Monday, 4 November 2019

குருவுக்கும் சீடனுக்கும் உள்ள பந்தம்

 குருவுக்கும் சீடனுக்கும் உள்ள பந்தம்
****************************************
தாதாவிடம் பாபா சொல்கிறார்:

ஆனந்த மார்க்க தந்த்ர நெறியும் சோதனைகளை கொண்டதே என்றும் ஆனால் அவை வேறுவிதமாக கையாளப்படுகின்றன என்றும் பாபா கூறினார். தந்த்ர நெறியின் மிக முக்கியமான பகுதியானது சீடர்களுக்கு குருவால் தரப்படுகின்ற சோதனைகளும், குருவின் முழுமையான திருப்தியும்தான் என்றார். தானும் இத்தகைய சோதனைகளை கையாள்வதாகவும் ஆனால் அவை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்துள்ளதாகவும் பாபா விளக்கினார். ஆனந்த மார்கத்தில் உபதேசம் வாங்குவது மிகவும் எளிது. சோதனைகள் வாழ்வின் பிற்பகுதியில்தான் வரும். அப்போது பல்வேறு மோதல்கள் மற்றும் பிரச்சனைகள் தோன்றும், அப்போது ஒரு ஆன்மீக சாதகன் தன்னுடைய ஆன்மீக பயிற்சியை கைவிடும் நிலை கூட வரும். அத்தகைய கடுமையான பிரச்சனைகளையெல்லாம் உறுதியாக நின்று வென்றுவிடுவானேயானால், அப்போதுதான் அந்த ஆன்மீக சாதகனுக்கு குருவின் அருள் கிடைக்கும். ஆன்மீக நிலையை உணரும் பாக்யமும் கிடைக்கும்.
பாபா சற்று விரிவாக கூறினார், “நான் உன்னுடைய கையை பற்றிக்கொள்ளும்போது, உன்னை முடிவான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீ நான் சொல்லும் அறிவுரைப்படி நடக்கவில்லையென்றால், நீ உன்னுடைய கையை என்னிடமிருந்து எடுத்துவிட்டாய் என்றுதான் அர்த்தம், ஆனாலும் நான் என்னுடைய கையை விடமுடியாது. நான் உன்னை ஏற்றுக்கொண்டுவிட்டேன் அதனால் நீ என்னுடைய அறிவுரைகளின்படி நடந்தாலும் நடக்காவிட்டாலும் உன்னை கடைசிவரை அழைத்துச் செல்வேன். நீ சாதனா செய்தாலும் செய்யாவிட்டாலும் அதை பொருட்படுத்த மாட்டேன். ஆனால் எந்த நிமிடம், “நான் உன்னை நம்ப மாட்டேன், நான் உன்னை என்னுடைய குருவாக ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று சொல்கிறாயோ அப்போது என்னுடைய கைகள் உன் கைகளை விட்டுவிடும்” என்று பாபா கூறினார்.
பிறகு இரண்டு கேள்விகளை என்னிடம் கேட்டார் பாபா, பிறகு அதன் பதிலையும் அவரே சொல்லிவிட்டார். முதலாவது: சாதனா என்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்றார். உன்னுடைய குருவை திருப்தி செய்வதே சாதனா என்றார். அடுத்தது: குருபூஜை என்றால் என்ன? என்றார். குருவின் ஆணைகளை நிறைவேற்றுவதே குருபூஜை என்று கூறினார்.
பாபாவின் நீண்ட மற்றும் விவரமான விளக்கங்கள் எனக்கு மிகவும் அர்த்தமுடையதாக இருந்தது. என்னுடைய மனதை குழப்பிக்கொண்டிருந்த அத்தனை கேள்விகளும், தொந்தரவு செய்துகொண்டிருந்த அத்தனை கேள்விகளும் இப்போது புகைபோல் மறைந்து போனது. பாபாவின் சொற்கள் இப்போது பளிங்குபோல் தெளிவாக புரிந்தது. இப்போதுதான் பாபா சொன்ன உதாரணங்கள், அதாவது மலைமீது பல்வேறு உயரங்களில் இருந்து கீழே விழுந்தால் என்ன ஆகும் என்ற உதாரணங்களும், சைக்கிள், மோட்டார் சைக்கிள், இரயில், விமானம் மற்றும் ராக்கெட் போன்ற வாகனங்களில் இருந்து விழுந்தால் என்ன ஆகும் போன்ற உதாரணங்களும், எதற்காக பாபா இதையெல்லாம் சொன்னார் என்பதும் இப்போதுதான் என் உணர்வுகளுக்கு எட்டியது. அவர்கள் ஏன் வெளியேறினார்கள் என்பதும் அவர்களுடைய தலையெழுத்து என்னவாக இருக்கும் என்பதும் மிகத் தெளிவாக புரிந்தது. என்னுடைய சாதனாவின் உண்மையான பொருள் என்ன என்பதையும் புரிந்துகொண்டேன். நாம் நம்முடைய பொறுப்புகளை மறந்திருக்கலாம்,  ஆனால் பரமபுருஸன் நமக்காக ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை அவன் ஒருபோதும் மறப்பதில்லை.
பட்னாவில் அந்த குளிரான காலைப் பொழுதில் பாபாவின் பக்கத்தில் நடந்துகொண்டே என் கண்கள் ஆனந்த கண்ணீரை வடித்துக்கொண்டிருந்தது. என்மீது அவர் வைத்திருந்த ஆழமான அன்பையும், அவர் என் மனக் குழப்பங்களையெல்லாம் எவ்வளவு பொறுமையாக நீக்கினார் என்பதையும், சாதனாவுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை எவ்வளவு அழகாக காட்டினார் என்பதையும், குருவிடம் முழுமையான சரணாகதி இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக விளக்கிய அழகையும் நான் உணர்ந்து உணர்ந்து ஆனந்த பரவசமடைந்தேன்.
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-பாபா நாம் கேவலம், பாபா நாம் கேவலம், பாபா நாம் கேவலம்-.-.-.-.-.-.-.-.-.-.-.--.- "குருவின் ஏழு சோதனைகள்" என்ற பதிவில் இருந்து......

தமிழாக்கம்: அருண்குமார்🙏

No comments:

Post a Comment