Monday, 12 October 2020

கிருஷ்ணன் ஒரு போதும் பால்காரிகளின் வீட்டில் வெண்ணெயைத் திருடவில்லை. 
-------------------------------------------------------------------------------------------------------------------------
" ஹரத்தி பாபானீத்யர்த்தே ஹரி ". ' ஹரண் ' என்றால்  ' திருடுவது '. அதனால் ஹரி என்றால் " திருடுபவன் " என்று பொருள். இது என்ன விந்தை! ஹரி எதற்காக திருட வேண்டும்? இது இயம நியமத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு புறம்பாக இருக்கின்றதே! இது மிகவும் தவறாயிற்றே! அவன் இந்த கொள்கைகளை மீறி நடப்பான் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படியானால் அவன் எதற்காக இதைச் செய்கிறான்? நிச்சயமாக பரமபுருஸன் தான் படைத்த உயிர்கள் யாவும் செல்வ செழிப்போடும், நலமோடும் வாழவேண்டும் என்றுதான் விரும்புகின்றான். மனிதர்கள் ஒவ்வொரு பிறவியிலும் பாவங்களை சேர்த்துக்கொண்டே இருக்கின்றனர். அவற்றை கழிப்பதற்காக இருபது பிறவிகளாவது  எடுத்தாக வேண்டும். அப்படியென்றால் மனித இனத்தின் எதர்காலமே இருண்டுபோய் கிடக்கும் என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதானா? ஒரு பிறப்பில் செய்த பாவங்களின் சுமையே சுமக்க முடியாத பாரமாய் இருக்கின்றபோது, இருபது பிறவிகளாக சேர்த்து வைத்திருக்கின்ற பாவங்களை சுமப்பது எத்தனைத் துன்பமானது என்று கற்பனை செய்து பாருங்கள். மனிதர்களால் இத்தனை பெரிய சுமையை சுமக்க முடியும் என்று எப்படி நம்மால் எதிர்பார்க்க முடியும்?
இங்கே விமோக்ஷனத்திற்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதுதான் பரமபுருஸன். அவன் தன்னுடைய அன்புக்குரிய பிள்ளைகள் மீது ஆழ்ந்த அக்கரை கொண்டுள்ளான். இந்த நிலையில் அவன் என்ன செய்கிறான்? தன்னுடைய பக்தர்களிடம் அவன் சொல்கிறான், " என் குழந்தைகளே, உங்களுடைய பாவங்களை என்னிடத்தில் கொடுத்துவிடுங்கள், இல்லையென்றால் உங்களுக்கு எதிர்காலமே கிடையாது. இத்தனைப் பெரிய பாவச் சுமைகளை எத்தனை பிறவிகளுக்குத்தான் உங்களால் சுமக்க முடியும்? உங்களுடைய சுமையை என்னிடத்தில் தந்துவிடுவதுதான் நல்லது " என்று சொல்கிறான். சரி, அப்படி பரமபுருஸன் கூறினாலும் பக்தர்கள் தங்களுடைய பாவச் சுமையை பகவானிடம் கொடுத்துவிட சம்மதிக்கிறார்களா என்பதுதான் இங்கே எழுகின்ற கேள்வி. இல்லை, அவர்கள் கொடுக்கமாட்டார்கள். அதற்கு மாறாக அவர்கள், " நாங்கள் உனக்கு இனிப்புகளை தருவதற்குத் தயாராக இருக்கிறோம், ஆனால் எங்களுடைய பாவங்களை எப்படி உன்னிடம் தரமுடியும்?, மலர் மாலைகளை எங்களால் தர முடியும் ஆனால் பாவங்களைத் தர முடியாது " என்று கூறுகிறார்கள். எந்த பக்தனும் இதைச் செய்ய ஒத்துக்கொள்ள மாட்டான். எப்போதாவது இதைச் செய்யலாம் என்ற எண்ணம் ஒரு பக்தனுடைய மனதில் தோன்றினாலும் அவனோ அல்லது அவளோ நிச்சயமாக " இல்லை, இல்லை என்னால் என்னுடைய பாவங்களைத் தர முடியாது " என்றே சொல்வார்கள். ஆனாலும் இங்கே உண்மை என்னவென்றால், பகவான் பக்தர்களுக்குச் சொந்தமானவன். ஆகையால் அவர்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு எது தேவையோ அதை நிச்சயமாகச் செய்வான். அதனால் அவர்களுடைய பாவங்களை திருடிக்கொள்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியே கிடையாது. ஆகையால் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களுடைய பாவங்களை எடுத்துக்கொள்கிறான். மற்றவர்களுக்குச் சொந்தமான பொருளை அவர்களுடைய அனுமதி இல்லாமலேயே எடுத்துக்கொள்கின்ற செயலை நாம் என்னவென்று சொல்வோம். திருட்டு என்றுதானே சொல்வோம். எனவே அவன் திருடுகிறான், பாவங்களைத் திருடுகிறான். அதனால்தான் அவனை ஹரி என்று சொல்கிறோம். சரி, பாவங்களைத் திருடியபிறகு பக்தர்களுக்கு என்ன நடக்கிறது? அவர்களுடைய மனம் தூய்மையாகிறது. பொதுவாகவே மனித மனத்தில் பல்வேறு குறைபாடுகளும் பலவீனங்களும் இருக்கும். ஆனால், மனிதர்கள் தங்களுடைய அறிவைத் தூய்மையாக்கி, ஆன்மீகப் பயிற்சிகளைச் சரியாக செய்து வந்தார்களேயானால் அவர்களுடைய மனம்   மேல் நிiலையை நோக்கிச் செல்லும். அதாவது ஜடநிலையிலிருந்து நுண்ணிய நிலையை நோக்கிச் செல்லும். உதாரணத்திற்கு வெண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். தயிரை கடைகின்றபோது அதனுடைய முக்கிய சாரமாகிய வெண்ணெயானது மோர் பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. அதுபோலத்தான் பாவங்கள் திருடப்பட்ட பிறகு மனத்தின் உண்மையான சாரமாகிய ஆத்மாவானது அந்த மனத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. அதனால்தான் ஹரியை " வெண்ணெய் திருடன் " என்று விளையாட்டாக அழைப்பார்கள். இதை அப்படியே சொல்லின் பொருளாக பார்ப்பது தவறு. கிருஷ்ணன் ஒரு போதும் பால்காரிகளின் வீட்டில் வெண்ணெயைத் திருடவில்லை.

🌷ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி🌷

(ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து)

 தத்வபாவாத் என்றால் என்ன?

👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺

தத்வபாவாத் என்றால்; சமஸ்கிருதத்தில் தத் என்றால் அது என்றும் அதனோடு “த்வ” என்ற பிற்சேர்க்கை சேரும்போது அது ஒரு பண்புப் பெயராக மாற்றம் அடைகிறது. எனவே 'தத்வ' என்றால் 'அதுவாதல்' என்று பொருள். இங்கே அது என்பது  ப்ரஹ்மத்தை குறிக்கிறது. ப்ரஹ்ம என்பது ஒரு பொதுப்பால் ஆகும். பரம புருஸன், அதாவது மெய்யறிவு தத்துவம் என்பது ஆண்பால் ஆகும். பரம ப்ரக்ருதி, அதாவது இயக்க தத்துவம் பெண்பால் ஆகும். ப்ரஹ்ம என்பது பொதுபால் ஆகும். இங்கே அதுவாதல் என்றால் ப்ரஹ்மமாக ஆதல் என்று பொருள். தத்வபாவாத் என்றால், உலகியல் எந்த பணிகளை செய்யும்போதும், நீங்கள் அந்தப் பொருளை ப்ரஹ்மமாக பாவிக்க வேண்டும். அதேபோல மனதில் எதை நினைத்தாலும் உங்களுடைய அந்த எண்ணத்தின் பொருளை ப்ரஹ்மமாக பாவிக்க வேண்டும். இதுதான் தத்வபாவாத் என்பது.


🌷 ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌷


(சுபாஷித சங்ரஹ பாகம் 18ல் இருந்து)

Sunday, 11 October 2020

 அனுதியானம் என்றால் என்ன?

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 


தியானத்தின் எல்லைக்குள் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று தாரணா மற்றொன்று த்யான. புறத்தில் உள்ள ஒரு பொருளை உங்களுடைய மனதின் எல்;லைக்குள் பிடித்து வைக்க முயலுகின்ற செயலுக்கு தாரண என்று பெயர். எனவே தாரணாவில் அசைவற்ற ஒரு சக்தி இருக்கிறது. ஆனால் மனதினுள் ஏதேனும் ஒன்று நகருகின்றபோது, அதாவது அந்த நகரும் பொ்ருளை, அந்த நகர்தலை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான், அல்லது தொடர்வதுதான்   தியானம் என்பது. எனவே தியானத்தில் ஒரு இயக்க சக்தி இருக்கிறது.


 தியானக்கிரியா என்பது வெல்லப்பாகில் உள்ள நூலிழை போன்றது. வெல்லப்பாகை ஊற்றும்போது ஒரு நூல் இழை உருவாகிறது. அதில் ஒரு ஆற்றல் இருக்கிறது, அந்த நூலில் ஒரு இயக்கம் இருக்கிறது. ஆனால் கண்ணுக்கு அது செயலற்றதாக தெரிகிறது. தியானக்கிரியாவும் அதுபோலத்தான். புரிகிறதா உங்களுக்கு?

அனுதியானம் என்றால் என்ன? அபித்யானம் என்றால், நீங்கள் பரம்பொருளை உங்களுடைய தியானப் பொருளாய் ஏற்றுக்கொண்டீர்கள், ஆனால் உங்களுடைய இறைவன் உங்களை வேண்டாம் என்று சொல்கிறான், உதாரணமாக நீங்கள் ஒரு பாவி, அதனால் உங்கள் இறைவனை நீங்கள் அடைவதை அவன் விரும்பவில்லை. அவன் உங்களை விட்டு தூரமாக செல்ல முயற்சிக்கிறான். ஆனால் இந்த இடத்தில் அவனை உங்கள் மனதால் விரட்டி பிடிக்க வேண்டும். இந்த மனதால் ஓடி பிடிக்கின்ற செயல்தான் அனுத்யானம் என்பது. நீங்கள் “ஓ என் இறைவா, நான் ஒரு பாவியாக இருக்கலாம் ஆனால் நான் உன்னை விடமாட்டேன், உன்னை பிடித்தே தீருவேன்” என்று சொல்ல வேண்டும். இத்தகைய மனநிலை ஏற்படுகின்றபோது அதைத்தான் அனுத்யானம் என்று சொல்கிறோம். எனவே இந்த அனுத்யானம் இல்லாமல் அவனை அடையவே முடியாது.


🌷ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி🌷


(சுபாஷித சங்ரஹ பாகம் 18ல் இருந்து)

 ப்ரணிதான என்றால் என்ன? 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

ப்ரணிதான என்றால் மனதின் எல்லா இயல்பூக்கிகளையும் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு கொண்டு வந்து, அதாவது மனிதனுடைய மனதின் முழு அமைப்பையும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவித்து, அந்த குவிந்த மனத்தை அந்த பரம்பொருளை நோக்கி செலுத்துவது. இப்படி குவிக்கப்பட்ட மனதின் இயக்கத்துக்குத்தான் ப்ரணிதான என்று பெயர். ப்ரணிதான என்பது ஒரு சமஸ்கிருத பெயர்சொல் ஆகும். இதுதான் ப்ரணிதான என்பதன் உளவியல் ரீதியான விளக்கம். ஆனால் நடைமுறையில் ப்ரணிதான என்றால், அதில் ப்ரணிதான மூல ஓசையின் சந்தத்தோடு மனதின் சந்தமும் இணைந்திருக்க வேண்டும். மூலஓசையின் சந்தம் மட்டும் இருந்தால் அதற்குப் பெயர் ஜபக்கிரியா. ஆனால் அந்த மூலஓசையின் சந்தத்தோடு மனதின் சந்தமும் ஒத்திசைந்து இருந்தால், அதற்குப் பெயர்தான் ப்ரணிதான. உதாரணமாக, நீங்கள் ராம, ராம, ராம, ராம என்று சொல்கிறீர்கள், இதற்குப் பெயர் ஜபக்கிரியா. ஜபக்கிரியாவில் மூன்று வகை இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.  ராம, ராம, ராம - இந்த ஓசைக்கு வாச்சனிக ஜப என்று பெயர். அதாவது சத்தமாக உச்சரிப்பது. அடுத்த வகையான ஜபத்தில்,  ராம, ராம, என்று மெதுவாக சொல்வது, நீங்கள் அந்த ஓசையை உச்சரிக்கிறீர்கள், உங்களால் மட்;டும் அந்த ஓசையை கேட்க முடிகிறது, ஆனால் மற்றவர்களால் அந்த ஓசையை கேட்க முடியாது. இதற்குப் பெயர் உபாம்சு ஜப. மூன்றாவது ஜபமானது, மனதிற்குள்ளே உச்சரிப்பது. அது உங்களுக்கு கேட்கிறது, உங்களுடைய மனதின் காதில் கேட்கிறது, உங்களுடைய உடலின் காதில் கேட்காது. இதற்குப் பெயர் மானசீக ஜப. மானசீக ஜபம்தான் மிகச் சிறந்தது. ஆனால் சாதனா பயிற்சியில் மோட்சத்தை அடைவதில் இந்த ஜபக்கிரியா பெரிய அளவில் உதவாது. அதனால்தான் தந்த்ரவில் கீழ்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது.


உத்தமோ ப்ரஹ்ம சத்பாவோ மத்யமா த்யான-தாரணா

ஜபஸ்துதிஹ் ஸ்யததாமா மூர்த்திபூஜா தமாதமா

என்று. 

மிகச் சிறந்த முறை ப்ரஹ்ம சத்பாவ முறைதான். இரண்டாவது இடம் தாரணா மற்றும் தியானம், மூன்றாவது இடம் ஜப ஸ்துதி, இது அதம ஆகும். கடைசி இடத்தில் இருப்பது மூர்த்தி பூஜா அதாவாது சிலை வழிபாடு. இது அதமாதம ஆகும். இங்கே விஷயம் என்னவென்றால், ஜபக்கிரியாவில் மூலஓசையின் சந்தம் மட்டும்தான் இருக்கிறது, ராம, ராம, ராம, ராம.  ஆனால் நான் சொன்னேன் அல்லவா? ப்ரணிதானத்தில் இந்த மூலஓசையின் சந்தம் மனதின் சந்தத்தோடும் ஒத்திசைந்து இருக்க வேண்டும் என்று. அதாவது மனதுக்குள் ராம, ராம, ராம என்ற ஓசையை உச்சரிக்கிறீர்கள் அதே சமயம் ராமனைப் பற்றியும் சிந்திக்கிறீர்கள். இதில் ஒத்திசைந்த நிலை பராமரிக்கப்படுகிறது. இந்த ஒத்த சமநிலை இல்லாத ஜபக்கிரியாவில் என்ன நடக்கும்? நீங்கள் ராம, என்று உச்சரிக்கிறீர்கள், அதாவது “ரா” என்ற எழுத்தை உச்சரித்த பிறகு அடுத்த எழுத்தாகிய “ம” என்ற எழுத்தை நினைக்கிறீர்கள். ராம! மீண்டும் “ம” எழுத்தை உச்சரித்த பிறகு நீங்கள் “ரா” எழுத்தை நினைக்கிறீர்கள். இப்போது உங்களுடைய ஜபக்கிரியாவின் அடுத்த நிலை “மரா” என்று ஆகிவிடுகிறது. அதாவது “ம” எழுத்தை உச்சரித்த பிறகு “ரா” எழுத்தை உச்சரிக்கிறீர்கள். இப்போது உங்களுடைய இஸ்ட மந்திரம் “மரா” என்று ஆகிவிட்டது, “ராம” அல்ல. இப்படி ஜபக்கிரியா செய்வதால் ஒரு பயனும் இல்லை. மனதின் சந்தத்தோடு ஒத்த சமநிலை ஏற்படுகின்றவரை அல்லது ஏற்படாதவரை இது பயன் இல்லாததே. எங்கே மூலஒசையின் சந்தத்திற்கும் மனதின் சந்தத்திற்கும் ஒத்த சமநிலை இருக்கிறதோ அதுவே ப்ரணிதான ஆகும். ஆனந்த மார்கத்தில் உங்களுடைய ஈஷ்வர ப்ரணிதானம் ஜபக்கிரியா அல்ல. அது ப்ரணிதானம் ஆகும். இந்த ப்ரணிதானம் தியானத்தின் எல்லைக்குள் வருவது, ஜபக்கிரியாவின் எல்லைக்குள் வருவது அல்ல.


🌸 ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌸


சுபாஷித சங்ரஹ பாகம் 18

 நீங்கள் எதை தியானிக்க வேண்டும்? 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

புன்னியம் மற்றும் பாவம் என்பதெல்லாம் கால எல்லைக்குள் நடைபெறுபவை. இவையெல்லாம் ஒரு மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவில் எதுவும் செய்துவிடமுடியாது.

உதாரணமாக, பல சிறுவர்கள் ஒரு சாலையில் சென்றுகொண்டிருக்கிறார்கள், அதில் ஒரு சிறுவன் சாக்கடையில் விழுந்துவிடுகிறான். அவனுடைய ஆடையும் அவனுடைய உடலும் சகதியாகிவிட்டது. அந்த வழியில் செல்லுகின்ற மற்றவர்கள் வேண்டுமானால் அந்த பையனைப் பார்த்து சிரிக்கலாம், ஆனால் அந்த பையனுடைய தந்தை அவனை அந்த நிலையில் பார்க்கும்போது அவர் என்ன செய்வார்? அவர் தன்னுடைய சொந்த மகனைப் பார்த்து சிரிப்பாரா? மாட்டார், மாட்டார் சிரிக்கமாட்டார். அவர் என்ன செய்வார்? அவரே அந்த சாக்கடையில் இறங்கி அவருடைய மகனை தூக்கி தன்னுடைய மடிமீது வைத்து அவனுடைய ஆடைகளை சுத்தம்செய்வார், அவனுடைய உடலை சுத்தம் செய்வார். அதற்குப்பிறகு அவனிடம், “என் மகனே, வழியில் கவனமாக நடக்க வேண்டும்” என்று அறிவுரை கூறுவார்.


பாவம் செய்தவர்கள் இந்த சாக்கடையில் விழுந்த பையனைப் போன்றவர்கள்தான். உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர், மேலானவர் மற்றும் கீழானவர், எல்லோருமே அவருக்கு சமமானவர்கள்தான். ஏனென்றால் சொர்கம் என்பதும் அவருடைய படைப்பே, நரகம் என்பதும் அவருடைய படைப்பே. அவர் சொர்கத்தில்தான் இருக்கிறார் என்று நாம் சொன்னால், அது சரியான வாக்கியம் கிடையாது. ஏனென்றால் அவர் நரகத்திலும் இருக்கிறார். அதனால் அவருடைய மகன்களும் அவருடைய மகள்களும் எப்போதுமே தனியாக இருப்பதில்லை. அவர் உங்களுடன் நரகத்திலும் இருக்கிறார். 


நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் மாபெரும் தந்தையின் பிள்ளை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு பாவி என்றோ, கீழானவர் என்றோ நினைக்கவே கூடாது. நீங்கள் ஒரு பாவி என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் பாவத்தை தியானம் செய்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்! அவ்வாறு பாவம் உங்களுடைய தியானத்தின் உருவமாய் இருக்கும்போது உண்மையிலேயே நீங்கள் ஒரு பாவியாக ஆகிவிடுவீர்கள். ஏனென்றால் ஒரு மனிதன் அவனுடைய அல்லது அவளுடைய எண்ணத்தின் பொருளாகவே ஆகிவிடுவான். “நான் ஒரு பாவி”, “நான் ஒரு பாவி” என்று எண்ணிக்கொண்டே இருந்தால் நீங்கள் உண்மையிலேயே பாவியாக ஆகிவிடுவீர்கள். உங்களுடைய மனப்பாங்கு எப்படி இருக்கவேண்டுமென்றால், உண்மையிலேயே நீங்கள் ஒரு பாவியாக இருந்தாலும் அதை மறந்துவிட்டு, “நான் மாபெரும் தந்தையின் பிள்ளை, நான் மாபெரும் தந்தையின் பிள்ளை” என்று எண்ண வேண்டும். இவ்வாறு நீங்கள் மாபெரும் தந்தையை தியானம் செய்துகொண்டே இருந்தால், நீங்கள் உங்கள் தந்தையோடு ஒன்றாய் கலந்துவிடும் நாள் ஒன்று நிச்சயமாக வரும். ஆனால் “நான் ஒரு பாவி”, “நான் ஒரு பாவி, என்னை காப்பாற்று, ஓ பரம தந்தையே என்னை காப்பாற்று என்று எண்ணிக்கொண்டே இருப்பது தவறான அனுகுமுறையாகும். அதற்கு பதிலாக, “நான் உன்னுடைய மகன், நான் உன்னுடைய மகள், ஓ தந்தையே என்னை உன் மடிமீது வைத்துக்கொள், நான் உன்னுடைய மகன், நான் உன்னுடைய மகள்” என்று சொல்ல வேண்டும்.


 உங்களுடைய அனுகுமுறை இப்படித்தான் இருக்க வேண்டும். எது உங்களுக்கு தேவையில்லையோ அதை நீங்கள் மறந்துவிட வேண்டும்.


🌷 ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌷


(ஆனந்த வச்சனாம்ருதம் 23ம் பாகத்திலிருந்து)

Thursday, 8 October 2020

 சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டிய தருணம் ஏற்கனவே வந்துவிட்டது

--------------------------------------------------------------------------------------------------------------------------

மனித வாழ்வு பல்வேறு வகையான பழக்க வழக்கங்களை கொண்டதாக உள்ளது. சாப்பிடுகின்ற மற்றும் குடிக்கின்ற பழக்கம், ஆடைகள் அணிகின்ற பழக்கம், ஆடிப் பாடுகின்ற, வீடுகளை கட்டுகின்ற, மருத்துவ சிகிச்சை செய்துகொள்கிற என்று பலவகையான பழக்கவழக்கம் உள்ள மனிதர்கள் உள்ளனர். இந்த பழக்க வழக்கங்கள் அனைத்தும் சேர்ந்ததுதான் கலாச்சாரம் என்பது. இதில் எதையாவது ஒன்றை மட்டும் கலாச்சாரம் என்று சொல்ல முடியாது. இவை அனைத்தும் சேர்ந்ததுதான் கலாச்சாரம் என்பது. மனித வாழ்வின் இத்தனை வெளிப்பாடுகளையும் அதாவது, நாட்டியம், இசை மருத்துவம், நாகரீகம் மற்றும் வாழ்வின் அனைத்து பகுதிகளையும் ஒரு ஒழுங்குமுறையில் கொண்டுவர சதாஷிவன் விரும்பினார். இது மாபெரும் மாற்றமாக இருந்தது, ஒரு புரட்சிகரமான மாற்றமாக இருந்தது. அதற்குமுன் இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்ந்ததே இல்லை. சாதாரண தலைவர்களாலோ அல்லது ரிஸிகளாலோ இதுபோன்ற எட்டிபிடிக்க முடியாத மாற்றங்களை கொண்டுவர முடியவில்லை. மாறிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களையும் மாற்றிக்கொள்கின்ற மனிதர்களுக்கு உதவ நினைக்கின்றவர்களை நான் “ ஸத்விப்ர ” என்று கூறினேன். ஆனால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்குகின்றவர்களை “ மஹாசத்விப்ர ” என்று சொல்வேன். மாற்றங்கள் ஏற்படுகின்ற சூழ்நிலைகளில் மிகச்சரியாக அனுசரித்து வாழ்வதற்கான வழிகளை மக்களுக்கு சரியாக காட்டி, சரியான பாதையில் வழிநடத்துபவர்கள்தான் சத்விப்ரர்கள்.

ஆனால் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திடுவது சத்விப்ரர்களின் பணி அல்ல, அது மஹாசத்விப்ரரின் கடமை. மஹாசத்விப்ர என்பது வேதாந்த சொல்லாகும். வேதங்களில் இவர் “ தாரக ப்ரஹ்ம ” என்று அழைக்கப்படுகிறார். சதாஷிவன் அத்தகைய ஒரு தாரக ப்ரஹ்ம ஆவார். அவர் வாழ்வின் அனைத்து பகுதிகளுக்கும் வழிகாட்டும் ஒரு ஆற்றல் மிக்க வழிகாட்டி. ஷிவனுக்கு பிந்தய காலத்தில் சமுதாய முன்னேற்றத்தின் வேகம் குறைந்து போனது. அது தன் இயக்க ஆற்றலை இழந்து சரிவை நோக்கிச் சென்றது. சமுதாய இயந்திரத்தின் பல்வேறு பாகங்கள் துரு பிடிக்க ஆரம்பித்தன. அந்த சூழ்நிலையில் சமுதாயத்தை முன்னே நகர்த்தி செல்வதற்கும் மக்களை சரியான பாதையில் வழிநடத்துவதற்கும் வல்லமை பொருந்திய மற்றொரு மாமனிதர் தேவைபட்டார். இவ்வாறு 3500 ஆண்டுகளுக்கு முன் மற்றொரு மஹாபுருஸனான ஸ்ரீ கிருஸ்ணர் பிறந்தார். அவரும் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்தார், சக்திமிக்க சமுதாய முன்னேற்ற அலைகளை அவர் புகுத்தினார்.

சதாஷிவன் மட்டும் தனியாகத்தான் சமுதாயத்தில் பெரும்பான்மையான மாற்றங்களை கொண்டுவந்தாரா என்று ஒருவர் கேட்கலாம். இல்லை நிச்சயமாக இல்லை! அவருக்கு உதவியாக நிறைய சாதகர்கள், பக்தர்கள், அறிவு மேதைகள் மற்றும் பாமர மக்களும் இருந்தனர். வேதாந்தத்தில் அவர்களை ஷிவனுடைய “ கணங்கள் ” என்று சொல்லி இருக்கிறார்கள்.  மற்ற கடவுள்களும் பெண் கடவுள்களும் பல்வேறு அணிகலன்களை அணிந்திருந்தனர், சிலர் காது வளையங்கள் மற்றும் கிரீடம் அணிந்திருந்தனர், மற்றவர்கள் சங்கு, தாமரை மற்றும் சக்கரம் போன்ற ஆயுதங்களை வைத்திருந்தனர். ஆனால் ஷிவனிடம் இருந்த ஆயுதங்களும் ஆபரணங்களும் அவருடைய பக்தர்கள் மட்டுமே. அவர்கள் சிறிதும் சோர்வின்றி அவருடைய குறிப்பாணைகளுக்கு ஏற்றவாறு பணி செய்தனர்.

சரி, ஸ்ரீ கிருஸ்ணரின் காலத்தில் என்ன நடந்தது? அவரும் சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றங்களை உண்டாக்கினார். புரட்சிகரமான அந்த பணியில் அவருக்கு உதவியாக இருந்தவர்கள் யாரும் புத்திசாலிகளும் அல்ல, அறிவு மேதைகளும் அல்ல, அல்லது அவர்கள் அனைவரும் வேத விற்பன்னர்களோ அல்ல. அவர்களுள் பலர் சாதாரண சமுதாய மக்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை, அவர்கள் அனைவரும் உண்மையான பக்தர்களாகவும் சமுதாய நன்மைக்காக ஸ்ரீகிருஸ்ணரின்(வ்ரஜகிருஸ்ணன்) குறிப்பாணைகளின்படி உண்மையாக உழைப்பவர்களாகவும் இருந்தனர். அவர்களுடைய சொத்து என்பது அவர்களுடைய இலட்சியமாகிய இஸ்ட தெய்வம்தான், அந்த கிருஸ்ணன் மீது உள்ள உண்மையான பக்தி மட்டும்தான். அவர்களுடைய பக்தியின் காரணத்தால்தான் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் வெற்றியாளர்களாக இருந்தனர். மக்கள் அவர்களுடைய அறிவைவிட உண்மை மற்றும் நேர்மையால்தான் சாதனைகளை புரிந்தனர்.

இந்த காலத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சமுதாயத்தில் இன்றைக்கு பல்வேறு வகையான பிரச்சனைகள் எழுந்துள்ளன.  இன்றைய சூழ்நிலைகளை சமாளிப்பதற்காக புது வகையான ஏற்பாடுகள் - மனம், உடல் மற்றும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. சமுதாயத்தின் சிறு சிறு ஓட்டைகளிலும் ஊழல் மற்றும் சுரண்டல் நுழைந்துவிட்டது. இந்த எதிர்மாறான சூழ்நிலையில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக, நேர்மையாளர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இந்தப் பணியில் வெற்றிபெற வேண்டுமானால், மக்கள் தங்களை முழுமையாக தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு தீய காரியத்தை செய்வதற்கு முன் எப்படி ஒருவர் தன்னை தயார் செய்துகொள்கிறாரோ அதே போல நல்ல காரியத்தை செய்வதற்காகவும் தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும். நல்ல மனிதர்கள் எப்போதும் நல்லதையே செய்வார்கள்.

ஒவ்வொரு செயலை செய்வதற்கு முன்பும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருக்கும். உண்மையில் அத்தகைய மிக நீண்ட ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. மாற்றம் என்பது இன்றைக்கு தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. இதற்கு மேலும் தாமதிப்பதற்கு நேரம் கிடையாது. ஸ்ரீ கிருஸ்ணர் பிறந்து ஏறத்தாழ 3300 ஆண்டுகள் கழிந்துவிட்டன, ஷிவபெருமான் பிறந்து ஏறத்தாழ 7000 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்றைய மனிதர்கள் அன்றைய மனிதர்களைப் போல தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். மனித சமுதாயத்தின் நலனை திரும்ப கொண்டுவருதற்காக, அவர்கள் ஒரு புதிய கொள்கையோடு, ஒரு புதிய யுத்தத்தை தொடங்க வேண்டும்.

கடந்த காலங்களில் அதாவது ஷிவனுடைய மற்றும் கிருஸ்ணருடைய காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தபோது, ஒரு புதிய வேதாந்தம், ஒரு புது வாழ்க்கை முறை, ஒரு புதிய வெளிச்சம், மக்களுக்கு முன்னேறிச் செல்வதற்கான ஊக்கத்தை தந்தது. அதனால்தான் அவர்களுடைய பணியை நம்ப முடியாத குறுகிய காலத்தில் அவர்களால் முடிக்க முடிந்தது. மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வருவதற்கு போராட்டம் என்பது – அது குறுகியதோ அல்லது நீண்டதோ, ஆனால் போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது. மனிதர்கள் ஒரு வல்லமை பொருந்திய மனிதரின் கீழ் நின்று போராடும்போது அந்த வேலை மிகக் குறைந்த காலத்தில் முடிந்துவிடும். அப்போது மக்கள் தீவிரமாக சிந்தித்து சமுதாயம் சந்தித்துக்கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனைகள் என்னென்ன என்பதை தீர்மானித்து, அதற்கு தீர்வு காணும் வழிகளையும் ஏற்பாடுகளையும் செய்வார்கள். அப்படி அவர்கள் தயார் ஆகிவிட்டால், வெற்றியை அவர்கள் மிக விரைவாக அடைந்து விடுவார்கள். 

இன்றைய மனித சமுதாயத்தை நாம் உலகலாவிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும், பிரித்து பார்க்கின்ற கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. பெரியதோ அல்லது சிறியதோ அனைத்து பிரச்சனைகளையும் நாம் தீர்த்தாக வேண்டும். மிகப்பெரிய பிரச்சனைகளை உடனடியாக தீர்ப்பதற்கான வேலைகளை ஆரம்பித்தாக வேண்டும். ஏனென்றால் சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டிய தருணம் ஏற்கனவே வந்துவிட்டது. நாம் அதிக தாமதம் செய்தால் இருளும் அதிகமாக சூழ்ந்து விடும். இன்றைக்குத் தேவையான ஒரு புதிய வேதாந்தம், ஒரு புதிய மனிதநேய கோட்பாடு, ஒரு புதிய சமூக-பொருளாதார சிந்தனை ஆகிய அனைத்தும் இந்த சமுதாய நலனை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஏற்கனவே வந்துவிட்டது. 

அதனால்தான் இனிமேலும் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று நான் சொல்கிறேன். பயனுள்ள செயல்களில் உங்கள் நேரத்தை செலவழியுங்கள்;. “ ஷுபஸ்ய ஷீக்ரம் அஸுபஸ்ய காலஹரணம் ” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு புதிய புனித பணியை துவங்குவதற்கு முன் நீங்கள் கிரஹ பலன்களையும் பஞ்சாங்கமும் பார்த்துக்கொண்டிருக்க தேவையில்லை, உடனடியாக துவங்குங்கள். ஆனால் எதாவது கெடுதல் உண்டாக்க கூடியதை செய்வதற்கு முன் அதை செய்வதற்கு எவ்வளவு தாமதம் செய்ய வேண்டுமோ அவ்வளவு தாமதம் செய்யுங்கள். கால தாமதம் ஏற்பட ஏற்பட, மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, அந்த தீய காரியத்தை நீங்கள் செய்ய வேண்டாம் என்று தீர்மானித்து விடுவீர்கள்.

உங்கள் புனித பணியை செய்கின்றபோது உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இந்த நடைமுறை உலகில், இந்த சார்பியல் உலகில் மிகவும் மதிப்புள்ளது நேரம்தான். ஒரு முறை நேரத்தை இழந்துவிட்டால் அது திரும்பவும் வராது. ஆதனால் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்களுக்கு வளம் உண்டாகட்டும், உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும். 


🌷 ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌷


 (ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து)

 பாவம், புண்யம், ப்ரத்யவாய, பாதகம், அதிபாதகம், மஹாபாதகம் என்பதன் விளக்கம்: 

---------------------------------------------------------------------------------------------------------------------------

"புண்ணியம்" என்றால் என்ன? புண்ணியம் என்றால் ஒருவருடைய உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றுக்கும் நன்மை உண்டாக்கக் கூடிய செயலே புண்ணியம் எனப்படுகிறது. ஒருவருடைய உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றுக்கும் தீமை விளைவிக்கக் கூடிய செயல் "பாவம்" என்று அழைக்கப்படுகிறது. புண்யம் மற்றும் பாவம் ஆகிய இரண்டுமே இரண்டு வகைப்படும். 

பாவத்தின் இரண்டு வகையில், ஒன்று பாதகம் மற்றொன்று ப்ரத்யவாய. செய்யக் கூடாத காரியத்தை ஒருவர் செய்தால், உதாரணமாக திருடுதல், பொய் பேசுதல் போன்றவற்றை செய்தால் அது பாதகம் எனப்படுகிறது. அதாவது மற்றவர்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய செயல் பாதகம் எனப்படுகிறது. ஒருவர் செய்ய வேண்டியதை செய்யத் தவறிவிட்டால், உதாரணமாக வரியவருக்கு உணவளிக்க தவறுவது அல்லது நோயுற்றோருக்கு சேவை செய்யாமல் இருப்பது போன்றவை " ப்ரத்யவாய " எனப்படுகிறது. உளவியலாரின் கருத்துப்படி இந்த ப்ரத்யவாய என்பது பாதகத்தைவிட கண்டனத்திற்குரியது.

பாதகம் என்பது மீண்டும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. உங்களுடைய செயல் மற்றவருக்கு பாதிப்பை உண்டாக்கிவிட்டதாக வைத்துக்கொள்வோம். சந்தேகமின்றி அது பாதகம்தான். ஆனாலும் அதனால் உண்டான  இழப்புக்கு ஈடாக பரிகாரத்தை பாதிக்கப்பட்டவருக்கு செய்துவிட்டால் அந்த செயல் பாதகம்   என்பதில் இருந்து  விடுபட்டுவிடுகிறது.  உதாரணமாக நீங்கள் எதையாவது திருடிவிடுகிறீர்கள். அதை அதற்குச் சொந்தமானவரிடமே சிறிது வட்டியோடு திருப்பித் தந்துவிட்டால்  அதற்கு மேலும் அதை பாதகம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அதற்குரிய இழப்பை நீங்கள் சரிசெய்துவிடுகிறீர்கள். ஆனால் சில இழப்புகளை உங்களால் ஈடு செய்யவே முடியாது. உதாரணமாக, நீங்கள் ஒருவருடைய விரலை துண்டித்து விடுகிறீர்கள், அதை உங்களால் திருப்பி பொருத்த முடியாது. அத்தகைய செயல் "அதிபாதகம்" என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் ஈடே செய்யமுடியாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கக்கூடிய காரியத்தை நீங்கள் செய்துவிட்டால், அதேசமயம் அது மற்றவர்களிடம் தீய பாதிப்புகளை உண்டாக்கக் கூடியதாகவும் இருக்குமேயானால் அத்தகைய செயல் "மஹாபாதகம்" என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக, ஒரு நேர்மையற்ற வியாபாரி கருமிளகோடு பப்பாளி விதைகளை கலப்படம் செய்கிறான். இரண்டு விதைகளும் ஒரேமாதிரி உள்ளதால் ஒருவராலும் இந்த இரண்டு விதைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது. இதைப்பார்த்து மற்ற வியாபாரிகளும் இந்த உதாரணத்தை பின்பற்றும்படி தூண்டப்படலாம். இப்படியே இந்தக் கலப்பட சுழற்சியானது தொடர்ந்துகொண்டே இருக்கும். இதுவே "மஹாபாதகம்" எனப்படுவது. ஒருவர் புண்ணிய காரியங்களுக்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்பணித்துக்கொள்வதன் மூலம் அதிபாதகத்திற்கு பிராயசித்தம் பெறலாம். இழப்பிற்கு ஈடு செய்வதன் மூலம் பாதகத்திற்கு பரிகாரம் செய்யலாம். ஆனால் மஹாபாதகத்திற்கு ஒருபோதும் பரிகாரமே கிடையாது. இது பாதகங்களிலேயே மிகவும் மோசமானது. இதற்காக ஒருவர் தன்னுடைய உயிரையே புனித காரியத்திற்காக அர்ப்பணம் செய்யவேண்டும். எந்தஒரு சுகத்தையும் தேடுதல் கூடாது. இராமாயண கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். இராமனோடு நடந்த யுத்தத்தில் இராவணன் தோற்கப் போகும் தருவாயில், அவனுடைய இறைவனாகிய, அவனுடைய ஆற்றலின் மூலப்பொருளாகிய   ஷிவபெருமானிடம்  வேண்டினான். ஆனால்  அவன் மற்றொருவருடைய மனைவியை அபகரித்ததன் விளைவாக ஷிவபொருமான் மிகவும் மனம் கசப்புற்று இருந்ததால் அவனுக்கு உதவ விரும்பவில்லை. இராவணனைக் காப்பாற்ற வேறு எவருமே இல்லை. இராவணன் வேறு ஒரு குருவின் சீடனாக இருந்திருந்தால் அவனுடைய உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் ஷிவபெருமானே அவனுடைய குருவாய் இருந்ததால் அவன் உயிரைக் காப்பாற்ற வேறு யாருமே இல்லை. வேதங்களில், " ஷிவே ருஸ்டே குருஸ்ராட்டா குரவோருஸ்டே நாகஷ்சன" என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஷிவன் ஒரு மனிதனிடம் கோபப்பட்டால் அந்த மனிதனுடைய குரு அவனை காப்பாற்றலாம். ஆனால் ஷிவனே குருவாய் இருந்தால் பிறகு அவனை யாராலும் காப்பாற்ற முடியாது . இவ்வாறு ஷிவனே இராவணனுடைய குருவாய்  இருந்ததால் ஷிவனுக்கு இராவணன்மீது கோபம் வந்தபோது இராவணனைக் காப்பாற்றுவதற்கு  யாருமே இல்லை.

ஷிவபெருமானிடம் அவருடைய மனைவியாகிய பார்வதி கேட்கிறாள், "இராவணன் உங்களுடைய பக்தனாயிற்றே, அவனை தயவு செய்து காப்பாற்றுங்கள்" என்று. ஆனால் ஷிவனால் எப்படி அவனை காப்பாற்ற முடியும்? இராவணன் ஒரு மஹாபாதகன். பார்வதி கூறினாள், "இராவணன் ஒரு அதிபாதகன்தானே" என்று ஆலோசனை கூறினாள். அதற்கு ஷிவபெருமான், "இல்லை, இராவணன் சீதையை ஒரு திருடனாய் வந்து அபகரித்திருந்தால் அவனை ஒரு அதிபாதகன் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அவன் ஒரு துறவியின் வேடத்தில் வந்து அபகரித்துவிட்டான்" என்றார். இது இச்சமுதாயத்தில் ஒரு தொடர் விளைவை உண்டாக்கிவிடும். எதிர்காலத்தில் எந்த ஒரு திருமணமான பெண்ணும் ஒருபோதும் இனிமேல் ஒரு துறவியை நம்பமாட்டாள். அவர்கள் ஒரு துறவியைப் பார்த்தால் மாறுவேடத்தில் மற்றொரு இராவணன் இருப்பதாகவே நினைப்பார்கள். அயோக்கியர்களும் துறவிகளின் ஆடையணிந்து இத்தகைய குற்றங்களை செய்வார்கள். உண்மையில் இன்றைக்கும் அவர்கள் இதை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய குற்றங்கள் காலமெல்லாம் தீய விளைவுகளை உண்டாக்கக்கூடியவை என்பதால் சந்தேகமில்லாமல் இது மஹாபாதகம்தான்| என்று கூறி இராவணனுடைய உயிரைக் காப்பாற்ற மறுத்துவிட்டார் ஷிவபெருமான். பார்வதி அப்போது, "அப்படியென்றால் நான் அவன் உயிரைக் காப்பாற்றுகிறேன்" என்றாள். " சரி நீ வேண்டுமானால் முயற்சி செய் ஆனால் நீ வெற்றியடையமாட்டாய்" என்றார் ஷிவபெருமான். பார்வதியும் அவ்வாறே இராவணனை காப்பாற்ற முயற்சி செய்து தோற்றுப்போனாள். 

பாவத்தில் இரண்டுவகை இருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். ஒன்று பாதகம் மற்றொன்று ப்ரத்யவாய. அதேபோல புண்யத்திலும் இரண்டுவகை உண்டு. ஒன்று ப்ரத்யக்ஸ புண்யம் மற்றொன்று அப்ரத்யக்ஸ புண்யம் - அதாவது நேரடியான புண்யம் மற்றொன்று மறைமுகமான புண்யம். பசியால் வாடுகின்றவர்களுக்கு உணவளிப்பதாலும், படுத்தபடுக்கையாய் கிடக்கின்ற நோயாளிகளுக்கு சேவை செய்வதாலும் ப்ரத்யக்ஸ அல்லது நேரடியான புண்;யம் ஒருவருக்கு கிடைக்கிறது. ஒருவர் செய்த சேவை தொடர் விளைவுகளை உண்டாக்கக்கூடிய தன்மையைப் பெற்றிருந்தால் மறைமுக புண்யத்தை அவர் பெறுகிறார். உதாரணம்: சமுதாயத்திற்கு தொண்டு, மரம் நடுதல் போன்றவை. வெய்யில் மற்றும் தூசி நிறைந்த பாதைகளில் ஆலமரங்களை நட்டுவைத்தால் அவை ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு, களைத்து வருகின்ற பயணிகளுக்கு நிழல் கொடுத்துக்கொண்டிருக்கும். இதுபோன்ற காரியங்களில் வருவது மறைமுக புண்யம். பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களும் உடலால் நலிந்தவர்களும் நேரடி புண்யத்தை பெறுவது கடினம். காரணம், அவர்களுடைய சாதகமற்ற சமுதாய சூழ்நிலைதான். இந்த நேரடி புண்யத்தை மிகச் சிலர்தான் பெறுகிறார்கள் என்பதுதான் உண்மை.  ஆனால் மறைமுக புண்யத்தை எல்லோராலும் பெற முடியும். முயற்சி செய்தால் நேரடி புண்;யத்தையும் எல்லோரும் பெற முடியும் என்பதும் உண்மைதான். பண வசதி இல்லாதவர்கள் உடலால் சேவை செய்யலாம், உடலால் வலிமையற்றவர்கள் அறிவுசார்ந்த சேவையை செய்யலாம். ஏதேனும் ஒரு வழியில் ஒவ்வொருவராலும் சேவை செய்ய முடியும். இதுதான் புண்யத்தைப் பற்றியும் பாவத்தைப் பற்றியும் உள்ள விளக்கங்கள். 


🌸ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி🌸


(ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து

 கெளசிகீ - மனம் விரிவடையும் நடனம் 

-------------------------------------------------------------------------------------------------------------------------

 மனிதர்கள் சில நேரங்களில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம், மேலும் அடிக்கடி அவர்கள் தங்கள் சாதனாவிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.  இந்த தடைகள் பெரியதாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.  உதாரணமாக, கல்லீரல் பிரச்சனை போன்ற சிறிய நோய்கள் அவ்வப்போது சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும், மேலும் இந்த வகையான தடைகளை நீக்குவதற்காக,  1978ம் வருடம், செப்டம்பர் 6ம்  தேதி நான் கெளசிகீ [“மனதின் விரிவாக்கம்”] நடனத்தைக் கண்டுபிடித்தேன். இந்த நடனம்  இருபத்து இரண்டு வகையான நோய்களை தீர்க்கும் மருந்து ஆகும். 


(1) இவை அனைத்தும் முதலில் புறச்சூழ்நிலைகளை சரிசெய்வதை உறுதிசெய்வதிலும், அதன்பிறகு அவை மனதின் உணர்வுகளை சரிசெய்வதற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளன.   இதன் விளைவாக பரமபுருஷன் வாழுகின்ற இடமாகிய ஆன்மா என்ற  புள்ளியில் மனதை குவிக்கவும் இது உதவுகிறது. 


 கெளசிகீ நடனத்தின நன்மைகள் பின்வருமாறு: 


1. இது தலை முதல் கால் வரை அனைத்து சுரப்பிகளையும் மற்றும் கால்களுக்கும் உடற்பயிற்சி தருகிறது. 


2. இது நீண்ட ஆயுளை அதிகரிக்கிறது.  


3. இது பிரசவத்தை எளிதாக்குகிறது. 

 

4. முதுகெலும்பை நெகிழ்வானதாக மாற்றுகிறது.  


5. முதுகெலும்பு, கழுத்து, இடுப்பு மற்றும் பிற மூட்டுவீக்கத்தை அகற்றுகிறது.  


6. முதுகெலும்பு, கழுத்து, கைகள் மற்றும் இடுப்பில் கீல்வாதத்தை அகற்றுகிறது.  


7. மனம் வலுவாகவும் கூர்மையாகவும் மாறுகிறது.  


8. மாதவிடாய் முறைகேடுகளை குணமாக்குகிறது.  


9. சுரப்பிகளின் சுரப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.  

10. சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாயில் உள்ள சிக்கல்கள் குணமாகிறது.  


11. இது கைகால்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.  


12. இது முகம் மற்றும் தோலுக்கு அழகையும் பிரகாசத்தையும் சேர்க்கிறது.  


13. இது தோல் சுருக்கங்களை நீக்குகிறது.  


14. இது சோம்பலை நீக்குகிறது.  


15. இது தூக்கமின்மையை குணப்படுத்துகிறது.  


16. இது மூர்க்கத்தனத்தை குணப்படுத்துகிறது.  


17. பயமனப்பான்மை அகற்றப்படுகிறது.  


18. நம்பிக்கையற்ற தன்மை நீங்குகிறது. 

 

19. இது சுய வெளிப்பாட்டிற்கும்  திறனை வெளிக்காட்டுவதற்கும் உதவுகிறது.  


20. முதுகெலும்பு வலி, மூலம், குடலிறக்கம், ஆண்களில் விரைவீக்கம், நரம்பு வலி, நரம்பு செயலின்மை ஆகியவற்றை குணமாகக்குகிறது.  


21. இது சிறுநீரகம் மற்றும் பித்தப்பை தொல்லைகள், இரைப்பை பிரச்சனை, அஜீரணம், அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு, பாலின உறுப்பு நோய்கள், பால்வினை நோய்கள், உடல் பருமன், உடல்மெலிவு மற்றும் கல்லீரல் நோய்களை குணப்படுத்துகிறது.  


22. இது 75-80 வயது வரை வேலை செய்யும் திறனை அதிகரிக்கிறது.


🌷ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி🌷


 9 நவம்பர் 1978, கல்கத்தா.

Wednesday, 7 October 2020

 பிரித்துப் பார்க்கின்ற அல்லது வேறுபடுத்திப் பார்க்கின்ற உணர்வு பக்தர்களுக்குப் பொருந்தாதது 

-------------------------------------------------------------------------------------------------------------------------

"விஷ்ணுபரிஸ்திதஹ விஷ்ணு விஷ்ணுர் காததி விஸ்ணவே

கதம் ஹஸஸி ரே விஷ்ணு சர்வம் விஷ்ணுமயம் ஜகத்"

ஒருமுறை மாபெரும் தந்த்ர யோகி ஒருவர் தன் அன்பான நாயை மடியில் உட்காரவைத்துக் கொண்டு உணவருந்திக் கொண்டிருந்தார். அந்த நாய் கீர்த்தனையை கேட்பதில் மிகவும் நாட்டம் கொண்டதாய் இருந்தது. எப்போதெல்லாம் கீர்த்தனை பாடப்படுகின்றதோ அப்போதெல்லாம் அந்த நாயும் மகிழ்ந்து ஆடும். உண்மையில் அந்த நாய் பல மனிதர்களைக் காட்டிலும் மிகவும் முன்னேற்றமடைந்ததாய் இருந்தது. இந்த தாந்த்ரீக யோகியும் அவருடைய நாயும் ஒரே தட்டில் உணவை பகிர்ந்து உண்டு கொண்டிருந்தனர். தீண்டாமையை ஆதரிக்கின்ற ஒரு ஞானவாதி அந்த வழியாக வந்தார். இருவரும் ஒரே தட்டில் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட அவர் இது என்ன அசிங்கம், நாயோடு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய் என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அப்போது அந்த தாந்த்ரீக யோகி, "நானும் விஷ்ணு இந்த நாயும் விஷ்ணு. ஆகையால் விஷ்ணுதான் என்னோடு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் நீங்களும் விஷ்ணுதான், இதுதானே உண்மை. அப்படி இருக்க நீங்கள் இப்படி  இழிவாய் பேசுவது ஏன்?" என்றார். இந்த அகிலம் முழுவதும் விஷ்ணுதான், விஷ்ணுவே எங்கும் உள்ளார். அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்.

 

பிரித்துப் பார்க்கின்ற அல்லது வேறுபடுத்திப் பார்க்கின்ற உணர்வு பக்தர்களுக்குப் பொருந்தாதது. அவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான். வேறுபாடுகள் அனைத்தும் மறைந்துபோய் விடுகின்றன. மனிதர்களுக்கு மட்டுமே இத்தகைய மனநிலை கிடைக்கும். அதனால்தான் மற்ற எல்லா உயிரினங்களைக் காட்டிலும் மனிதர்கள் உயர்வானவர்களாக இருக்கிறார்கள். இதற்கு முன்பு இல்லையென்றாலும், இப்போதெல்லாம் மனிதர்களோடு நெருங்கி வாழுகின்ற வாய்ப்பைப் பெற்ற பறவைகளும் விலங்குகளும் கடவுளை நேசிக்கும் மனநிலையை நிச்சயம் அடையும். மனித மனதுக்குள் அடக்கி வைக்கப்பட்டுள்ள இந்த அகிலாண்ட அன்பானது ஒருநாள் தானாக வெளிப்பட்டாக வேண்டும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. மனிதர்களின் நடத்தையை கவனித்துப் பார்த்தால் இறையன்பில் மூழ்கியுள்ளவர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். அத்தகைய மனிதர்கள் ஒரு போதும் மற்றவர்களை ஏமாற்ற நினைக்க மாட்டார்கள். இத்தகைய ஏமாற்றுக்காரர்களைப் பற்றி நான் எப்படி விவரித்திருக்கிறேன் என்று உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும். அவர்கள் எல்லோரும் அதர்மவாதிகள், புன்னியமில்லாத பாவிகள். பெரிய கோவில்கள் கட்டுவதாலும் புனித யாத்ரிகர்களுக்காக தங்கும் விடுதிகள் கட்டிக் கொடுப்பதாலும் இறைவன்மீது அன்பு செலுத்துவதாக இவர்கள் எண்ணுகிறார்கள். அவர்கள் எண்ணம் தவறானது.  இது வீண் முயற்சியாகும். வெறும் ஏமாற்று வேலையாகும். தவறாக சம்பாதித்தப் பணத்தை தானமாக கொடுத்துவிடுவதால் அவர்களுடைய பாவத்தை ஒருபோதும் சரிகட்டி  விட முடியாது. கடவுள் மீதான அன்பை ஒருவர் அவ்வளவு எளிதாய் பெற்றுவிட முடியாது. ஈஷ்வர ப்ரேமை உள்ளவர்கள் ஒருபோதும் பிறரை வஞ்சிக்க மாட்டார்கள், அது அவர்களால் முடியாது. அவர்கள், கொடுமைகள், அநீதி மற்றும் எல்லாவிதமான ஏமாற்று வேலைகளுக்கும் எதிராக தங்கள் குரலை உயர்த்துவர்கள். இத்தகைய தவறுகளை எதிர்த்து நிற்கும் நேர்மையான வீரம் இல்லாதவர்களெல்லாம் பொய்யர்களே - அவர்கள் ஒருபோதும் நியாயமானவர்கள் அல்ல. 'பக்தி ப்ரேமஸ்வரூபினீ' ப்ரேமையுடன் ஒன்றியவர்களின் செயல்கள் எப்போதும் சுயநலமற்ற உண்மையான தயாள குணத்தை ப்ரதிபலிப்பதாய் இருக்கும். 


🌷 ஸ்ரீ ஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌷


(ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து)

 *தர்மத்தின் பாதையில் செல்லும்போது ஒருவர் நற்காரியங்களை செய்தால் மட்டும் போதாது, ஒருவர் நேர்மையற்ற மனிதர்களுக்கு எதிராக போராடவும் செய்ய வேண்டும்*

-----------------------------------------------------------------------------------------------------------------------

 “த்யஜா துர்ஜனசம்சர்கம் பஜ சாது சமாகமம் குருபுண்யமஹோராத்ரம்ஸ்மரநித்யமநித்யதாம் ”    

தீயவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும். நீங்கள் கேட்கலாம் "தீயவர்கள் எப்போதாவது நல்லவர்களாக மாறமுடியுமா?" என்று. நிச்சயமாக அவர்களால் முடியும். ஆனால் அவர்களைவிட மிகுந்த மனோபலம் மிக்கவர்கள் மட்டுமே அவர்களை மாற்ற முயல வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும்? தனி ஒருவராக செல்வதற்கு பதிலாக "ஐந்து அல்லது பத்து நண்பர்களை உங்களோடு அழைத்துக்கொண்டு போகவேண்டும். அதன்மூலம் உங்களுடைய கூட்டு மனோபலமானது அவர்களைக் காட்டிலும் பெரியதாய் இருக்கும்". " த்யஜா துர்ஜன ஸம்ஸர்கம்". ஏழைகளின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்று மிகவும் உற்சாகத்தோடு பலர் பேசுவார்கள், ஆனால் உண்மையில் அதைச் செய்யக்கூடிய நோக்கம் அவர்களிடத்தில் இருக்காது. அவர்கள் பித்தலாட்டக்காரர்கள் என்பது வெளிப்படையாக தெரிந்தாலும் நீங்கள் அவர்களிடம் நேரடியாக மோதக்கூடாது,  மாறாக தற்காலிகமாக அவர்களிடம் கருத்து வேறுபாடு இல்லாததுபோல் காட்டிக் கொள்ள வேண்டும். இத்தகைய மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? தனியாக அவர்களைக் கையாளுவதற்கு பதிலாக பத்து அல்லது இருபது நபர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களை நல்வழிக்கு கொண்டுவர வேண்டும். 

 "பஜ ஸாது ஸமாகமம்" ஸாது என்பவர் யார்? எவருடைய நட்பு ஹிதத்திற்கு அதாவது உடல், மனம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் நலனுக்கு வழிகாட்டுகிறதோ அவரே ஸாது என்பவர். பிறவியிலிருந்தே நேர்மையான காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர் யாரோ அவரே ஸாது என்று அழைக்கப்படுகின்ற தகுதியைப் பெற்றவர். மற்றவர்கள் மனிதர்களைப் போன்று தோன்றினாலும், அவர்களை "கழுதைகள்"! என்று அழைப்பதே மிகப்பொருத்தமாகும். அவர்கள்  மனிதத் தோற்றத்தை பெற்றிருக்கிறார்கள், அவர்கள் மனிதத் தாயிடம் இருந்துதான் பிறந்திருக்கிறார்கள். - ஆனால் ஒரு கழுதையின் மனப்பாங்குடன் பிறந்திருக்கிறார்கள்.

 'பஜ ஸாது ஸமாகமம்'. 

 பிறருடைய நலனுக்காக அர்பணித்துக்கொண்ட நேர்மையான மனிதர்களோடு எவ்வளவு நேரம் செலவிட முடியுமோ அவ்வளவு நேரத்தை செலவளியுங்கள். இது உங்களுடைய தனிப்பட்ட நலனில் முன்னேற்றத்தை அடையவும், மற்ற எல்லா உயிர்களின் நலனில் கவனம் செலுத்துவதற்கும் வழிவகுக்கும். இதுவே ஒரு சிறந்த மனிதனுடைய கடமையாகும். பாவகாரியங்கள் செய்கின்ற மனிதர்களின் தொடர்பை தவிர்த்துவிடுங்கள். 

பாவம் செய்கின்ற மனிதர்கள் எல்லோரும் எல்லோருக்கும் சமமான தீயவர்கள் அல்ல. ஆனால் நேர்மையான மனிதர்கள் யாவரும் எல்லோருக்கும் சமமான நல்லவர்களே. இது சம்பந்தமாக சொல்லப்பட்டிருப்பதாவது:


“ஸத்சங்கேன பவேன்முக்திர் அஸத்சங்கேஸுபந்தனம் அஸத்சங்கேன முத்ரணம் ஜத் தன்முத்ரா பரிகீர்த்தித”.

                    

சத்சங்கத்தின் சிறப்பு என்னவென்றால், அதாவது நல்லோர்களின் நட்பின் உயர்வு என்னவென்றால், அது எல்லோருக்கும் சமமான பயன்தரக்கூடியது.

"குரு புன்யம் அஹோராத்ரம்". அஹோராத்ரம் என்றால் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உள்ள இருபத்துநான்கு மணி நேரத்தைக் குறிக்கும். 

ஒருவன் இருபத்துநான்கு மணிநேரமும் புன்னியத்தை பெறவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே கேள்வி என்னவென்றால், புன்னியம் என்பது என்ன?    கங்கை ஆற்றில் ஒருமுறை முழுகி எழுந்துவிட்டால் ஒருவர் புன்னியத்தை பெற்றுவிடுவாரா? என்பதுதான். 


 பிறருக்கு நன்மை செய்வதே புன்னியம் என்பது. பிறருக்கு தீங்கு செய்வது பாவம் ஆகும். இந்த உலகில் மற்றவர்களுக்கு தீங்கு செய்வதற்கும் கொடுமைகள் செய்வதற்கும் ஆவல் கொண்டுள்ள மனிதர்களுக்கு பஞ்சமே இல்லை. புன்னியம் செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? மற்றவர்களுக்கும்  சமுதாயத்திற்கும்  நாட்டிற்கும் பாமர மக்களுக்கும் நன்மை செய்வதன் மூலம் அவர்கள் புன்னியத்தை பெறவேண்டும். அவர்களுடைய செயல்கள் யாவும் மக்களுடைய சமூக-பொருளாதார நலன்களை மிகத் திறமையான முறையில் மேன்மைபடுத்துமாறு இருக்க வேண்டும். இதுவே அவர்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். உங்களுடைய நற்காரியங்கள் இச்சமுதாயத்தை இரண்டு அடி முன்னோக்கி எடுத்துச் செல்லும். ஆனால் உங்களேடு தீயவர்களும் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் இச்சமுதாயத்தை இரண்டு அடி பின்னால் எடுத்துச் செல்வார்கள். பிறகு அங்கே முன்னேற்றம் என்பது பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். ஆகையால் நீங்கள் தொடர்ந்து இந்த சமுதாயத்திற்கு நன்மைகளை செய்துகொண்டே இருக்க வேண்டும், அதே சமயம் இச்சமுதாயத்தை பின்னால் எடுத்துச் செல்லுகின்ற தீயவர்கள் ஒரு அடிகூட எடுத்துவைக்காதவாறு அவர்களுக்கு எதிராக போராடவும் வேண்டும். தர்மத்தின் பாதையில் செல்லும்போது ஒருவர் நற்காரியங்களை செய்தால் மட்டும் போதாது, ஒருவர் நேர்மையற்ற மனிதர்களுக்கு எதிராக போராடவும் செய்ய வேண்டும். இரண்டுமே புண்ணிய காரியங்கள்தான் .


 இச்சமுதாயத்தில் நிறைய நல்ல மனிதர்கள் உள்ளனர்.  நற்காரியங்களில் ஈடுபட்டுள்ள நல்லோர்கள் தீமைகளுக்கும் அநீதிக்கும் எதிராக போராட தயாராக இருப்பதில்லை. இவ்வுலகில் இத்தகைய  நற்காரியங்கள் உண்மையில் மனிதசமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான வழிகளை மேன்மையுறச் செய்யாது. இங்கே தேவைபடுவது என்னவென்றால் நற்காரியங்களை செய்வதன்மூலம் புன்னியத்தை பெறவேண்டும் அதே சமயம் குற்றங்களுக்கும் பாவங்களுக்கும் எதிராக போராடவும் வேண்டும். இரண்டுமே கட்டாய கடமையாகும். இரண்டுமே தர்மத்தின் பிரிக்கமுடியாத பகுதிகளாகும்.


🌷ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி🌷


(ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து)

 இந்த உலகைவிட்டுச் செல்லும்போது சிரித்த முகத்தோடு விடைபெற வேண்டும். 

-----------------------------------------------------------------------------------------------------------------------

இந்த உலகில நீங்கள் மிகக் குறைந்த காலத்திற்குதான் வந்திருக்கிறீர்கள் என்றாலும், சமுதாய சேவையையும் சேர்த்து இன்னும் பல்வேறு காரியங்களுக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றீர்கள். அதனால் நீங்கள் அறிவாலும் புத்திசாலித்தனத்தாலும் எல்லா வழிகளிலும் உங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதே சமயம், உங்களுடைய கடமைகளையும் பொறுப்பகளையும் நீங்கள் நிறைவேற்றவும் வேண்டும். உங்களுடைய கடமைகள் முடிந்துவிட்டபோது நீங்கள் இந்த உலகிடமிருந்து சிரித்த முகத்தோடு விடைபெற வேண்டும். இந்த இடத்தில் துளசிதாஸரின் வார்த்தைகளைக் குறிப்பிடுவது சிறப்பாக இருக்கும். 

“துள்ஸி ஜப் தும் ஜக் மே ஆயே ஜக் ஹஸா தும் ரோயே

அய்ஸி கர்னீ கரேலோ தும் ஹாஸோ ஜக் ரோயே”

(துள்ஸி, நீ இந்த உலகிற்கு வந்தபோது உலகம் சிரித்தது ஆனால் நீ அழுதாய். உன்னுடைய புனிதப் பணிகளை தொடர்வாயாக. அப்போதுதான் நீ இறக்கின்றபோது நீ சிரிப்பாய், இந்த உலகம் அழும்)

ஒரு குழந்தை பிறக்கின்றபோது அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் சிரிப்பார்கள் ஆனால் அந்தக் குழந்தையோ அழுகிறது. ஆனால் நீங்கள் இந்த உலகை விட்டுச் செல்கின்றபோது உங்களுடைய முகத்தில் புன்னகை மலரவேண்டும் ஆனால் உங்களுடைய பிரிவைப் பார்த்து இந்த உலக மக்கள் கண்ணீர் சிந்தி அழவேண்டும். 

அத்தகையதொரு பயனுள்ள வாழ்வை நீங்கள் வாழ வேண்டும்.  தங்களுக்குத் தேவையான நேரத்தில் உண்மையாய் உதவிய மனிதனின் இழப்பைக் கண்டு மக்கள் துக்கம் கொள்வார்கள். உயிருள்ளவரை இத்தகைய நற்காரியங்களை செய்தாகவேண்டும் என்ற உறுதிமொழியை நீங்கள் எல்லோரும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் சிரித்தமுகத்தோடு இந்த உலகை விட்டு நீங்கள் செல்லவேண்டும்.


 🌷 ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி 🌷


(ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து)

 பாவிகளுக்கும் பரிவு காட்டுபவன்தான் பரமபுருசன் 

-----------------------------------------------------------------------------------------------------------------------------

மனிதனுக்குள் இருக்கின்ற விரோதிகளில் மற்றும் குறைபாடுகளில் பயம் என்பதுதான் மிகவும் மோசமானது. பயம் என்பது பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது. அதில் ஒன்று தாழ்வு மனப்பான்மையினால் வெளிப்படுவது. அது பொதுவாக பற்றாக்குறை அல்லது குறைபாட்டு உணர்வு போன்றவற்றால் உருவாகிறது. ஒரு ஏழை  ஒரு பணக்காரனுக்கு முன்னால்  தன்னை தாழ்வாக எண்ணிக்கொள்கிறான், வலிமையுள்ளவனுக்கு முன்னால் ஒரு நலிந்தவனும், இறைவனுக்கு முன்னால் பாவம் செய்தவனும் தாழ்வாக எண்ணிக்கொள்கிறான். இத்தகைய பயஉணர்வு மனிதர்களுக்கு மிகவும் கேடுவிளைவிக்கக் கூடியது. ஏனென்றால் அது முன்னேற்த்தின் பாதையில் மிகப்பெரிய தடைகளை உருவாக்கிவிடும். உதாரணமாக  ஒரு மனிதன் விரும்பத்தகாத ஒரு தவறை செய்துவிடுகிறான் என்று வைத்துக்கொள்வோம், அதன் விளைவாய் உருவான தாழ்வு மனப்பான்மை அவனை எந்த ஒரு முக்கியமான பணியையும் மேற்கொள்வதற்கு தடையாய் அமைந்துவிடுகிறது. "நான் ஒரு பாவி, என்னால் எப்படி பரமபுருஸனை சந்திக்கமுடியும்? என்று எண்ணிக்கொண்டு பரமபுருஸனுக்கு முன்னால் நிற்பதற்கு அவன் அஞ்சுகிறான். ஆனால் வேதங்கள் கூறுகின்றன, மனிதர்கள் இத்தகைய எண்ணங்களை மனதில் புகவிடக்கூடாது என்று. அவர்கள் பாவிகள் என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. ஒருவன் இடைவிடாமல் "நான் ஒரு பாவி, நான் ஒரு பாவி" என்று நினைத்துக்கொண்டிருந்தால், அவனுக்குள் இருக்கின்ற இயல்பான மனஆற்றலை அவன் இழந்துவிடுவான். அவர்கள் மனம் திருந்தி  இத்தகைய எண்ணங்களை தவிர்த்துவிடவேண்டும். 

மனிதர்கள் எப்படி நினைக்க வேண்டும்? "நான் நல்லவனோ அல்லது கெட்டவனோ, எத்தகையவனாய் இருந்தாலும், நான் இனி தவறு செய்யமாட்டேன்,  நான் பரமபுருஸனுக்கு சொந்தமானவன், பிறகு எதற்காக தயக்கம், குழப்பம் அல்லது தாழ்வு மனப்பான்மை போன்றவற்றால் என்னுடைய மனதை நலிவுறச் செய்ய வேண்டும்? என்றுதான் எண்ண வேண்டும்.

 கீதையில்,

 “அபிசேத் ஸுதுராச்சாரீ பஜத்தே மாமனன்யபாக்ஸோபி பாபவினிர்முக்த முசியதே பவ பந்தனாத் ”

 என்று கிருஷ்ணன் கூறுகிறான். பாவிகளைவிட மோசமானவர்கள்கூட யாருக்கு சொந்தமானவர்கள்? நிச்சயமாக அவர்கள் பரமபுருஸனுக்கு சொந்தமானவர்கள். ஒருவர்கூட அவனுக்கு அப்பால் இல்லை அல்லது அவனுக்கு வெளியில் இல்லை. இந்த ப்ரபஞ்சத்துக்கு பரமபுருஸனே உரிமையாளனாய் இருக்கின்றபோது, அவனே இந்த ப்ரபஞ்சத்தின் தனித்தலைமை பதியாய் இருக்கின்றபோது, பாவிகளுக்கும் அவன்தானே பதியாய் இருக்கின்றான். பிறகு எதற்காக பாவிகள் அவனைக் கண்டு பயப்படவேண்டும்? அவர்களும் ஒருநாள் அவனை அடைவார்கள்.


 🌷 ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி 🌷


(ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து

 " பரமபுருஷனுக்கு மகிழ்வைக் கொடுப்பதன் மூலம் நீங்களும் அதிக அளவில் மகிழ்ச்சி அடைவீர்கள்"

-----------------------------------------------------------------------------------------------------------------------

நீங்கள் எல்லோரும் பரமபுருஷனின் சந்ததிகள். அவனே ஒவ்வொன்றையும் படைத்துக்கொண்டிருக்கிறான். மனிதனால் உருவாக்கப்பட்ட வேற்றுமைகளையும், உயரமானவன், குள்ளமானவன், கறுப்பு, வெள்ளை, ஆண், பெண் போன்றவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. அந்த அகிலாண்ட மனத்துடன் உங்கள் மனத்தைப் பொருந்தச் செய்யுங்கள். அது பரமபுருஷனுக்கு மகிழ்வைத் தருகிறதா இல்லையா என்பதைப் பாருங்கள். அவனை மகிழ்விக்கின்ற எல்லாவற்றையும் செய்யுங்கள். தன் குழந்தை பட்டினியால் இறந்து போகவோ அல்லது தன்னுடைய குழந்தைகளுள் ஒன்று மட்டும் தேவைக்கு மேல் அதிகமாக சாப்பிடவோ அல்லது சேமித்து வைத்துக்கொள்ளவோ எந்த தந்தையும் விரும்புவது கிடையாது. இத்தகைய கேடுகள் ஒருபொழுதும் நடைபெறாமல் இருக்கக்கூடிய பொருளாதாரச் சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். அதே போல சமூக வாழ்வில் தன்னுடைய விதவை மகள்  ஒரு துறவி போல உடை அணிவதையும், சமூக ரீதியாக துன்புறுத்தப்படுவதையும், பொது விழாக்களில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்படுவதையும் எந்த ஒரு தந்தையும் பார்க்க விரும்புவதில்லை. இத்தகைய கேடுகளுக்கு நீங்கள் ஆதரவு அளிக்கக் கூடாது, எல்லோருக்கும் நீங்கள் சம அளவில் சந்தர்ப்பங்களை அளிக்க வேண்டும். 

   தங்கள் குழந்தைகள் அழுவதை பார்க்க பெற்றோர்கள் விரும்புவதில்லை. அப்படி அழுதால், அக்குழந்தைகளை தங்கள் மடிமீது வைத்து, இதமுடன் அன்பு காட்டி, பாராட்டி, அவர்களுடைய கண்ணீர் நிற்கும் வரை ஆறுதல் கூறுவார்கள். எவரும் அழக்கூடிய நிலையே இல்லாத, அங்கே எப்போதும் எல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்கக் கூடிய, எப்போதும் சிரித்திருப்பதற்கு எல்லோருக்கும் தாராளமாக சந்தர்பங்கள் கிடைக்கக்கூடிய,  ஒரு சமுதாயத்தை நீங்கள் உருவாக்க வேண்டும். இத்தகைய சந்தோஷத்தையும் களிப்பையும் கண்டு பரமபுருஷன் அளவில்லா மகிழ்ச்சி கொள்வான். பரமபுருஷனுக்கு மகிழ்வைக் கொடுப்பதன் மூலம் நீங்களும் அதிக அளவில் மகிழ்ச்சி அடைவீர்கள், அவன் உங்கள் அருகில் இருப்பதை உணர்வீர்கள். இதுதான் உண்மையான சமூக நியதி. பரமபுருஷனை நோக்கி முன்னேறுகின்ற மனிதர்களுக்கு உதவி புரிவதே உண்மையான ஆன்மீக நியதியாகும். எந்த சூழ்நிலையிலும் யாரும் தேவையற்ற வேற்றுமைகளை உருவாக்கக் கூடாது. பரமபுருஷனுடைய குழந்தைகளின் முகங்களில் பரந்த சிரிப்பைக் கொண்டு வருவதே சமூக நியதியின் நோக்கமாகும். இந்தப் பாதை வழியாகத்தான் நீங்கள் எல்லோரும் செல்ல வேண்டும். நீங்கள் வெற்றியை சந்திப்பது நிச்சயம்.     

                                                                      

🌷ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி🌷


(ஆனந்த வச்சனாம்ருதம் 4ம் பாகத்திலிருந்து

 இந்த ப்ரபஞ்சத்தில் இறைவனின் எண்ண அலைகள் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கிறது. 

👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺

மனிதர்கள் மரங்களைப் போன்று ஜடமாக உள்ளனர். மனித தர்மத்தை கடைபிடிக்கும் ஒருவன்தான் உண்மையிலேயே மனிதன் என்ற சொல்லிற்கு ஏற்ப நடப்பவன். அப்படி இல்லாதவனை 'மனிதன்' என்று சொல்வது எவ்விதத்தில் நியாயம்? ஜமீன்தாரரே (நிலச் சொந்தக் காரர்)  இல்லை  என்றபோது,  ராய் சௌத்ரி (நிலச் சொந்தக்காரரை அழைக்கின்ற பட்டப் பெயர்) என்று யாரை அழைப்பது? மனித தர்மம் அல்லது பாகவத தர்மம் மூன்று பண்புகளைக் கொண்டுள்ளது. அவை: விஸ்தார, ரஸ மற்றும் சேவா என்பனவாகும்.

   மனிதர்கள் மன விரிவாக்கத்தை விரும்புகிறார்கள். ஒரே இடத்தில் அடைந்து கிடக்க விரும்பாமல் அவர்கள் எல்லா நிலைகளிலும் விரிவடைய விரும்புகிறார்கள். இந்த விரிவாக்கத்திற்கான உந்துதல்தான் மனிதர்களின் பொதுவான இயல்பாகும். உடல் அழியும் வரை அது மனிதனுக்குள் நீடித்திருக்கும். இந்த விரிவாக்கத்திற்கு முயற்சி செய்யாதவர்களும், மூடநம்பிக்கை, மதநம்பிக்கை போன்றவற்றைப் புகுத்தி அதன் மூலமாக மற்றவர்களின் விரிவாக்கத்திற்குத் தடை செய்பவர்களும் நிச்சயமாக பாவம் செய்கிறார்கள் என்றுதான் அர்த்தம். உடன்பிறந்த இந்த குணாதிசயங்களை விரிவு செய்ய முயற்சி செய்யாதவர்கள் மிருகங்களே ஆவர்.  நாம் யாருடைய வளர்ச்சியையும் தடுக்கக் கூடாது, யாருடைய விரிவாக்கத்திற்கும் தடையாய் இருக்கவும் கூடாது. அதற்கு மாறாக, விரிவாக்கத்திற்கு உண்மையாக முயற்சி செய்யாதவர்களுக்கு ஊக்கம் அளித்து விரிவடையச் செய்ய வேண்டும். முன்னேற்றத்தின்  பாதையை நாம் ஒருபோதும் மூடிவிடக் கூடாது. இதுவேஜ ' விஸ்தார ' என்பது. 


   ' ரஸ ' என்றால் 'ஓட்டம்',  இந்த ஓட்டமே இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்தும், காத்தும் வருகிறது. ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் இயக்கம் என்பது உள்ளது. எல்லாமே ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் வேகமும் உண்டு. எதுவும் அசையாமல் ஓரிடத்தில் நிற்பதில்லை. பரமபுருஷனைப் பற்றி சொல்லும்போது " ராஸஹ வை சஹ " என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, "ரஸ"த்தின் இருப்பிடமே அவன்| என்று பொருள். இந்த ப்ரபஞ்சத்தின் ஓட்டமாக     அவன்   இருக்கிறான். அவனுடைய சந்ததிகளில் மனிதர்களே மிக அதிகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளனர். ஆகவே அவர்களிடத்திலும் இந்த ஓட்டம் அமைந்திருப்பது இயற்கையே. ஆகவேதான் 'மனித வாழ்வு என்பது ஒரு கொள்கை ஓட்டம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் 'மனிதன் என்பவன் ஒரு பகுத்தறிவு படைத்த விலங்கு' என்ற பழைய கருத்து தவறானது. அது மனிதனின் மதிப்பைக் குறைக்கிறது. 


   தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள பொதுவான குணாதிசயங்களை அதாவது, சாப்பிடுவது, உறங்குவது போன்ற சிலவற்றை மனிதர்களும் பெற்று இருக்கிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் விலங்குகளோ அல்லது தாவரங்களோ அல்ல. யானைகளும் எறும்புகளும் கூட சாப்பிடுகின்றன, உறங்குகின்றன. அதனால் அவை மனிதனுக்குச் சமமாகி விட முடியுமா? முடியாது.


 'சேவா' . மனிதர்களிடத்தில் இயற்கையாய் அமைந்துள்ள பண்பு மற்றவர்களுக்கு சேவை செய்வதே ஆகும். வியாபாரக் கொடுக்கல்-வாங்கலுக்கான உள்நோக்கம் 'எனக்கு ஒரு ரூபாய் கொடு, அதற்கு பதிலாய் ஒரு ரூபாய் மதிப்புள்ள பொருளை எடுத்துக்கொள்' என்பதே ஆகும். இப்படிப்பட்ட கொடுக்கல்-வாங்கலுக்கு இரண்டு பக்கம் உண்டு. ஆனால் 'சேவா' என்பதற்கு ஒரு பக்கம்தான் உண்டு. அதாவது, 

"எல்லாவற்றையும் பரமபுருஷனுக்குக் கொடுப்பேன் ஆனால் பதிலுக்கு எதையும் திரும்ப பெறமாட்டேன்' என்பது. நான் பரமபுருஷனுடன் ஒன்றாகி விட மட்டுமே விரும்புகிறேன். அவனே இந்த ப்ரபஞ்சத்தின் விலைமதிக்க முடியாத பொக்கிஷம். ஆகவே என்னிடமுள்ள விலைமதிப்பற்ற ஒன்றைக் கொடுத்து விடுகிறேன். அதாவது, என்னுடைய வாழ்வையே கொடுத்து விடுகிறேன். மிகவும் விலை  மிக்க பொருட்களை கொடுத்தே மற்றொரு விலை மதிப்பு மிக்கப் பொருளை பண்ட மாற்றம் செய்ய முடியும். அதனால் எனது வாழ்வின் மிகச் சிறிய பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் அவனுக்குக் கொடுத்து விடுகிறேன். ஏன்  என்   வாழ்வின்   மிகச்  சிறிய பகுதியை மட்டும் என்னிடம் வைத்திருக்க வேண்டும்? ஏனென்றால் நான் சிலவற்றைப் பார்க்க விரும்புகிறேன், சிலவற்றை கேட்க விரும்புகிறேன், சிலவற்றை பெற விரும்புகிறேன். ஆனால் விலையை நான் கொடுக்காவிட்டால் விரும்பிய பொருள் கிடைக்காது. இந்த விஸ்தார, ரஸ மற்றும் சேவா என்ற மூன்றும் மானவ தர்மம் அல்லது பாகவத தர்மத்தின் பகுதிகளாகும். இந்த பாகவத தர்மத்தில்தான் மனிதனின் சிறப்பு அடங்கி இருக்கிறது. இதுவே மனிதர்களின் தலையாய தர்மம் ஆகும். ஆகவேதான், 'ஒருவனுடைய சொந்த தர்மத்தை கடைபிடிப்பது கடினமானதாக இருந்தாலும், அதாவது மானவ தர்மம் அல்லது பாகவத தர்மம் இன்ப துன்பங்கள் நிறைந்ததாய் இருந்தாலும், மனிதர்கள் இந்த தர்மத்தை விடாது கடை பிடிக்க வேண்டும். இதன் மூலமாக தங்களுடைய உண்மையான அடையாளத்தை அவர்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்| என்று சொல்லப்பட்டிருக்கிறது.


🌷ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி🌷 


(ஆனந்த வச்சனாம்ருதம் 4ம் பாகத்திலிருந்து)

 ' ஆன்மீகப் பயிற்சிக்கான பாதையில் செல்லாதவர்கள், வளர்ச்சியற்ற மனிதர்களாகவே இருப்பர் '

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


இறைவன் வெவ்வேறு உயிரினங்களைப் படைத்துள்ளான். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்ற மூன்று பிரிவில் உள்ள ஒவ்வொன்றிலும்கூட வேறுபாடுகள் உள்ளன. எல்லா விலங்குகளும் எல்லா தாவரங்களும், எல்லா மனிதர்களும் சமமாக இருப்பதில்லை. 

 "சர்வே ச பஸவஹ சந்த்தி தலவத் பூதலே நராஹ

தேஷாம் ஞானப்ரகாஷாய வீரபாவஹ ப்ரகாஷிதஹ

வீரபாவம் சதாப்ராப்ய க்ரமேன தேவதா பவேத்"

அதாவது,  பிறந்த பிறகு ஒவ்வொரு மனிதனும் குழந்தைப் பருவத்தில் இருக்கிறான். அந்தப் பருவத்தில் அறிவு முழுவடிவம் பெறுவதில்லை. எதைப்பற்றியும் முடிவு எடுக்கின்ற அளவுக்கு அறிவு வளர்ச்சி பெறுவதில்லை. எல்லா விஷயங்களிலும் குழந்தையாகவே இருக்கிறான். தவறு செய்யும் சிறு குழந்தையை எப்பொழுதுமே நாம் மன்னித்து விடுகிறோம். அக்குழந்தையை நாம் திட்டுவதில்லை. ஏனென்றால் அதனுடைய அறிவு இன்னும் வளர்ச்சி பெறவில்லை என்பதால். அது சிறுநீர் கழித்து விட்டாலும், மலம் கழித்து விட்டாலும் அதை நாம் வெறுப்பதில்லை. அதே போல செய்கின்ற விலங்குகளையும் யாரும் வெறுப்பதில்லை. 


   அந்தச் சிறு குழந்தை சிறிது வளர்ந்த பிறகு கொஞ்சம் அறிவு வளர்ச்சியைப் பெறுகிறது, அக்காவை பெயர் சொல்லி அழைக்கிறது, அக்காவும் அக்குழந்தையின் மழழைச் சொல் கேட்டு இரசிக்கிறாள். ஆனால் அந்தக் குழந்தை மேலும் வளர்ந்தவுடன் அக்காவோ அல்லது குடும்பத்தில் உள்ள மற்றவர்களோ அதற்குமேலும் அது அவ்வாறு அழைப்பதை பாராட்டுவதில்லை. அப்போது அக்கா கடிந்து கொள்கிறாள். "வேறு எங்காவது என்னைப் பெயர் சொல்லி அழைத்தாலும் பரவாயில்லை, ஆனால்   என்   மாமனார்   வீட்டில்  என்னை அப்படி கூப்பிடாதே, அங்கே என்னை அக்கா என்றுதான் கூப்பிட வேண்டும்" என்று கூறுகிறாள். ஆனால் குழந்தைகள் மிகச் சிறியவர்களாக இருக்கும்போது அவர்களுடைய தவறுகளை கண்டிப்பதில்லை, கண்டிக்கவும் கூடாது. பொதுவாக ஒரு குழந்தை மனப்பக்குவத்தை பெற்ற பிறகு, வைதீக முறைப்படி ஆன்மீகப் பாதையை கற்றுத் தருகிறோம். அதாவது தீக்ஷை அளிக்கப்படுகிறது. அந்த தீக்ஷையின் ஆழ்ந்த கருத்தானது, பரமபுருஷனிடம் வேண்டுவதே ஆகும். “ஓ இறைவா, எனக்குச் சரியான பாதையைக் காட்டு” என்று வேண்டுவதே ஆகும். இத்தகைய பாதையைத் தேடுகின்ற ஒருவர் நிச்சயமாக அதை கண்டு கொள்வார். காயத்ரி மந்திரத்தில்,


 “ஓம் பூ புர்வஹ ஸ்வஹ தத்சவிதுர்வரேன்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோ யோ நஹ ப்ரசோதயாத் ஓம்”


 என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது “ஓ இறைவா, என்னுடைய புத்தியை சரியான பாதையில் வழிநடத்துவாயாக” என்பதே இதன் பொருள். 


   இவ்வாறு வைதீக முறைப்படி  தீக்ஷை பெற்ற ஒருவன் சிறிது மனப்பக்குவம் அடைந்து விட்டதாக கருதப்படுகிறான். அடுத்த நிலையில் இஷ்ட மந்திரத்தையும் குரு மந்திரத்தையும் கற்றுக்கொள்ளக்கூடிய தகுதியை அவன் பெறுகையில், ‘தாந்த்ரிக’ தீக்ஷை அவனுக்கு சொல்லித்தரப்படுகிறது. அப்போது அவன் அதிக மனப்பக்குவத்தைப் பெறுகிறான், புது மனிதனாகிறான். உண்மையில், பரம்பொருளிடத்தில் வேண்டிக்கொண்ட பிறகு அந்த ஈஷ்வரனே தீக்ஷை,  இஷ்ட மந்திரம் போன்றவற்றை சொல்லித் தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறான். ஏனென்றால் அவன் மட்டுமே குரு ஆவான். அதனால்தான் “குருவே ஈஷ்வரன், ஈஷ்வரனே குரு" என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆன்மீகப் பயிற்சிக்கான பாதையில் செல்லாதவர்கள், வளர்ச்சியற்ற மனிதர்களாகவே இருப்பர். மனித உடலை அவர்கள் பெற்று இருந்தாலும், எந்த விதத்திலும் அவர்கள் விலங்குகளைவிட உயர்ந்தவர்களாக இல்லை. அந்த நிலையில் அவர்கள் இறைவனிடம் உண்மையான ஆர்வத்தோடு “தயவு செய்து என்னை இந்த மிருக வாழ்க்கையிலிருந்து முன்னேற்றுவாயாக” என்று வேண்டிக்கொள்ள வேண்டும். இந்த முதற்கட்டத்தில், பக்தர்கள் பரமபுருஷனை ‘பசுபதி’ என்று அழைப்பர். ‘பசு’ என்றால் ‘விலங்கு’, ‘பதி’ என்றால் ‘இறைவன்’ என்று பொருள். அதாவது விலங்குகளின் இறைவன் என்று பொருள். அவன் ஆன்மீகப் பயிற்சிக்கான பாதையில் நடக்க ஆரம்பித்த பிறகு எல்லா பக்கங்களில் இருந்தும் தடைகளையும், இடையூறுகளையும் எதிர்கொள்கிறான். அவனது குடுப்பத்தினர்கள், நண்பர்கள், உறவினர்கள்கூட தடைகளை உண்டாக்குவார்கள். ஆனால் இந்தத் தடைகளையும், வேறு பக்கங்களிலிருந்து வருகின்ற மற்றத் தடைகளையும் ஒருவன் தைரியத்துடன் எதிர்த்துப் போராட வேண்டும். போராட்டமின்றி வெற்றியைப் பெற முடியாது. போராட்டமில்லாத வெற்றியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. 


   இங்கு ஒரு கேள்வி எழுகிறது. ‘போர்களத்தில் சண்டை செய்வதற்கு தகுதி உடையவர் யார்? என்று. கதாநாயகனால் மட்டுமே சண்டை செய்ய முடியும். விலங்கு நிலையிலிருந்து மேலே எழுந்தவனே வீரன் அல்லது கதாநாயகன் என்று அழைக்கப்படுகிறான். அந்த நிலையில் அவன் பரம்பொருளை ‘வீரேஷ்வரா’ என்று அழைக்கிறான். வீரனின் மனநிலையைப் பெற்ற ஒரு பக்தனுக்கு அதற்குமேலும் அந்த இறைவன் பசுபதியாக இருப்பதில்லை. அப்படிப்பட்ட பக்தனால் ஒருபொழுதும் பாவத்தையோ அல்லது அநியாயத்தையோ பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. எந்தக் குற்றத்தையும் அல்லது பாவத்தையும் செய்யவும் முடியாது. ‘க்ரமேன தேவதா பவேத்’ – அதாவது நாளடைவில் அவன் கடவுளாகிறான். அதாவது, கடவுள் தன்மையைப் பெறுகிறான். ‘வீரபாவ’த்திலிருந்து படிப்படியாக மேலேச் சென்று   உண்மையான கடவுளாகி  ‘திவ்ய பாவ’த்தை அடைகிறான். அப்படிப்பட்ட ஒருவனை, எப்பொழுதும் உன்னதமான நடத்தை கொண்டவனை ஒரு ‘தெய்வ மனிதன்’ அல்லது 'ஷிவனைப் போன்றவன்’ என்று அழைக்கிறோம். அப்படிப்பட்;ட ஒருவன் முன்னேற்றப் பாதையில் வெகு தூரம் சென்று, ஒரு நாள் அந்த பரமபுருஷனோடு கலந்து, பிறகு பரமபுருஷனாகவே ஆகிவிடுவான்.     


🌷 ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி 🌷


(ஆனந்த வச்சனாம்ருதம் 4ம் பாகத்திலிருந்து

Tuesday, 6 October 2020

அறிவின் விடுதலை 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 பணம் என்ற செல்வத்தோடு, இந்த உலகின் ஐந்து அடிப்படை காரணிகளும் இந்த ஒட்டுமொத்த மனித இனத்தின் நலனுக்காக பரமபுருஷனால் உருவாக்கப்பட்டவை. ஒரே பரம புருஷனுடைய பாதுகாப்பில் வாழ்வதும், சரியான இணக்கத்தோடு வாழ்வதும், வளர்வதும், ஒருவருடைய வாழ்வை எல்லா வகையிலும் வெற்றிகரமாக உருவாக்குவதும், ஒவ்வொரு நபருக்கும் உள்ள பிறப்புரிமையாகும். தங்களுடைய சக மனிதர்களையே சுரண்டுகின்ற இயல்புடைய ஒருசில சந்தர்பவாதிகள் நிச்சயமாக இருக்கின்றனர். அவர்கள் இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மாறாக, ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் என்றைக்குமே புறக்கணிக்கப்படுவது இயற்கையின் நியதி என்றும், அந்த மனிதர்கள் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை தொடர்ந்து அனுபவித்துதான் ஆகவேண்டும் என்பதும், ஒரு சில மனிதர்கள் அளவில்லா செல்வத்தில் புரள வேண்டும் என்பதும் விதியால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் பகுத்தறிவற்ற தர்க்க நியாயத்தை முன் வைப்பார்கள். இதுவும் மூடநம்பிக்கைதான். புத்தியுள்ளவர்களும், நீதியுள்ளவர்களும் இதை கடுமையாக எதிர்க்க வேண்டும், மேலும் இத்தகைய மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்தியாக வேண்டும். ஏனென்றால் மனிதர்களின் சுதந்திரமான அறிவின் குரல்வளையை நெறிக்கின்ற எதுவாயினும் அது அவர்களுடைய அறிவு விடுதலைக்கு நிச்சயமாக தடைக்கல்லே ஆகும்.


🌸 ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌸


(புதிய மனிதநேயம்)

 பாகவத தர்ம இல்லாத மனிதர்கள் விலங்குகளே 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


 "ஆஹார நித்ரா பய மேதூனயிச்ச ஸாமான்யமேதத் பஷுபீர்னரானாம்,

தர்மோ ஹி தேசமதிகோ விஷேஸோ தர்மேன ஹீனஹ பஷுபிஹ் ஸமானாஹ"


இந்த ஸ்லோகத்தில், பாகவத தர்மம் இல்லாத மனிதர்கள் விலங்குகள் போன்றவர்களே என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், பாகவத தர்மத்தை இழந்த மனிதர்கள் விலங்குகளைவிட மோசமானவர்கள் என்று. விலங்குகளுக்கு முன்னேறிய அறிவோ அல்லது மெய்யுணர்வோ கிடையாது, ஆனால் மனிதர்கள் பெற்றுள்ளனர். மனிதர்கள் தங்களுடைய முன்னேறிய அறிவைவோ அல்லது மெய்யுணர்வையோ பயன்படுத்த தவறினால், அதாவது பாகவத தர்மத்தின் வழிமுறைகளை பயன்படுத்த தவறினால், அவர்கள் மனித குலத்தின் எதிரிகள் ஆவர், அல்லது மனித இனத்தின் அவமான சின்னங்களாவர். பாகவத தர்மத்தோடு தொடர்பில்லாத அவர்களுடைய செயல்கள் அனைத்தும் மனித இனத்திற்கும் மனிதர்களின் இயற்கைப் பண்பிற்கும் எதிரானவையே ஆகும். அவர்களுடைய எதிர்காலம் மின்னலால் தாக்கப்பட்ட மரம்போல கருகிப்போவது நிச்சயம். தங்களுடைய வாழ்வை வளமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற  ஆழ்ந்த விருப்பத்தை உடைய நலிந்த மக்கள் பாகவத தர்மத்தை பின்பற்றுவதுதான் சிறந்த வழி. மனித இனம் மற்றும் நாகரிகம் வளர்ச்சியடைவதற்கான இயற்கையான மற்றும் எளிதான வழி பாகவத தர்மத்தின் வழிதான். வேறு வழியே கிடையாது. ஆகையால் மனித இனத்தின் நலனை உண்மையாக விரும்புகிறவர்கள் பாகவத தர்மத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும்.

பாகவத தர்மம் மூன்று காரணிகளைக் கொண்டது. விஸ்தார(விரிவாக்கம்), ரஸ(பாய்ந்து ஓடுவது) மற்றும் சேவா(தொண்டு). விஸ்தார என்ற சொல்லுக்கு சரியான பொருள், மனதை இறைவனை நோக்கிச் செலுத்துவது என்பதாகும். இறைவனை நோக்கிச் செல்லுகின்ற இந்த மன இயக்கமானது புறக்காரணிகளைச் சார்ந்தது அல்ல. இறைவனை நோக்கிச் செல்வதற்கு, ஒருவர் முதலில் எல்லாவிதமான குறுகிய மனப்பான்மைகளையும், கீழான எண்ணங்களையும் கடந்து வெற்றிகொள்ள வேண்டும். எனவே பாகவத தர்மத்தை பின்பற்றுகின்ற ஒருவர், தன்னுடைய மனதின் உள்ளேயே இருக்கின்ற எல்லைகளை உடைய மனப்பாங்குகளுக்கு எதிராகவும், அதேபோல இச்சமுதாயத்திலும் ஈவிரக்கமின்றி பெரிய அளவில் போரிடவேண்டும்.  

குறுகிய எல்லைகளைக் கொண்ட கீழான எண்ணங்கள் மனதிற்குள் அடைபட்டுக் கிடக்கின்றபோது, நம்மைச் சுற்றி பாவங்கள் என்ற தூசிகள் படியக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிவிடும். ஆனால் மனித மனம் விரிவடைகின்றபோது, புன்னியத்தின் ப்ரகாசம் அதிகரித்துக்கொண்டே போய், மனித இனமே தெய்வீகத்தின் சிகரத்தை தொடும்.


 விஸ்தாரஹ ஸர்வபூத்தஸ்ய விஷ்னோர்விஷ்வமிதங் ஜகத்

த்ரஸ்டவ்யமாத்ம வத்தஸ்மாத பேதேன விசக்ஸணேஹ

(விஷ்ணுபுராணம்)


பொருள்: இந்த அகிலமே விஷ்ணுவின் பஞ்சபூத காரணிகளின் விரிவாக்கம்தான். அதனால் அறிவுடைய மனிதர்கள் இந்த அகிலம் முழுவதையும் தனது சொந்தம் என்ற உணர்வோடு பார்ப்பார்கள். 

மனிதர்களால் மட்டும்தான் தங்களுடைய மனதை விரிவாக்கிகக்கொள்ள முடியும். ஏனென்றால் அவர்களுக்கு மட்டும்தான் பாகவத தர்மத்தை பின்பற்றுகின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 

இப்போது கேள்வி என்னவென்றால், மனிதர்கள் எப்படி பாகவத தர்மத்தை பின்பற்ற முடியும் என்பதும், எப்போது அவர்கள் அதை துவங்க வேண்டும் என்பதும்தான்.

மனிதர்கள் பாகவத தர்மத்தை அவர்களுடைய குழந்தைப் பருவம் முதலே, அதாவது ஐந்து வயது முதலே பயிற்சி செய்ய வேண்டும். மனித வாழ்வானது மற்ற உயிரினங்களின் வாழ்வை விட அதிக மதிப்புள்ளது. ஆகையால் ஒவ்வொரு உயிரினமும் தாங்கள் அறியாமலேயே மனித உடலைப் பெறவேண்டும் என்ற ஆவலை கொண்டுள்ளன. ஏனென்றால் மனித உடலுடன்தான் ஆன்மீக பயிற்சிகளையும் பெருமைக்குரிய காரியங்களையும் செய்ய முடியும். பாகவத தர்மத்தை குழந்தைப் பருவம் முதலே பயிற்சி செய்ய வேண்டும் என்று சித்தாந்தங்கள் கூறுகின்றன. பாகவத தர்மத்தை பின்பற்றுகின்றவர்கள் இந்த படைப்பு முழுவதையும் விஷ்ணுவின் தோற்றமாகத்தான், அதாவது பரமபுருஸனுடைய தோற்றமாகத்தான் பார்க்கிறார்கள். ஒரு சிறிய விஷ்ணுவின் சிலை அவர்களுக்கு விஷ்ணுவின் உண்மையான தோற்றமாக தெரிவதில்லை. அவர்கள் விஷ்ணுவின் படைப்பின் தோற்றத்தைத்தான் நேசிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் பரமபுருஸனோடு வைத்திருக்கின்ற அன்பான உறவிலிருந்து பிரிந்திருக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

" அன்யமமதா விஷ்ணோரமதா ப்ரேமஸங்கதா "

விஷ்ணு மீது மட்டுமே வைத்திருக்கின்ற அன்புக்கு ப்ரேம அல்லது தெய்வீக காதல் என்று பெயர். ஏனென்றால் அவர்கள் இந்த பிரபஞ்சம் முழுவதையும் தன்னுடைய மனதுக்குள் வைத்திருக்கின்ற பரமபுருஸன் மீது அன்பை வைத்துள்ளனர். இந்த பஞ்சபூத உலகை படைத்ததன் மூலம் அந்த பரமபுருஸன் தன்னால் படைக்கப்பட்ட பொருள்கள் யாவும் தன்னை தொடர்புகொள்ளும்படி வைத்திருக்கிறான். ஒரு சிறிய புல்லின் கீற்றுக்கூட அவனுடைய படைப்பாகும். ஆகையால் பாகவத தர்மத்தை பின்பற்றுகின்றவர்கள், தங்களுடைய மனதை விரிவாக்குகின்றவர்கள்,  நிச்சயமாக இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளையும் அவர்களுடைய நாயகனின் தோற்றமாகத்தான் பார்ப்பார்கள். அதனால் அவர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் சமமான மரியாதையைத்;தான் தருவார்கள்.

ஆன்மீக முன்னேற்றத்தை ஊக்குவிக்காமல், மனித மனங்களை குறுகிய வட்த்துக்குள் வைத்துவிட்டு, பலவகையான கற்பனை வடிவங்களை கடவுள்கள் என்று சித்தரிக்கின்ற எந்த ஒரு மதமோ அல்லது நெறியோ பாகவத தர்மத்திலிருந்து எட்டமுடியாத தூரத்தில் இருப்பவையே ஆகும். பாகவத தர்மத்தில் வேறுபாடுகளுக்கும் வேற்றுமைகளுக்கும் இடமே கிடையாது. மனித மனங்கள் பிரிந்துகிடப்பதற்கு காரணமாகவும், பிரிக்க முடியாத மெய்பொருளிடம் இருந்து தூரமாக விரட்டியடிக்கின்ற மனப்பாங்கையும் வளர்க்கின்ற ஒரு மதமோ அல்லது தத்துவமோ பாகவத தர்மத்துக்கு எதிரானது ஆகும். பாகவத தர்மத்தை பின்பற்றுகின்ற மனிதர்கள் பிரிவினைகளுக்கும் பிரித்துப்பார்க்கின்றவர்களுக்கும் இடையே ஒற்றுமையையும்,: இணைப்பையும் உருவாக்க தீவிரமாக பாடுபடுவார்கள்.

பாகவத தர்மத்தின் இரண்டாவது காரணி ரஸ என்பது. இந்த பிரபஞ்சத்தில் எது நடந்தாலும், அது இயற்கையாக நடந்தாலும், இயற்கைக்கு அப்பாற்பட்டதாக நடந்தாலும், அது அந்த பரமாத்மனின் விருப்பத்தில்தான் நடைபெறுகிறது. எல்லாமே அவனுடைய கருணையை நம்பித்தான் இருக்கின்றன. மனிதர்கள் எதை நினைத்தாலும், சொன்னாலும், செய்தாலும் அது அந்த இறைவனின் அருளால்தான் நடைபெறுகிறது. இந்த பிரபஞ்சம் முழுவதும் அந்த பரமாத்மனின் மனக்காட்சிதான். அனைத்துமே அந்த பரமாத்மனுடைய நினைவலைகளில் இருந்தே வெளித்தோன்றுகின்றன. இவ்வாறு ஒரே சமயத்தில் அவன் எல்லாவற்றையும் பார்க்கின்றான்.

மனித மனதிற்கும் இறை மனதிற்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், மனித மனம் எதை கற்பனை செய்தாலும் அது சில சமயங்களில்தான் செயல் வடிவம் பெறுகிறது. மனிதர்களுடைய மனதின் காட்சியை புறத்தில் காட்டுவது என்பது, அது முழுமையாக ஒருமுகப்படும்போதுதான் நடைபெறுகிறது. ஆனால் இறை மனதுக்கு எதுவுமே வெளியில் கிடையாது, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அவனுடைய மனதிற்குள்தான் இருக்கிறது. இறைவனுடைய எண்ண அலைகள் நமக்கு வெளியிலே தெரிவதுபோல இருக்கிறது. இறைமனதின் எண்ண அலைகள் யாவும் அவனுடைய ஸ்வரஸ(ஓட்டம்)ஆகும். அதுபோலவே மனித மனதிலிருந்தும் பலவகையான அலைகள் வெளிவருகின்றன. முந்தய விஷயத்தில் இறை மனதின் அலைகள் பரமாத்மனின் ஸ்வரஸவாக இருக்கிறது, பிந்தய விஷயத்தில் மனிதர்களுடைய மனதிலிருந்து உருவாகின்ற பல்வேறு எண்ண அலைகள் ஜீவாத்மாக்களின் ஸ்வரஸவாக(ஓட்டமாக) இருக்கிறது.

ஜீவாத்மாக்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவையாக இருக்கின்றன. அதற்கு காரணம் அவற்றின் தனிப்பட்ட ஓட்டங்களில் உள்ள வித்தியாசம்தான். எல்லா ஜீவாத்மாக்களும் தங்களுடைய சொந்த விருப்பத்தின்படி ஓடுகின்றன. அவை தங்களுடைய மனதின் எண்ணங்களையும் செயல்களையும் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பத்தின்படி ஓடச்செய்கிறார்கள். அதனால்தான் ஜீவாத்மாக்களின் எண்ணங்கள், செயல்கள் மற்றும் வாழும்முறை ஆகியவை மிகவும் வேறுபட்டவையாக இருக்கின்றன. நீங்கள் ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு செருப்பு தைப்பவர் உங்கள் பாதங்களை பார்க்கிறார், ஒரு சலவைத் தொழிலாளி உங்களுடைய ஆடைகளை பார்க்கிறார், ஒரு சவரத்தொழிலாளி உங்கள் தலையைப் பார்க்கிறார். அவர்களுடைய பார்வையில் இருக்கின்ற வித்தியாசம், அவர்களுடைய தனிப்பட்ட மனஓட்டத்தில் உள்ள வித்தியாசத்தால்தான் ஏற்படுகிறது. அவ்வாறே

எல்லா ஜீவாத்மாக்களும் அவரவருடைய எண்ணத்தின் ஓட்டத்தை, பரமாத்மனின் எண்ண ஓட்டங்களுக்குத் தக்கவாறுதான் ஓடவிடுகிறார்கள். ஒவ்வொரு ஜீவாத்மாவின் எண்ண ஓட்டங்களும் நேரடியாக பரமபுருஸனால்தான் கட்டுப்படுத்தப்படுகிறது,  உங்களுடைய அறிவினால் அல்லது விருப்பங்களால் பரமபுருஸன் வழிநடத்தப்படவில்லை என்றும், உங்களுடைய அறிவும் விருப்பங்களும் அவனுடைய விருப்பப்படிதான் நடத்தப்படுகிறது என்றும் நான் அடிக்கடி சொல்லி இருக்கிறேன். அவனை கேள்வி கேட்கின்ற சந்தர்பம் உங்களுக்கு ஒருபோதும் கிடைக்காது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவனைச் சுற்றித்தான் நகர்ந்தாக வேண்டும். உங்களுடைய தனிப்பட்ட ஓட்டமானது பரமாத்மனின் ஓட்டத்தோடு ஒத்துப்போகவில்லையென்றால், உங்களுடைய விருப்பங்கள் ஒருபோதும் நிறைவேறாது. ஒவ்வொருவரும் நிறையவற்றை அடைய விரும்புகிறார்கள் ஆனால் அவர்களுடைய விருப்பங்களில் மிகச்சிறியவற்றைத்தான் பெறுகிறார்கள். ஒருவருடைய விருப்பங்கள் அந்த பரமாத்மனின் அலைகளோடு மிகச்சரியாக ஒத்துப்போகாவிட்டால் அவரால் ஒருபோதும் வெற்றியை பெறமுடியாது.


 கீ ஹபே இச்சாய் இச்சாத்தே கீ ஹய் க்ருஷ்ண இச்சா பினா ஃபல் ஃபலேனா 


தனி ஒருவருடைய விருப்பத்திற்கு ஏதேனும் மதிப்பு உள்ளதா? புரமாத்மனின் ஒப்புதல் இன்றி எதுவுமே வெற்றி பெறாது.

நீங்கள் எதையாவது அடைய விரும்புகிறீர்கள் ஆனால் உங்களுடைய விருப்பம் பரமாத்மனின் ஒப்புதலை பெறவில்லையென்றால், பிறகு உங்களுடைய காரியத்தில் நீங்கள் வெற்றியடையமாட்டீர்கள். இதுதான் பாகவத தர்மத்தின் இரண்டாவது காரணியாகிய ரஸதத்வம் என்பது. ரஸ தத்வம் என்றால் என்ன? மனிதர்கள் பரமபுருஸனிடம் ஆழமான அன்பை வைத்திருக்கும்போது அவர்களுக்கு அவனுடைய இயல்பு என்னவென்று புரிய ஆரம்பிக்கிறது, அவர்களும் அவனுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்கிறார்கள். அத்தகைய பக்தர்கள் இந்த உலகில் வெல்ல முடியாதவர்களாகவும் வெற்றியுடையவர்களாகவும் ஆகிறார்கள். நிறைய மனிதர்கள் அவனுடைய பெருமைகளைக் கண்டு திளைத்துப் போகிறார்கள். ஆனால் சாதகர்கள் அவனைப்போல பெருமையை அடைகின்ற இரகசியத்தையே அறிந்திருக்கிறார்கள். இவ்வாறு ரஸ சாதனாவின் அடிப்படையான பொருள் என்னவென்றால் ஒருவருடைய தனிப்பட்ட விருப்பங்களையும் ஆவல்களையும் பரமபுருஸனை நோக்கி செலுத்துவதுதான். இந்த வழியில் மட்டும்தான் ஒரு சாதகன் நிறைவேறுதல்களையும்(ரித்தி) வெற்றிகளையும்(ஸித்தி) அடைகிறான். சாஸ்திரங்களில் இதற்கு ராஸலீலா என்று பெயர். படைக்கப்பட்ட உயிர்கள் அவனுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு நடந்தாக வேண்டும், வேறு வழி கிடையாது. கல்வி, அறிவாற்றல் மற்றும் பதவி போன்ற அனைத்தையும் அவனை நோக்கி செலுத்தவில்லையென்றால், அவை அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடும். இந்த தலையாய உண்மையை உணர்ந்தபின் அறிவுடைய மனிதர்கள் “ ஓ பரமபுருஸா, உன்னிடம் கேட்பதற்கு ஒன்றும் இல்லை, நீ திருப்தி அடைந்தால் போதும், வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று சொல்லி பரமபுருஸனுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு நடக்க ஆரம்பிக்கிறார்கள். 

பாகவத தர்;மத்தின் மூன்றாவது காரணி சேவா என்பது, அதாவது தன்னலமற்ற தொண்டு. நீங்கள் ஒருவருக்கு எதையேனும் கொடுக்கின்றபோது அவரிடமிருந்து திருப்பி எதையேனும் எதிர்பார்த்தால் அது ஒரு வியாபார கொடுக்கல் வாங்கல் ஆகும். ஆனால் நீங்கள் செய்த சேவைக்காக திருப்பி எதையும் பெறவிரும்பவில்லை என்றால், அதுதான் உண்மையான சேவா என்பது. இங்குதான் உண்மையான சேவைக்கும் வியாபார சேவைக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடு. நீங்கள் செய்தி தாள்களில், பல விளம்பரங்களை பார்த்திருக்கலாம், அதில் சில நிறுவனங்கள், இத்தனை வருடங்களாக நாங்கள் மக்களுக்காக நீண்ட கால சேவை செய்து வருகிறோம் என்றெல்லாம் விளப்பரம் கொடுத்திருப்பார்கள். உண்மையாக யோசித்துப்பாருங்கள், எந்த வியாபார நிறுவனங்களாவது உண்மையான சேவை செய்கிறார்களா? என்று. அது அவர்களுடைய வியாபாரத்தை வேறு வழியில் பெருக்கிக்கொள்வதற்கான யுக்தி இல்லையா?

சேவை என்பது இரண்டு வகையானது. ஒன்று அகச் சேவை மற்றொன்று புறச்சேவை. இந்த பிரபஞ்சம் முழுவதும் பரமபுருஸனுடைய பெருமைகளை பறைசாற்றும் விதவிதமான தோற்றங்களே. ஆகையால் ஒரு மனிதர் குறிப்பிட்ட ஒரு உயிருக்கு சேவை செய்கின்றபோது அது பரமபுருஸனுக்கே சேவை செய்வதாகத்தான் அர்த்தம். நீங்கள் எங்கே இருந்தாலும், நீங்கள் என்ன தகுதியுடையவராக இருந்தாலும், நீங்கள் ஒரு குடும்பஸ்தராக இருந்தாலும், அல்லது ஒரு துறவியாக இருந்தாலும், நீங்கள் இந்த பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் சேவை செய்தேயாக வேண்டும். ஏனென்றால் அனைத்து தோற்றங்களும் அந்த பரமபுருஸனின் தோற்றங்களே. வாழுகின்ற உயிர்களுக்கு நீங்கள் சேவை செய்யும்போது உங்களுடைய கர்வம் தலைதூக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். நான் பரமபுருஸனுக்குத்தான் சேவை செய்கிறேன் வேறு யாருக்கும் அல்ல என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பரம புருஸன் உங்கள் முன்னால் அந்த வடிவில் வரவில்லையென்றால், அந்த உயிருக்கு சேவை செய்கின்ற வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்காது. அவனே உங்கள் முன்னால் ஒரு நோயாளியாக, ஒரு பிச்சைக்காரனாக, உங்களுடைய உதவியைப் பெறுவதற்காக வந்திருக்கிறான். உண்மையில் அந்த உதவியைப் பெறுகின்றவரைவிட நீங்கள் பெருமைக்குரியவர்தான், ஏனென்றால் பரமபுருஸனுக்கு சேவை செய்கின்ற வாய்ப்பை அவன் உங்களுக்குத் தந்திருக்கிறான். இவ்வாறு ஒவ்வொருவரும் புறச்சேவையை செய்தாக வேண்டும்.

ஜபம் செய்கின்ற போதும், தியானம் செய்கின்றபோதும் பரமபுருஸனுக்கு சேவை செய்கின்ற பாவனையோடு பயிற்சி செய்ய வேண்டும். இதுதான் அகச்சேவை என்பது. இதை ஒருவர் செய்துவிட்டால், அவருக்கு மிகவும் பலமான மன ஒருமுகத்தை அடைய முடியும். ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் இந்த சேவையை செய்ய வேண்டும். ஜபம் செய்கின்றபோது இந்த வகையான சேவை ஒருவரிடத்தில் முழுமையாக வந்துவிட்டால் ஒருவர் எல்லாவற்றையும் அடைந்துவிடுவார். சேவை மனப்பான்மை உள்ள ஒரு சாதகர் வெறும் நாம மந்திரத்தை திரும்ப திரும்ப சொன்னாலே மோட்சத்தை பெற்றுவிட முடியும். ஆனால் மிக உயர்ந்த ஆன்மீக பயிற்சிகளை செய்கின்ற ஒரு யோகி இந்த சேவையை செய்யாதபோது, ஆன்மீக வட்டத்துக்குள் எதையும் பெற முடியாது.

அகச் சேவையை சரியான முறையில் செய்யவில்லையென்றால், உண்மையான புறச்சேவை செய்ய முடியாது. அதனால்தான்,  

 'ஆத்மமோக்ஸார்த்தங் ஜகத்தித்தாய ச' என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அகச் சேவை, அதாவது ' ஆத்மமோக்ஸார்த்தம் ' அழிவில்லா நிலைக்கு வழிகாட்டுகிறது, புறச்சேவை, அதாவது ' ஜகத்ஹித்தாயச் ச' உங்களுக்கு உலக நன்மைக்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு அகச்சேவை மற்றும் புறச்சோவை ஆகிய இரண்டும் சமமான மதிப்பை பெற்றுள்ளன. புறச்சேவை உங்கள் மனதை தூய்மை செய்கிறது, அந்த தூய்மையான மனதால் தன்னுடைய இஸ்டாவுக்கு(இறைவனுக்கு) மிகச் சரியான அகச்சேவை செய்ய முடியும். எனவே ஒவ்வொரு சாதகனும் இந்த இரண்டு சேவைகளையும் செய்தாக வேண்டும். புறச்சேவை மற்றும் அகச்சேவை ஆகிய இரண்டையும் செய்வதில் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த இணைதல் நடைபெறுவது சாத்தியமே. இவ்வாறு பாகவத தர்மம் என்பது சமூக தர்மமாக, மனிதனுக்கு உரிய தர்மமாக, அனைவராலும் எளிதில் பின்பற்றக்கூடிய தர்மமாக இருக்கிறது. மனிதர்கள் இதை தெரிந்திருக்கின்றார்களோ இல்லையோ ஆனால் எல்லோருமே இந்த பாகவத தர்மத்தின் மையக்கருவை நோக்கி நகர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய தனித்தனியான பயணமும் கடைசியாக முடிவடைவது அந்த பரமபுருஸனிடத்தில்தான். எப்படி இந்த பூமி சூரியனை சுற்றி வருகிறதோ, நிலவு இந்த பூமியை சுற்றி வருகிறதோ, அதுபோலத்தான் ஒவ்வொரு மனிதரும் பரமபுருஸனை சுற்றி வருகின்றனர். உங்களுடைய சாதனா என்பது உங்களுக்கும் பரமபுருஸனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறைப்பதற்கான முயற்சியே அன்றி வேறொன்றுமில்லை.

ஒருவருடைய௮ நரம்பணுக்கள், சுரப்பிகள் மற்றும் துணை சுரப்பிகள் என்று எல்லாமே ஒருவருடைய தனிப்பட்ட எண்ண ஓட்டத்திற்ன்படிதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், பல்வேறு உடலமைப்புகளும்கூட இந்த தனிப்பட்ட எண்ண ஓட்டங்களுக்கு ஏற்றவாறுதான் படைக்கப்படுகிறது. மனதின் பல்வேறு எண்ண அலைகளும்கூட அந்த தனி மனிதனின் எண்ணம் செல்லுகின்ற பாதைக்கேற்றவாறுதான் புரிந்துகொள்ளப்படுகிறது. எல்லா ஜீவாத்மாக்களும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ இந்த பிரபஞ்சத்தின் மையக்கருவைத்தான் சுற்றிவந்துகொண்டு இருக்கின்றன. எவருமே பரம்பொருளிடமிருந்து பிரிக்கப்படுவதில்லை. வாழுகின்ற உயிர்கள் அதனதன் எண்ண அலைகளுக்கு ஏற்றவாறுதான் வெவ்வேறு வகையான உடலமைப்புகளை பெறுகின்றன. அவ்வாறு பெற்ற அவர்களுடைய மனதோடும் உடலோடும் அவை இந்த பிரபஞ்ச வட்டத்தை சுற்றிவந்து கொண்டு இருக்கின்றனர். இந்த நகர்தலானது அவர்கள் பரம புருஸனிடமிருந்து பிரிந்து இருக்கிறோம் என்ற நினைவு இருக்கின்ற வரைதான் நடைபெறுகிறது. ஆனால் இந்த ஒற்றைத் நீர்துளியானது பரந்து விரிந்த கடலை எந்தக் கணம் கண்டுகொண்டதோ அந்தக் கணத்தில் அது அந்த கடலோடு ஒன்றாய் கலந்துவிடுகிறது. இப்போது இந்த இரண்டுக்கும் இடையே இருந்த இடைவெளியானது மறைந்துபோய் இருவரும், தனித்து இருந்த நிலையும் இல்லாமல் போகிறது. இரண்டும் ஒன்றாய் ஆகிறது. ஆனால் இந்த முடிவான இணைதலை அடைகின்றவரையில் ஜீவாத்மாக்கள் எண்ணெய் செக்கை சுற்றிவருகின்ற மாடுகளைப் போல சுற்றிக்கொண்டே இருந்தாக வேண்டும்.

சாதகர்கள் விஸ்தார, ரஸ மற்றும் சேவா என்ற நற்காரியங்களை செய்து தங்களை பாகவத தர்மத்தில் நிலைநிறுத்திக்கொண்ட பொழுது, அவர்களுடைய பயணம் முடிவுக்கு வருகிறது. அவர்கள் அந்த மையக்கருவோடு, அந்த பரமபுருஸனோடு ஒன்றாய் இணைந்துவிடுகிறார்கள். அந்த நிலையிலே அவர்களுக்கு இந்த தெய்வீக விளையாட்டின் இரகசியம் புரிந்துவிடுகிறது. இதுதான் மனிதர்களின் உண்மையான தர்மம், இதுதான் பாகவத தர்மம்.


🌷 ஸ்ரீ ஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌷


(ஸுபாஷித ஸங்ரஹ 8ம் பாகத்திலிருந்து

 இதுதான் மனிதன் என்பதற்கு அடையாளம் 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


 “பகவத” என்ற சொல்லுக்கு “தெய்வீக சம்பந்தமான” என்றும் தர்ம என்ற சொல்லுக்கு “உள்ளடங்கிய பண்பு” என்றும் பொருள். ஆக, பாகவத தர்ம என்றால் “இறை உணர்வில் நிலைத்திருக்கச்செய்கின்ற வாழ்க்கைப் பாதை” என்று பொருள். தர்ம என்பது இயற்கையாய் உள்ள பண்பு அல்லது உள்ளடங்கிய பண்பாகும். அது ஒரு குறிப்பிட்ட வகையான ஆன்மீக வாழ்க்கை முறையாகும். இந்த அகிலத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் அதற்கொன்று சொந்தமான ஒரு பண்பை பெற்றுள்ளது அல்லது ஸ்வபாவத்தை பெற்றுள்ளது. ஸ்வ என்றால் சொந்த என்றும் பாவ என்றால் இயல்பு என்றும் பொருள். தீயின் உள்ளடங்கிய இயல்பானது, அது எதனோடு தொடர்பு கொண்டாலும் அதை எரித்துவிடும். மனிதர்களுடைய உள்ளடங்கிய அல்லது இயற்கையான இயல்பு, ஆன்மீகத்தை பயிற்சி செய்வது அகும். ஆன்மீக பயிற்சிக்கும் மனதின் மற்ற இயற்கை இயல்புகளுக்கும், அதாவது உண்பது, உறங்குவது போன்ற இயல்புகளுக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக காட்டுவதே இந்த “பாகவத தர்ம” என்ற பண்புதான். அதுதான் மற்ற உயிர்களின் பொதுவான இயற்கை பண்புகளுக்கும் மனிதனுக்கென்று உள்ள இயற்கை பண்புகளுக்கும் இடையே உள்ள உயர் பண்புகளை தெளிவுபடுத்துகிறது. மனிதனிடம் உள்ள கடவுளை நோக்கிச் செல்வதற்கான இயற்கை பண்பைத்தான் பாகவத தர்மம் சொல்கிறது. அந்தப் பண்புதான் மனிதனிடத்தில் இறைவனிடம் காட்டுகின்ற அன்பையும் கவர்ச்சியையும் எழுப்பிவிடுகிறது. உண்மையில் சொன்னால், ஒவ்வொரு மனிதனிடமும் அந்த இறைவனுக்கான அன்பும் ஈர்ப்பும் இருக்கிறது. இந்த ஈர்ப்பையும் அன்பையும் உணராத மனிதனை, மனிதன் என்று சொல்லவே முடியாது. அத்தகைய மனிதனை, மனித உடலோடு இருந்தாலும் மனிதனுக்கு கீழே உள்ளவன் என்றுதான் சொல்ல வேண்டும். பாகவத தர்மம்தான் மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. ஒரு திருடன் கூட தன்னுடைய இதயத்தில் இறைவனுக்கான அன்பை பெற்றிருந்தானேயானால், அவன் மனிதன் என்று சொல்லப்படுகின்ற தகுதியை பெற்றவன்தான். ஆனால் ஒழுக்கமுள்ளவன் என்றும் பெரிய பண்டிதன் என்றும் சொல்லிக்கொள்கின்ற மனிதர்கள், இறைவனிடத்தில் அன்பு இல்லாதவர்களாக இருந்தால், அவர்கள் மனிதர்கள் என்று அழைக்க தகுதி இல்லாதவர்களே. ஏனென்றால், அத்தகைய மனிதர்களிடத்தில் மனிதனுக்குரிய தர்மம் இல்லை. பாகவத தர்மத்தை வைத்துத்தான் மனிதர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். அவர்களிடத்தில் மற்ற உயிரினங்களிடத்தில் இல்லாத, இறைவனுக்கான ஈர்ப்பும் அன்பும் இயற்கையாகவே இருக்கும். அதனால்தான் மனிதர்கள் பெருமைக்குரிய உயிரினமாக இருக்கின்றனர், அத்தகைய பெருமை விலங்குகளுக்கு கிடையாது.


கீதையில் கிருஷ்ணர், ஒருவருடைய சொந்த தர்மத்தை பின்பற்றுவதுதான் சிறந்ததும் பாதுகாப்பானதும் ஆகும், மற்றவற்றின் தர்மத்தை பின்பற்றுவது மிகமிக ஆபத்தானது என்று சொல்லி இருக்கிறார். உடல் தேவைகளை திருப்தி செய்வதற்காக எடுக்கின்ற முயற்சிகள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொதுவானதே, ஆனால் இந்த முயற்சி ஆன்மீக நலனை பெறுவதற்கு வழிகாட்டாது. அதற்கு மாறாக, தங்களுடைய ஜடப்பொருள் ஆசைகளை நிறைவேற்றுவதில் மட்டும் முழுமையாக ஈடுபட்டிருப்பவர்கள், மிக மோசமான ஜடத்தன்மையைத்தான் அடைவார்கள். ஆகையால் பாகவத தர்மம்தான் மனித தர்மம் என்றபோது, அது கொஞ்சம் கடினமான பாதை என்றபோதிலும், மனிதர்கள் இந்தப் பாதையைத்தான் பின்பற்ற வேண்டும், மற்ற விலங்குகளின் பாதையை பின்பற்றக் கூடாது. அவ்வாறு விலங்குகளின் தர்மத்தை பின்பற்றினால் அவர்களுடைய மிகவிரைவான சீரழிவை யாராலும் தடுக்க முடியாது.

இங்கே தர்ம என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிப்பதல்ல என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மதங்களுக்கு ஒருவருடைய இயற்கைப் பண்பான இந்த பாகவத தர்மத்தோடு எந்த தொடர்பும் கிடையாது. கீதைக்கே ஒரு பிரிவு மக்கள் இப்படித்தான் தவறுதலாக விளக்கம் தந்திருக்கிறார்கள். இது மிகவும் துரதிஷ்டமானது. எல்லா மனிதர்களின் தர்மமும் ஒன்றே ஒன்றுதான் அது பிரிக்க முடியாதது, அந்த தர்மம்தான் பாகவத தர்மம். எனவே அந்த தர்மத்தில் உங்களை நிலைநிறுத்திக்கொள்ளுங்கள், உங்களுடைய வெற்றி நிச்சயமானது.


🌷ஸ்ரீ ஸ்ரீ ஆனந்தமூர்த்தி🌷


(ஸுபாஷித ஸங்ரஹ 8ம் பாகத்திலிருந்து)