருள்.
அப்படி அவன் வருகின்ற போது மனித வாழ்வின் அனைத்து சீர்கேடுகளையும் சரிசெய்து, மனிதர்கள் அடையவேண்டிய அடுத்த நிலையாகிய இறைநிலையை அடைவதற்கான அழகிய சூழ்நிலையை இந்த பூமியில் உருவாக்கித் தந்துவிட்டுச் செல்கிறாhன். மனிதர்கள் வாழ்வதற்கு அவசியமான அடிப்படைத் தேவைகளையும், மனித வாழ்வோடு தொடர்புடைய பண்பாடு, பக்தி நெறி, ஒழுக்கம், கலை, கலாச்சாரம், நாகரிகம், அன்பு, மனித நேயம், அரசியல், ஆன்மீகம், அறிவியல், மருத்துவம், கல்வி, பொருளாதாரம், மன நலம், உடல் நலம், போன்ற மனிதர்களோடு தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் அழகாக அமைத்துக்கொடுப்பதற்காக அவன் வருகிறான்.
ஆனால் அப்படி அவன் நிலைநிறுத்திய தர்மத்தின் நிலை மீண்டும் சரிந்து அதர்மத்தின் கை ஓங்கி இருக்கும்போது அந்த யுகத்தின் இறுதிக்காலம் வந்துவிட்டது என்பது அடையாளம்.  இந்த மாற்றத்திற்குரிய கால அளவைத்தான் யுகம் என்று சொல்கிறோம். ஒரு யுகம் என்பது 3500 ஆண்டுகள் என்று கணக்கிடப்படுகிறது. மேற்சொன்ன ஸ்லோகத்தில் “ஸம்பவாமி யுகே யுகே” என்று சொல்கிறான். அதாவது ஒவ்வொரு யுகத்திலும் நான் வருகிறேன் என்று கிருஸ்ணன் சொல்கிறான். அப்படியானால் நாம் இங்கே கவணிக்க வேண்டிய விஷயங்கள் மூன்று இருக்கிறது.
குஜராத் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட ராஜ அரண்மனைகள், மாளிகைகள் யாவும் ஆய்வாளர்களின் கருத்துப்படி 3500 ஆண்டுகளுக்கு முன்பு கிருஸ்ணன் வாழ்ந்த  துவாரகா நகரம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கிருஸ்ணன் வந்து 3500 ஆண்டுகள் ஆகிவிட்டன  என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது.
ஒரு யுகத்திற்கு 3500 ஆண்டுகள் என்றால், கிருஸ்ணன் வருவதற்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பாகவும், அதாவது  7000 ஆண்டுகளுக்கு முன்பும் அவர் பிறந்திருக்க வேண்டும். அப்படி பார்த்தால் 7000 ஆண்டுகளுக்கு முன் ஷிவன்தான் வந்தார் என்பதை சாஸ்திரங்களும் புராணங்களும் உறுதி செய்கின்றன. ஷிவனால் கொடுக்கப்பட்ட தந்த்ர சாஸ்திரத்தின் காலமும் இந்த உண்மையை நமக்குச் சொல்கிறது. 7000 வருடங்களுக்கு முன்னால் தோன்றிய ஷிவனும் அந்த நாளில் இந்தியாவின் பூர்வீக குடிமக்களாகிய திராவிடர், இற்றும் இந்தியாவுக்குள் வந்த ஆரியர் மற்றும் மங்கோலியர் ஆகிய மூன்று இனங்களுக்கிடையே இருந்த பயங்கரமான மோதல்களையும் சண்டைகளையும் நீக்கி மனித இனம் ஒன்றுதான் என்றும் அதில் வேறுபாடு கிடையாது என்று போதித்து, இயல், இசை, நாட்டியம், மருத்துவம், திருமண முறை, மனிதர்கள் குடும்பமாக வாழும் முறை, சமுதாய அமைப்பு, மனித வாழ்வின் குறிக்கோள் அந்தப் பரம்பொருளோடு மீண்டும் கலப்பதே என்ற ஆன்மீக உண்மை, யோக நியதிகள், நெறிமுறைகள், நடைமுறை பயிற்சிகள் போன்ற அனைத்து விஷயங்களையும் அன்றைய மனித சமுதாயத்திற்கு கற்றுத்தந்தார். சுருக்கமாக சொன்னால், இன்றைக்கு வாழ்ந்துகொண்டிருக்கின்ற இந்த மனித சமுதாயத்தையே வடிவமைத்த முதல் தாரக ப்ரஹ்மா ஷிவன்தான் என்பதும் உறுதியாகிறது. எனவே 7000 ஆண்டுகளுக்கு முன்பு ஷிவனைத் தவிர வேறு எந்த மாமனிதரும் இந்த மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் அதாவது உடல், மனம் மற்றும் ஆன்மீகம் ஆகிய மூன்று நிலைகளுக்குக்கான முன்னேற்றத்திற்கும் தீர்வு தரவில்லை என்பதால் அன்றைக்கு ஷிவன் என்ற பெயரில் வந்தவரும் தாரக ப்ரஹ்மாதான் என்று உண்மை தெளிவாகிறது. 3500 ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்ரீ கிருஸ்ணன்,  ஒவ்வொரு யுகத்திலும் நான் பிறப்பேன் என்று சொன்ன வார்த்தை உண்மைதான் என்பது தெளிவாகிறது.
அப்படியானால் ஸ்ரீ கிருஸ்ணன் பிறந்து 3500 ஆண்டுகள் முடிந்துவிட்டதால், மீண்டும் அவன் மனித வடிவில் பிறந்திருக்க வேண்டும் என்பதை உளவியல் ரீதியாகவும் ஆன்மீக அறிவினாலும் ஒப்பிட்டு பார்த்து ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதாவது இன்றைய காலகட்டத்தில், நிச்சயமாக அந்த தாரக ப்ரஹ்மா மீண்டும் பிறந்திருக்க வேண்டும் என்பது சரியான கணக்காகத்தான் இருக்க முடியும்.
இங்கே ஒரு விஷயத்தை நாம் ஒதுக்கிவிட முடியாது, அதாவது இதற்கு முந்தய இரண்டு யுகங்களிலும் அவன் மனிதனாகப் பிறந்திருந்தாலும் அவன் உயிர் வாழ்ந்த காலத்தில் யாருமே கஅவனை இறைவன்தான் என்று அடையாளம் கண்டுகொள்ளவில்ல. ஷிவனுடைய காலத்தில் அவரோடு கூட இருந்த ஷிவகணங்கள் என்று சொல்லக்கூடிய மிகச்சிலர் மட்டுமே அவரை தாரக ப்ரஹ்மா என்று உணர்ந்தனர். அவருக்குப்பின்; ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனிதர்கள் அவரைப் தெய்வமாக வழிபடத் தொடங்கினார்கள். குறிப்பாக புராண காலத்திற்குப் பிறகுதான், அதாவது ஏறத்தாழ 1700 ஆண்டுகளுக்கு முன்புதான் மனிதர்கள் மற்ற தெய்வங்களோடு ஷிவனையும் ஷிவலிங்க வழிபாட்டையும் பின்பற்றினார்கள்.
கிருஸ்ணர் வாழ்ந்த காலத்தை எடுத்துக்கொண்டாலும், அவர் கோகுலத்தில் வாழ்ந்த காலத்தில் அவரோடு பழகிய கோபியர்கள்(கோபியர் என்பது பெண்பாலை குறிப்பது அல்ல என்பதை மனதில் கொள்ளவும்) மற்றும் பஞ்ச பாண்டவர்கள் மற்றும் விதுரர் போன்ற ஒரு சிலர் மட்டுமே அவரை இறைவன் என்று புரிந்துகொண்டார்கள், அவருடைய போதனைகளை பின்பற்றினார்கள். மற்றவர்கள் அவரை ஒரு மாயாவி என்றும் மாயஜாலங்கள் தெரிந்தவன் என்றும்தான் எண்ணிக்கொண்டிருந்தார்கள். மனிதர்கள் பின்பற்ற வேண்டிய கர்ம யோக நெறி, ஞான யோக நெறி மற்றும் பக்தி யோக நெறி ஆகியவற்றின் தொகுப்பாகிய “பகவத் கீதை”யை ஸ்ரீ கிருஸ்ணன் தந்திருந்தபோதும் அதை ஒரு புனித நூலாகத்தான் மதித்தார்களேயன்றி, நடைமுறை வாழ்வில் அவர் போதித்தவற்றை ஒரு சிலரைத் தவிர மற்ற பாமர மக்கள் இன்றுவரை பின்பற்றவது கிடையாது. இன்றைக்கும் புராணங்களில் சித்தரிக்கப்பட்ட, புராண ஆசிரியர்களின் கற்பனையில் சித்தரிக்கப்பட்ட தெய்வ உருவங்களை சிலைகளாக உருவாக்கி அதைத்தான் உண்மையான இறைவனின் வடிவம் என்று நம்பி வழிபடுகின்றனர். ஆனால் ஷிவனும் கிருஸ்ணனும் போதித்த நெறிகளை யாரும் பின்பற்றுவதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
இது ஒருபுறம் இருக்கட்டும், பரம்பொருளாய் இருக்கின்ற இறைவன் மனித வடிவில் வருவதற்கான இரண்டு காரணங்களை முன்னரே நாம் பார்த்தோம். அதாவது, அதர்மவாதிகளை அழித்து அவர்களுடைய பிடியில் இருந்து பாமர மனிதர்களையும்; பிற உயிர்களையும் காப்பாற்றி, தர்மவாதிகளின் கையில் ஒப்படைப்பதற்காகவும், இரண்டாவது காரணம், மனிதர்களின் இலட்சியப் பொருளாகிய இறைவனை கண்ணுக்குத் தெரியாத உறவாக வைத்துக்கொள்ள விரும்பாமல், கண்ணால் கண்டு, இதயம் விரும்புகின்ற ஒரு உறவாக பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் வாழுகின்ற பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவும் அவன் வருகிறான் என்பதை முன்பே  பார்த்தோம். இறைவனை தனிச்சொந்தமாக, தனிப்பட்ட உறவாக, தனது உறவாக, பிரித்துப்பார்க்க முடியாத உறவாக பார்க்கின்றவர்கள் எண்ணிக்கையில் மிகச்சிலரே. அவர்களே இவ்வுலகில் சித்தர்களாகவும், ஞானிகளாகவும், மகான்களாவும் வாழுகின்றவர்கள். அவர்கள் எண்ணிக்கையில் மிகச் சிலரே. அவர்களுக்கு மட்டுமே அவன் இறைவனாக காட்சி தருகிறான். மற்ற சாதாரண பாமர மனிதர்கள் இறைவனை புராணங்களில் சொல்லப்பட்ட கற்பனை உருவங்களாகத்தான் வழிபடுகின்றனர். அவர்களுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவானது வெறும் கொடுக்கல் வாங்கல் உறவு மட்டும்தான். அதாவது தங்களுடைய குறைகளை சொல்வதற்கும், தங்களுக்கு வேண்டியவற்றை கேட்பதற்காகவும் அதற்கு பதிலாக இறைவனுக்கு காணிக்கையாக எதையாவது கொடுக்கவும்தான்  தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர். அதனால்தான் இறைவன் மனித வடிவில் பிறந்தாலும் அவர்களால் அவனை அடையாளம் காண முடிவதில்லை. அவர்களுடைய தேவை இந்தப் புற உலகப் பொருள்கள்தான், இறைவன் அல்ல. ஆனாலும் அவர்களும் தன்னுடைய குழந்தைகள்தான், தான் படைத்த உயிர்கள்தான் என்பதாலும், அவர்களையும் காக்கின்ற பொறுப்பு அவனுக்கு இருப்பதாலும் அவன் இவ்வுலகில் வந்து அதர்மத்தை அழிக்கிறான்.
அத்தகைய ஒரு மாமனிதனாக இந்த யுகத்தில் வந்திருப்பது யார் என்பதை உண்மையாக தெரிந்துகொள்ள விரும்புகின்ற இதயங்கள் அறிவின் உதவிகொண்டு தெரிந்துகொள்ள முயல்வதில் தவறொன்றும் இல்லை. ஒரு விஷயத்தை மட்டும் அறிவால் உரசிப்பார்த்தால் கூட போதும், அதாவது எப்போதெல்லாம் இறைவன் மனித வடிவில் வருகின்றானோ, அப்போது அவன் வெறும் ஆன்மீக சொற்பொழிவுகளை தந்துவிட்டு ஆசிர்;வாதம் அளிக்கின்ற மனிதனாக வருவதில்லை. இந்த உலகில் வாழுகின்ற எல்லா மனிதர்களுக்கும் தர்மத்தின் அடிப்படையில் வாழுகின்ற முறை, உரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை அவன் உருவாக்கித் தருகின்றான். மனித வாழ்வோடு தொடர்புடைய அனைத்து துறைகளிலும் உள்ள சீர்கேட்டை சரிசெய்து, அதற்கு எதிராக வரும் அதர்ம சக்திகளை அழித்து ஒரு பாதுகாப்பான சமுதாய அமைப்பை உருவாக்குகிறான். கல்வி, கலாச்சாரம், விஞ்ஞானம், சமூகவியல், தொல்லியல், மனிதநேயம், இறையன்பு, தன்னலமற்ற தொண்டு, ஆன்மீக முன்னேற்றத்திற்கான வழிமுறை போன்ற அனைத்திற்கும் அவன் வழிகாட்டியாக வருகின்றான். எனவே அத்தகைய பண்முக ஆற்றல்கொண்ட மாமனிதர் இன்றைய உலகில் யாரேனும் தோன்றி இருக்கின்றாரா என்று தேடவேண்டிய பொறுப்பு இன்றைய மனித சமுதாயத்திற்கு இருக்கிறது. அவனை அடையாளம் காண விரும்புகின்ற மனிதர்களுக்கு இருக்கிறது. என்னுடைய குறிப்புகள், நான் தருகின்ற ஆதாரங்கள், அடையாளங்கள், அனுபவங்கள், ஆய்வுகள் அனைத்தும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த “ஆனந்த மார்க பேரானந்தப் பாதை” என்ற தமிழ் "யூ ட்யூப்" சேனலை தொடங்கியுள்ளேன். என்னுடைய குருவிடத்தில் அத்தனை ஆற்றல்களையும் நான் அடையாளம் கண்டுகொண்டதை, இறைவன் மனித உருவில் வந்துள்ளதை நான் கண்டுகொண்டதை, என்னைப்போலவே சத்குருவையும் இறைவனையும் தேடிக்கொண்டிருக்கின்ற இதயங்களோடு பகிர்ந்துகொள்வதற்காகவே இதை நான் தொடங்கியுள்ளேன்;. நீங்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் இணையதளத்தில் ஆனந்த மார்கத்தைப் பற்றி தேடினாலும் நிறையவே தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் ஆங்கிலம் படிக்கத் தெரியாத, புரியாத மக்களுக்காகவும், தமிழ்மட்டுமே தெரிந்த மனிதர்களுக்கு இந்த உண்மைகள் தெரிந்தாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என் சத்குருவின் படைப்புகளை, தாரக ப்ரஹ்மத்தின் படைப்புகளை தமிழ்மொழியில் தந்து உதவுவதில் மகிழ்வடைகிறேன்.
ஆனந்த மார்கம் என்ற ஆன்மீக பேரியக்கம் 1955ம் ஆண்டில் ஸ்ரீ ஸ்ரீ ஆனந்தமூர்த்தி என்றும் “பாபா” என்றும் உலகம் முழுதும் இருக்கின்ற பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற என்னுடைய சத்குருவால் துவக்கப்பட்டது. இன்று பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண் மற்றும் பெண் துறவிகளைக் கொண்ட இந்த இயக்கம் சத்குருவின் போதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணியிலும் அரும்பணி ஆற்றுகின்றனர். இந்த இயக்கத்தின் மத்திய அலுவலகம் மேற்கு வங்கத்தில், பகலதா (Pழு). ஆனந்த நகரில் இயங்கி வருகிறது. 1955ல் தொடங்கி 1990 அக்டோபர் மாத இறுதிவரை 35 ஆண்டுகளாக அவர் தந்த போதனைகள், சொற்பொழிவுகள், குறிப்பாணைகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஆங்கில புத்தகங்களின் பட்டியல் கீழே கொடுத்துள்ளேன். இன்னும் பெங்காளி மற்றும் இந்தி மொழிகளில் உள்ள அவருடைய சொற்பொழிவுகள் ஆங்கில வடிவம் பெறாததால் அவை ஆங்கிலத்தில் அச்சிடப்படவில்லை. கல்வி, கலை, கலாச்சாரம், மருத்துவம், வேதாந்தம், உளவியல், அறிவியல், ஆன்மீகம், பொருளாதாரம், தொழில் வளம், வேதியல், பூகோளம், வரலாறு என்று பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். அத்தனை துறைகளிலும் இதுவரை உலகில் எவரும் தராத தீர்வுகளை சத்குரு ஸ்ரீஸ்ரீ ஆனந்த மூர்த்தி அவர்கள் தந்துள்ளார்கள். இதுவரை தோன்றிய மனிதர்களில் இத்தனை பரிமாணங்களைக் கொண்ட ஒரு மனிதரை இந்த உலகம் பார்த்ததுண்டா என்பதை ஆராய்ந்து, இந்த மனித உருவம் சாதாரண மனிதரல்ல என்பதை உணரவேண்டியது உங்களுடைய விருப்பு மற்றும் பொறுப்பு என்று சொல்லி இதற்குமேல் விளக்கம் தருவது நேரத்தை விரயம் செய்வதாகிவிடும் என்பதால் ஆர்வமுள்ள சகோதர சகோதரிகள் இந்த சேனலில்  கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை புரிந்துகொண்டு தெளிவடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விளக்கங்கள் தேவைப்பட்டாலோ விபரங்கள் தேவைப்பட்டாலோ அணுகவேண்டிய இணையதள முகவரி arundev30.1955@gmail.com மற்றும் கீழே தரப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளவும். இந்த சேனலில் தரப்படுகின்ற விஷயங்கள் எதுவும் யாருடைய மனதையும் உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்தில் தரப்படவில்லை என்பதையும். பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
                    என்றும் அவன் சேவையில்,
அன்புடன்
அருண்குமார்

வாட்ஸ் அப் எண் 9380851222
நேரம் மாலை 5 முதல் முதல் 7 வரை

நன்றி🙏

No comments:

Post a Comment