Monday, 12 October 2020

கிருஷ்ணன் ஒரு போதும் பால்காரிகளின் வீட்டில் வெண்ணெயைத் திருடவில்லை. 
-------------------------------------------------------------------------------------------------------------------------
" ஹரத்தி பாபானீத்யர்த்தே ஹரி ". ' ஹரண் ' என்றால்  ' திருடுவது '. அதனால் ஹரி என்றால் " திருடுபவன் " என்று பொருள். இது என்ன விந்தை! ஹரி எதற்காக திருட வேண்டும்? இது இயம நியமத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு புறம்பாக இருக்கின்றதே! இது மிகவும் தவறாயிற்றே! அவன் இந்த கொள்கைகளை மீறி நடப்பான் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படியானால் அவன் எதற்காக இதைச் செய்கிறான்? நிச்சயமாக பரமபுருஸன் தான் படைத்த உயிர்கள் யாவும் செல்வ செழிப்போடும், நலமோடும் வாழவேண்டும் என்றுதான் விரும்புகின்றான். மனிதர்கள் ஒவ்வொரு பிறவியிலும் பாவங்களை சேர்த்துக்கொண்டே இருக்கின்றனர். அவற்றை கழிப்பதற்காக இருபது பிறவிகளாவது  எடுத்தாக வேண்டும். அப்படியென்றால் மனித இனத்தின் எதர்காலமே இருண்டுபோய் கிடக்கும் என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதானா? ஒரு பிறப்பில் செய்த பாவங்களின் சுமையே சுமக்க முடியாத பாரமாய் இருக்கின்றபோது, இருபது பிறவிகளாக சேர்த்து வைத்திருக்கின்ற பாவங்களை சுமப்பது எத்தனைத் துன்பமானது என்று கற்பனை செய்து பாருங்கள். மனிதர்களால் இத்தனை பெரிய சுமையை சுமக்க முடியும் என்று எப்படி நம்மால் எதிர்பார்க்க முடியும்?
இங்கே விமோக்ஷனத்திற்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதுதான் பரமபுருஸன். அவன் தன்னுடைய அன்புக்குரிய பிள்ளைகள் மீது ஆழ்ந்த அக்கரை கொண்டுள்ளான். இந்த நிலையில் அவன் என்ன செய்கிறான்? தன்னுடைய பக்தர்களிடம் அவன் சொல்கிறான், " என் குழந்தைகளே, உங்களுடைய பாவங்களை என்னிடத்தில் கொடுத்துவிடுங்கள், இல்லையென்றால் உங்களுக்கு எதிர்காலமே கிடையாது. இத்தனைப் பெரிய பாவச் சுமைகளை எத்தனை பிறவிகளுக்குத்தான் உங்களால் சுமக்க முடியும்? உங்களுடைய சுமையை என்னிடத்தில் தந்துவிடுவதுதான் நல்லது " என்று சொல்கிறான். சரி, அப்படி பரமபுருஸன் கூறினாலும் பக்தர்கள் தங்களுடைய பாவச் சுமையை பகவானிடம் கொடுத்துவிட சம்மதிக்கிறார்களா என்பதுதான் இங்கே எழுகின்ற கேள்வி. இல்லை, அவர்கள் கொடுக்கமாட்டார்கள். அதற்கு மாறாக அவர்கள், " நாங்கள் உனக்கு இனிப்புகளை தருவதற்குத் தயாராக இருக்கிறோம், ஆனால் எங்களுடைய பாவங்களை எப்படி உன்னிடம் தரமுடியும்?, மலர் மாலைகளை எங்களால் தர முடியும் ஆனால் பாவங்களைத் தர முடியாது " என்று கூறுகிறார்கள். எந்த பக்தனும் இதைச் செய்ய ஒத்துக்கொள்ள மாட்டான். எப்போதாவது இதைச் செய்யலாம் என்ற எண்ணம் ஒரு பக்தனுடைய மனதில் தோன்றினாலும் அவனோ அல்லது அவளோ நிச்சயமாக " இல்லை, இல்லை என்னால் என்னுடைய பாவங்களைத் தர முடியாது " என்றே சொல்வார்கள். ஆனாலும் இங்கே உண்மை என்னவென்றால், பகவான் பக்தர்களுக்குச் சொந்தமானவன். ஆகையால் அவர்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு எது தேவையோ அதை நிச்சயமாகச் செய்வான். அதனால் அவர்களுடைய பாவங்களை திருடிக்கொள்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியே கிடையாது. ஆகையால் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களுடைய பாவங்களை எடுத்துக்கொள்கிறான். மற்றவர்களுக்குச் சொந்தமான பொருளை அவர்களுடைய அனுமதி இல்லாமலேயே எடுத்துக்கொள்கின்ற செயலை நாம் என்னவென்று சொல்வோம். திருட்டு என்றுதானே சொல்வோம். எனவே அவன் திருடுகிறான், பாவங்களைத் திருடுகிறான். அதனால்தான் அவனை ஹரி என்று சொல்கிறோம். சரி, பாவங்களைத் திருடியபிறகு பக்தர்களுக்கு என்ன நடக்கிறது? அவர்களுடைய மனம் தூய்மையாகிறது. பொதுவாகவே மனித மனத்தில் பல்வேறு குறைபாடுகளும் பலவீனங்களும் இருக்கும். ஆனால், மனிதர்கள் தங்களுடைய அறிவைத் தூய்மையாக்கி, ஆன்மீகப் பயிற்சிகளைச் சரியாக செய்து வந்தார்களேயானால் அவர்களுடைய மனம்   மேல் நிiலையை நோக்கிச் செல்லும். அதாவது ஜடநிலையிலிருந்து நுண்ணிய நிலையை நோக்கிச் செல்லும். உதாரணத்திற்கு வெண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். தயிரை கடைகின்றபோது அதனுடைய முக்கிய சாரமாகிய வெண்ணெயானது மோர் பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. அதுபோலத்தான் பாவங்கள் திருடப்பட்ட பிறகு மனத்தின் உண்மையான சாரமாகிய ஆத்மாவானது அந்த மனத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. அதனால்தான் ஹரியை " வெண்ணெய் திருடன் " என்று விளையாட்டாக அழைப்பார்கள். இதை அப்படியே சொல்லின் பொருளாக பார்ப்பது தவறு. கிருஷ்ணன் ஒரு போதும் பால்காரிகளின் வீட்டில் வெண்ணெயைத் திருடவில்லை.

🌷ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி🌷

(ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து)

 தத்வபாவாத் என்றால் என்ன?

👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺

தத்வபாவாத் என்றால்; சமஸ்கிருதத்தில் தத் என்றால் அது என்றும் அதனோடு “த்வ” என்ற பிற்சேர்க்கை சேரும்போது அது ஒரு பண்புப் பெயராக மாற்றம் அடைகிறது. எனவே 'தத்வ' என்றால் 'அதுவாதல்' என்று பொருள். இங்கே அது என்பது  ப்ரஹ்மத்தை குறிக்கிறது. ப்ரஹ்ம என்பது ஒரு பொதுப்பால் ஆகும். பரம புருஸன், அதாவது மெய்யறிவு தத்துவம் என்பது ஆண்பால் ஆகும். பரம ப்ரக்ருதி, அதாவது இயக்க தத்துவம் பெண்பால் ஆகும். ப்ரஹ்ம என்பது பொதுபால் ஆகும். இங்கே அதுவாதல் என்றால் ப்ரஹ்மமாக ஆதல் என்று பொருள். தத்வபாவாத் என்றால், உலகியல் எந்த பணிகளை செய்யும்போதும், நீங்கள் அந்தப் பொருளை ப்ரஹ்மமாக பாவிக்க வேண்டும். அதேபோல மனதில் எதை நினைத்தாலும் உங்களுடைய அந்த எண்ணத்தின் பொருளை ப்ரஹ்மமாக பாவிக்க வேண்டும். இதுதான் தத்வபாவாத் என்பது.


🌷 ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌷


(சுபாஷித சங்ரஹ பாகம் 18ல் இருந்து)

Sunday, 11 October 2020

 அனுதியானம் என்றால் என்ன?

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 


தியானத்தின் எல்லைக்குள் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று தாரணா மற்றொன்று த்யான. புறத்தில் உள்ள ஒரு பொருளை உங்களுடைய மனதின் எல்;லைக்குள் பிடித்து வைக்க முயலுகின்ற செயலுக்கு தாரண என்று பெயர். எனவே தாரணாவில் அசைவற்ற ஒரு சக்தி இருக்கிறது. ஆனால் மனதினுள் ஏதேனும் ஒன்று நகருகின்றபோது, அதாவது அந்த நகரும் பொ்ருளை, அந்த நகர்தலை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான், அல்லது தொடர்வதுதான்   தியானம் என்பது. எனவே தியானத்தில் ஒரு இயக்க சக்தி இருக்கிறது.


 தியானக்கிரியா என்பது வெல்லப்பாகில் உள்ள நூலிழை போன்றது. வெல்லப்பாகை ஊற்றும்போது ஒரு நூல் இழை உருவாகிறது. அதில் ஒரு ஆற்றல் இருக்கிறது, அந்த நூலில் ஒரு இயக்கம் இருக்கிறது. ஆனால் கண்ணுக்கு அது செயலற்றதாக தெரிகிறது. தியானக்கிரியாவும் அதுபோலத்தான். புரிகிறதா உங்களுக்கு?

அனுதியானம் என்றால் என்ன? அபித்யானம் என்றால், நீங்கள் பரம்பொருளை உங்களுடைய தியானப் பொருளாய் ஏற்றுக்கொண்டீர்கள், ஆனால் உங்களுடைய இறைவன் உங்களை வேண்டாம் என்று சொல்கிறான், உதாரணமாக நீங்கள் ஒரு பாவி, அதனால் உங்கள் இறைவனை நீங்கள் அடைவதை அவன் விரும்பவில்லை. அவன் உங்களை விட்டு தூரமாக செல்ல முயற்சிக்கிறான். ஆனால் இந்த இடத்தில் அவனை உங்கள் மனதால் விரட்டி பிடிக்க வேண்டும். இந்த மனதால் ஓடி பிடிக்கின்ற செயல்தான் அனுத்யானம் என்பது. நீங்கள் “ஓ என் இறைவா, நான் ஒரு பாவியாக இருக்கலாம் ஆனால் நான் உன்னை விடமாட்டேன், உன்னை பிடித்தே தீருவேன்” என்று சொல்ல வேண்டும். இத்தகைய மனநிலை ஏற்படுகின்றபோது அதைத்தான் அனுத்யானம் என்று சொல்கிறோம். எனவே இந்த அனுத்யானம் இல்லாமல் அவனை அடையவே முடியாது.


🌷ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி🌷


(சுபாஷித சங்ரஹ பாகம் 18ல் இருந்து)

 ப்ரணிதான என்றால் என்ன? 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

ப்ரணிதான என்றால் மனதின் எல்லா இயல்பூக்கிகளையும் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு கொண்டு வந்து, அதாவது மனிதனுடைய மனதின் முழு அமைப்பையும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவித்து, அந்த குவிந்த மனத்தை அந்த பரம்பொருளை நோக்கி செலுத்துவது. இப்படி குவிக்கப்பட்ட மனதின் இயக்கத்துக்குத்தான் ப்ரணிதான என்று பெயர். ப்ரணிதான என்பது ஒரு சமஸ்கிருத பெயர்சொல் ஆகும். இதுதான் ப்ரணிதான என்பதன் உளவியல் ரீதியான விளக்கம். ஆனால் நடைமுறையில் ப்ரணிதான என்றால், அதில் ப்ரணிதான மூல ஓசையின் சந்தத்தோடு மனதின் சந்தமும் இணைந்திருக்க வேண்டும். மூலஓசையின் சந்தம் மட்டும் இருந்தால் அதற்குப் பெயர் ஜபக்கிரியா. ஆனால் அந்த மூலஓசையின் சந்தத்தோடு மனதின் சந்தமும் ஒத்திசைந்து இருந்தால், அதற்குப் பெயர்தான் ப்ரணிதான. உதாரணமாக, நீங்கள் ராம, ராம, ராம, ராம என்று சொல்கிறீர்கள், இதற்குப் பெயர் ஜபக்கிரியா. ஜபக்கிரியாவில் மூன்று வகை இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.  ராம, ராம, ராம - இந்த ஓசைக்கு வாச்சனிக ஜப என்று பெயர். அதாவது சத்தமாக உச்சரிப்பது. அடுத்த வகையான ஜபத்தில்,  ராம, ராம, என்று மெதுவாக சொல்வது, நீங்கள் அந்த ஓசையை உச்சரிக்கிறீர்கள், உங்களால் மட்;டும் அந்த ஓசையை கேட்க முடிகிறது, ஆனால் மற்றவர்களால் அந்த ஓசையை கேட்க முடியாது. இதற்குப் பெயர் உபாம்சு ஜப. மூன்றாவது ஜபமானது, மனதிற்குள்ளே உச்சரிப்பது. அது உங்களுக்கு கேட்கிறது, உங்களுடைய மனதின் காதில் கேட்கிறது, உங்களுடைய உடலின் காதில் கேட்காது. இதற்குப் பெயர் மானசீக ஜப. மானசீக ஜபம்தான் மிகச் சிறந்தது. ஆனால் சாதனா பயிற்சியில் மோட்சத்தை அடைவதில் இந்த ஜபக்கிரியா பெரிய அளவில் உதவாது. அதனால்தான் தந்த்ரவில் கீழ்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது.


உத்தமோ ப்ரஹ்ம சத்பாவோ மத்யமா த்யான-தாரணா

ஜபஸ்துதிஹ் ஸ்யததாமா மூர்த்திபூஜா தமாதமா

என்று. 

மிகச் சிறந்த முறை ப்ரஹ்ம சத்பாவ முறைதான். இரண்டாவது இடம் தாரணா மற்றும் தியானம், மூன்றாவது இடம் ஜப ஸ்துதி, இது அதம ஆகும். கடைசி இடத்தில் இருப்பது மூர்த்தி பூஜா அதாவாது சிலை வழிபாடு. இது அதமாதம ஆகும். இங்கே விஷயம் என்னவென்றால், ஜபக்கிரியாவில் மூலஓசையின் சந்தம் மட்டும்தான் இருக்கிறது, ராம, ராம, ராம, ராம.  ஆனால் நான் சொன்னேன் அல்லவா? ப்ரணிதானத்தில் இந்த மூலஓசையின் சந்தம் மனதின் சந்தத்தோடும் ஒத்திசைந்து இருக்க வேண்டும் என்று. அதாவது மனதுக்குள் ராம, ராம, ராம என்ற ஓசையை உச்சரிக்கிறீர்கள் அதே சமயம் ராமனைப் பற்றியும் சிந்திக்கிறீர்கள். இதில் ஒத்திசைந்த நிலை பராமரிக்கப்படுகிறது. இந்த ஒத்த சமநிலை இல்லாத ஜபக்கிரியாவில் என்ன நடக்கும்? நீங்கள் ராம, என்று உச்சரிக்கிறீர்கள், அதாவது “ரா” என்ற எழுத்தை உச்சரித்த பிறகு அடுத்த எழுத்தாகிய “ம” என்ற எழுத்தை நினைக்கிறீர்கள். ராம! மீண்டும் “ம” எழுத்தை உச்சரித்த பிறகு நீங்கள் “ரா” எழுத்தை நினைக்கிறீர்கள். இப்போது உங்களுடைய ஜபக்கிரியாவின் அடுத்த நிலை “மரா” என்று ஆகிவிடுகிறது. அதாவது “ம” எழுத்தை உச்சரித்த பிறகு “ரா” எழுத்தை உச்சரிக்கிறீர்கள். இப்போது உங்களுடைய இஸ்ட மந்திரம் “மரா” என்று ஆகிவிட்டது, “ராம” அல்ல. இப்படி ஜபக்கிரியா செய்வதால் ஒரு பயனும் இல்லை. மனதின் சந்தத்தோடு ஒத்த சமநிலை ஏற்படுகின்றவரை அல்லது ஏற்படாதவரை இது பயன் இல்லாததே. எங்கே மூலஒசையின் சந்தத்திற்கும் மனதின் சந்தத்திற்கும் ஒத்த சமநிலை இருக்கிறதோ அதுவே ப்ரணிதான ஆகும். ஆனந்த மார்கத்தில் உங்களுடைய ஈஷ்வர ப்ரணிதானம் ஜபக்கிரியா அல்ல. அது ப்ரணிதானம் ஆகும். இந்த ப்ரணிதானம் தியானத்தின் எல்லைக்குள் வருவது, ஜபக்கிரியாவின் எல்லைக்குள் வருவது அல்ல.


🌸 ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌸


சுபாஷித சங்ரஹ பாகம் 18

 நீங்கள் எதை தியானிக்க வேண்டும்? 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

புன்னியம் மற்றும் பாவம் என்பதெல்லாம் கால எல்லைக்குள் நடைபெறுபவை. இவையெல்லாம் ஒரு மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவில் எதுவும் செய்துவிடமுடியாது.

உதாரணமாக, பல சிறுவர்கள் ஒரு சாலையில் சென்றுகொண்டிருக்கிறார்கள், அதில் ஒரு சிறுவன் சாக்கடையில் விழுந்துவிடுகிறான். அவனுடைய ஆடையும் அவனுடைய உடலும் சகதியாகிவிட்டது. அந்த வழியில் செல்லுகின்ற மற்றவர்கள் வேண்டுமானால் அந்த பையனைப் பார்த்து சிரிக்கலாம், ஆனால் அந்த பையனுடைய தந்தை அவனை அந்த நிலையில் பார்க்கும்போது அவர் என்ன செய்வார்? அவர் தன்னுடைய சொந்த மகனைப் பார்த்து சிரிப்பாரா? மாட்டார், மாட்டார் சிரிக்கமாட்டார். அவர் என்ன செய்வார்? அவரே அந்த சாக்கடையில் இறங்கி அவருடைய மகனை தூக்கி தன்னுடைய மடிமீது வைத்து அவனுடைய ஆடைகளை சுத்தம்செய்வார், அவனுடைய உடலை சுத்தம் செய்வார். அதற்குப்பிறகு அவனிடம், “என் மகனே, வழியில் கவனமாக நடக்க வேண்டும்” என்று அறிவுரை கூறுவார்.


பாவம் செய்தவர்கள் இந்த சாக்கடையில் விழுந்த பையனைப் போன்றவர்கள்தான். உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர், மேலானவர் மற்றும் கீழானவர், எல்லோருமே அவருக்கு சமமானவர்கள்தான். ஏனென்றால் சொர்கம் என்பதும் அவருடைய படைப்பே, நரகம் என்பதும் அவருடைய படைப்பே. அவர் சொர்கத்தில்தான் இருக்கிறார் என்று நாம் சொன்னால், அது சரியான வாக்கியம் கிடையாது. ஏனென்றால் அவர் நரகத்திலும் இருக்கிறார். அதனால் அவருடைய மகன்களும் அவருடைய மகள்களும் எப்போதுமே தனியாக இருப்பதில்லை. அவர் உங்களுடன் நரகத்திலும் இருக்கிறார். 


நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் மாபெரும் தந்தையின் பிள்ளை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு பாவி என்றோ, கீழானவர் என்றோ நினைக்கவே கூடாது. நீங்கள் ஒரு பாவி என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் பாவத்தை தியானம் செய்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்! அவ்வாறு பாவம் உங்களுடைய தியானத்தின் உருவமாய் இருக்கும்போது உண்மையிலேயே நீங்கள் ஒரு பாவியாக ஆகிவிடுவீர்கள். ஏனென்றால் ஒரு மனிதன் அவனுடைய அல்லது அவளுடைய எண்ணத்தின் பொருளாகவே ஆகிவிடுவான். “நான் ஒரு பாவி”, “நான் ஒரு பாவி” என்று எண்ணிக்கொண்டே இருந்தால் நீங்கள் உண்மையிலேயே பாவியாக ஆகிவிடுவீர்கள். உங்களுடைய மனப்பாங்கு எப்படி இருக்கவேண்டுமென்றால், உண்மையிலேயே நீங்கள் ஒரு பாவியாக இருந்தாலும் அதை மறந்துவிட்டு, “நான் மாபெரும் தந்தையின் பிள்ளை, நான் மாபெரும் தந்தையின் பிள்ளை” என்று எண்ண வேண்டும். இவ்வாறு நீங்கள் மாபெரும் தந்தையை தியானம் செய்துகொண்டே இருந்தால், நீங்கள் உங்கள் தந்தையோடு ஒன்றாய் கலந்துவிடும் நாள் ஒன்று நிச்சயமாக வரும். ஆனால் “நான் ஒரு பாவி”, “நான் ஒரு பாவி, என்னை காப்பாற்று, ஓ பரம தந்தையே என்னை காப்பாற்று என்று எண்ணிக்கொண்டே இருப்பது தவறான அனுகுமுறையாகும். அதற்கு பதிலாக, “நான் உன்னுடைய மகன், நான் உன்னுடைய மகள், ஓ தந்தையே என்னை உன் மடிமீது வைத்துக்கொள், நான் உன்னுடைய மகன், நான் உன்னுடைய மகள்” என்று சொல்ல வேண்டும்.


 உங்களுடைய அனுகுமுறை இப்படித்தான் இருக்க வேண்டும். எது உங்களுக்கு தேவையில்லையோ அதை நீங்கள் மறந்துவிட வேண்டும்.


🌷 ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌷


(ஆனந்த வச்சனாம்ருதம் 23ம் பாகத்திலிருந்து)

Thursday, 8 October 2020

 சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டிய தருணம் ஏற்கனவே வந்துவிட்டது

--------------------------------------------------------------------------------------------------------------------------

மனித வாழ்வு பல்வேறு வகையான பழக்க வழக்கங்களை கொண்டதாக உள்ளது. சாப்பிடுகின்ற மற்றும் குடிக்கின்ற பழக்கம், ஆடைகள் அணிகின்ற பழக்கம், ஆடிப் பாடுகின்ற, வீடுகளை கட்டுகின்ற, மருத்துவ சிகிச்சை செய்துகொள்கிற என்று பலவகையான பழக்கவழக்கம் உள்ள மனிதர்கள் உள்ளனர். இந்த பழக்க வழக்கங்கள் அனைத்தும் சேர்ந்ததுதான் கலாச்சாரம் என்பது. இதில் எதையாவது ஒன்றை மட்டும் கலாச்சாரம் என்று சொல்ல முடியாது. இவை அனைத்தும் சேர்ந்ததுதான் கலாச்சாரம் என்பது. மனித வாழ்வின் இத்தனை வெளிப்பாடுகளையும் அதாவது, நாட்டியம், இசை மருத்துவம், நாகரீகம் மற்றும் வாழ்வின் அனைத்து பகுதிகளையும் ஒரு ஒழுங்குமுறையில் கொண்டுவர சதாஷிவன் விரும்பினார். இது மாபெரும் மாற்றமாக இருந்தது, ஒரு புரட்சிகரமான மாற்றமாக இருந்தது. அதற்குமுன் இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்ந்ததே இல்லை. சாதாரண தலைவர்களாலோ அல்லது ரிஸிகளாலோ இதுபோன்ற எட்டிபிடிக்க முடியாத மாற்றங்களை கொண்டுவர முடியவில்லை. மாறிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களையும் மாற்றிக்கொள்கின்ற மனிதர்களுக்கு உதவ நினைக்கின்றவர்களை நான் “ ஸத்விப்ர ” என்று கூறினேன். ஆனால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்குகின்றவர்களை “ மஹாசத்விப்ர ” என்று சொல்வேன். மாற்றங்கள் ஏற்படுகின்ற சூழ்நிலைகளில் மிகச்சரியாக அனுசரித்து வாழ்வதற்கான வழிகளை மக்களுக்கு சரியாக காட்டி, சரியான பாதையில் வழிநடத்துபவர்கள்தான் சத்விப்ரர்கள்.

ஆனால் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திடுவது சத்விப்ரர்களின் பணி அல்ல, அது மஹாசத்விப்ரரின் கடமை. மஹாசத்விப்ர என்பது வேதாந்த சொல்லாகும். வேதங்களில் இவர் “ தாரக ப்ரஹ்ம ” என்று அழைக்கப்படுகிறார். சதாஷிவன் அத்தகைய ஒரு தாரக ப்ரஹ்ம ஆவார். அவர் வாழ்வின் அனைத்து பகுதிகளுக்கும் வழிகாட்டும் ஒரு ஆற்றல் மிக்க வழிகாட்டி. ஷிவனுக்கு பிந்தய காலத்தில் சமுதாய முன்னேற்றத்தின் வேகம் குறைந்து போனது. அது தன் இயக்க ஆற்றலை இழந்து சரிவை நோக்கிச் சென்றது. சமுதாய இயந்திரத்தின் பல்வேறு பாகங்கள் துரு பிடிக்க ஆரம்பித்தன. அந்த சூழ்நிலையில் சமுதாயத்தை முன்னே நகர்த்தி செல்வதற்கும் மக்களை சரியான பாதையில் வழிநடத்துவதற்கும் வல்லமை பொருந்திய மற்றொரு மாமனிதர் தேவைபட்டார். இவ்வாறு 3500 ஆண்டுகளுக்கு முன் மற்றொரு மஹாபுருஸனான ஸ்ரீ கிருஸ்ணர் பிறந்தார். அவரும் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்தார், சக்திமிக்க சமுதாய முன்னேற்ற அலைகளை அவர் புகுத்தினார்.

சதாஷிவன் மட்டும் தனியாகத்தான் சமுதாயத்தில் பெரும்பான்மையான மாற்றங்களை கொண்டுவந்தாரா என்று ஒருவர் கேட்கலாம். இல்லை நிச்சயமாக இல்லை! அவருக்கு உதவியாக நிறைய சாதகர்கள், பக்தர்கள், அறிவு மேதைகள் மற்றும் பாமர மக்களும் இருந்தனர். வேதாந்தத்தில் அவர்களை ஷிவனுடைய “ கணங்கள் ” என்று சொல்லி இருக்கிறார்கள்.  மற்ற கடவுள்களும் பெண் கடவுள்களும் பல்வேறு அணிகலன்களை அணிந்திருந்தனர், சிலர் காது வளையங்கள் மற்றும் கிரீடம் அணிந்திருந்தனர், மற்றவர்கள் சங்கு, தாமரை மற்றும் சக்கரம் போன்ற ஆயுதங்களை வைத்திருந்தனர். ஆனால் ஷிவனிடம் இருந்த ஆயுதங்களும் ஆபரணங்களும் அவருடைய பக்தர்கள் மட்டுமே. அவர்கள் சிறிதும் சோர்வின்றி அவருடைய குறிப்பாணைகளுக்கு ஏற்றவாறு பணி செய்தனர்.

சரி, ஸ்ரீ கிருஸ்ணரின் காலத்தில் என்ன நடந்தது? அவரும் சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றங்களை உண்டாக்கினார். புரட்சிகரமான அந்த பணியில் அவருக்கு உதவியாக இருந்தவர்கள் யாரும் புத்திசாலிகளும் அல்ல, அறிவு மேதைகளும் அல்ல, அல்லது அவர்கள் அனைவரும் வேத விற்பன்னர்களோ அல்ல. அவர்களுள் பலர் சாதாரண சமுதாய மக்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை, அவர்கள் அனைவரும் உண்மையான பக்தர்களாகவும் சமுதாய நன்மைக்காக ஸ்ரீகிருஸ்ணரின்(வ்ரஜகிருஸ்ணன்) குறிப்பாணைகளின்படி உண்மையாக உழைப்பவர்களாகவும் இருந்தனர். அவர்களுடைய சொத்து என்பது அவர்களுடைய இலட்சியமாகிய இஸ்ட தெய்வம்தான், அந்த கிருஸ்ணன் மீது உள்ள உண்மையான பக்தி மட்டும்தான். அவர்களுடைய பக்தியின் காரணத்தால்தான் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் வெற்றியாளர்களாக இருந்தனர். மக்கள் அவர்களுடைய அறிவைவிட உண்மை மற்றும் நேர்மையால்தான் சாதனைகளை புரிந்தனர்.

இந்த காலத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சமுதாயத்தில் இன்றைக்கு பல்வேறு வகையான பிரச்சனைகள் எழுந்துள்ளன.  இன்றைய சூழ்நிலைகளை சமாளிப்பதற்காக புது வகையான ஏற்பாடுகள் - மனம், உடல் மற்றும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. சமுதாயத்தின் சிறு சிறு ஓட்டைகளிலும் ஊழல் மற்றும் சுரண்டல் நுழைந்துவிட்டது. இந்த எதிர்மாறான சூழ்நிலையில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக, நேர்மையாளர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இந்தப் பணியில் வெற்றிபெற வேண்டுமானால், மக்கள் தங்களை முழுமையாக தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு தீய காரியத்தை செய்வதற்கு முன் எப்படி ஒருவர் தன்னை தயார் செய்துகொள்கிறாரோ அதே போல நல்ல காரியத்தை செய்வதற்காகவும் தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும். நல்ல மனிதர்கள் எப்போதும் நல்லதையே செய்வார்கள்.

ஒவ்வொரு செயலை செய்வதற்கு முன்பும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருக்கும். உண்மையில் அத்தகைய மிக நீண்ட ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. மாற்றம் என்பது இன்றைக்கு தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. இதற்கு மேலும் தாமதிப்பதற்கு நேரம் கிடையாது. ஸ்ரீ கிருஸ்ணர் பிறந்து ஏறத்தாழ 3300 ஆண்டுகள் கழிந்துவிட்டன, ஷிவபெருமான் பிறந்து ஏறத்தாழ 7000 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்றைய மனிதர்கள் அன்றைய மனிதர்களைப் போல தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். மனித சமுதாயத்தின் நலனை திரும்ப கொண்டுவருதற்காக, அவர்கள் ஒரு புதிய கொள்கையோடு, ஒரு புதிய யுத்தத்தை தொடங்க வேண்டும்.

கடந்த காலங்களில் அதாவது ஷிவனுடைய மற்றும் கிருஸ்ணருடைய காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தபோது, ஒரு புதிய வேதாந்தம், ஒரு புது வாழ்க்கை முறை, ஒரு புதிய வெளிச்சம், மக்களுக்கு முன்னேறிச் செல்வதற்கான ஊக்கத்தை தந்தது. அதனால்தான் அவர்களுடைய பணியை நம்ப முடியாத குறுகிய காலத்தில் அவர்களால் முடிக்க முடிந்தது. மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வருவதற்கு போராட்டம் என்பது – அது குறுகியதோ அல்லது நீண்டதோ, ஆனால் போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது. மனிதர்கள் ஒரு வல்லமை பொருந்திய மனிதரின் கீழ் நின்று போராடும்போது அந்த வேலை மிகக் குறைந்த காலத்தில் முடிந்துவிடும். அப்போது மக்கள் தீவிரமாக சிந்தித்து சமுதாயம் சந்தித்துக்கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனைகள் என்னென்ன என்பதை தீர்மானித்து, அதற்கு தீர்வு காணும் வழிகளையும் ஏற்பாடுகளையும் செய்வார்கள். அப்படி அவர்கள் தயார் ஆகிவிட்டால், வெற்றியை அவர்கள் மிக விரைவாக அடைந்து விடுவார்கள். 

இன்றைய மனித சமுதாயத்தை நாம் உலகலாவிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும், பிரித்து பார்க்கின்ற கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. பெரியதோ அல்லது சிறியதோ அனைத்து பிரச்சனைகளையும் நாம் தீர்த்தாக வேண்டும். மிகப்பெரிய பிரச்சனைகளை உடனடியாக தீர்ப்பதற்கான வேலைகளை ஆரம்பித்தாக வேண்டும். ஏனென்றால் சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டிய தருணம் ஏற்கனவே வந்துவிட்டது. நாம் அதிக தாமதம் செய்தால் இருளும் அதிகமாக சூழ்ந்து விடும். இன்றைக்குத் தேவையான ஒரு புதிய வேதாந்தம், ஒரு புதிய மனிதநேய கோட்பாடு, ஒரு புதிய சமூக-பொருளாதார சிந்தனை ஆகிய அனைத்தும் இந்த சமுதாய நலனை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஏற்கனவே வந்துவிட்டது. 

அதனால்தான் இனிமேலும் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று நான் சொல்கிறேன். பயனுள்ள செயல்களில் உங்கள் நேரத்தை செலவழியுங்கள்;. “ ஷுபஸ்ய ஷீக்ரம் அஸுபஸ்ய காலஹரணம் ” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு புதிய புனித பணியை துவங்குவதற்கு முன் நீங்கள் கிரஹ பலன்களையும் பஞ்சாங்கமும் பார்த்துக்கொண்டிருக்க தேவையில்லை, உடனடியாக துவங்குங்கள். ஆனால் எதாவது கெடுதல் உண்டாக்க கூடியதை செய்வதற்கு முன் அதை செய்வதற்கு எவ்வளவு தாமதம் செய்ய வேண்டுமோ அவ்வளவு தாமதம் செய்யுங்கள். கால தாமதம் ஏற்பட ஏற்பட, மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, அந்த தீய காரியத்தை நீங்கள் செய்ய வேண்டாம் என்று தீர்மானித்து விடுவீர்கள்.

உங்கள் புனித பணியை செய்கின்றபோது உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இந்த நடைமுறை உலகில், இந்த சார்பியல் உலகில் மிகவும் மதிப்புள்ளது நேரம்தான். ஒரு முறை நேரத்தை இழந்துவிட்டால் அது திரும்பவும் வராது. ஆதனால் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்களுக்கு வளம் உண்டாகட்டும், உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும். 


🌷 ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌷


 (ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து)

 பாவம், புண்யம், ப்ரத்யவாய, பாதகம், அதிபாதகம், மஹாபாதகம் என்பதன் விளக்கம்: 

---------------------------------------------------------------------------------------------------------------------------

"புண்ணியம்" என்றால் என்ன? புண்ணியம் என்றால் ஒருவருடைய உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றுக்கும் நன்மை உண்டாக்கக் கூடிய செயலே புண்ணியம் எனப்படுகிறது. ஒருவருடைய உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றுக்கும் தீமை விளைவிக்கக் கூடிய செயல் "பாவம்" என்று அழைக்கப்படுகிறது. புண்யம் மற்றும் பாவம் ஆகிய இரண்டுமே இரண்டு வகைப்படும். 

பாவத்தின் இரண்டு வகையில், ஒன்று பாதகம் மற்றொன்று ப்ரத்யவாய. செய்யக் கூடாத காரியத்தை ஒருவர் செய்தால், உதாரணமாக திருடுதல், பொய் பேசுதல் போன்றவற்றை செய்தால் அது பாதகம் எனப்படுகிறது. அதாவது மற்றவர்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய செயல் பாதகம் எனப்படுகிறது. ஒருவர் செய்ய வேண்டியதை செய்யத் தவறிவிட்டால், உதாரணமாக வரியவருக்கு உணவளிக்க தவறுவது அல்லது நோயுற்றோருக்கு சேவை செய்யாமல் இருப்பது போன்றவை " ப்ரத்யவாய " எனப்படுகிறது. உளவியலாரின் கருத்துப்படி இந்த ப்ரத்யவாய என்பது பாதகத்தைவிட கண்டனத்திற்குரியது.

பாதகம் என்பது மீண்டும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. உங்களுடைய செயல் மற்றவருக்கு பாதிப்பை உண்டாக்கிவிட்டதாக வைத்துக்கொள்வோம். சந்தேகமின்றி அது பாதகம்தான். ஆனாலும் அதனால் உண்டான  இழப்புக்கு ஈடாக பரிகாரத்தை பாதிக்கப்பட்டவருக்கு செய்துவிட்டால் அந்த செயல் பாதகம்   என்பதில் இருந்து  விடுபட்டுவிடுகிறது.  உதாரணமாக நீங்கள் எதையாவது திருடிவிடுகிறீர்கள். அதை அதற்குச் சொந்தமானவரிடமே சிறிது வட்டியோடு திருப்பித் தந்துவிட்டால்  அதற்கு மேலும் அதை பாதகம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அதற்குரிய இழப்பை நீங்கள் சரிசெய்துவிடுகிறீர்கள். ஆனால் சில இழப்புகளை உங்களால் ஈடு செய்யவே முடியாது. உதாரணமாக, நீங்கள் ஒருவருடைய விரலை துண்டித்து விடுகிறீர்கள், அதை உங்களால் திருப்பி பொருத்த முடியாது. அத்தகைய செயல் "அதிபாதகம்" என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் ஈடே செய்யமுடியாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கக்கூடிய காரியத்தை நீங்கள் செய்துவிட்டால், அதேசமயம் அது மற்றவர்களிடம் தீய பாதிப்புகளை உண்டாக்கக் கூடியதாகவும் இருக்குமேயானால் அத்தகைய செயல் "மஹாபாதகம்" என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக, ஒரு நேர்மையற்ற வியாபாரி கருமிளகோடு பப்பாளி விதைகளை கலப்படம் செய்கிறான். இரண்டு விதைகளும் ஒரேமாதிரி உள்ளதால் ஒருவராலும் இந்த இரண்டு விதைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது. இதைப்பார்த்து மற்ற வியாபாரிகளும் இந்த உதாரணத்தை பின்பற்றும்படி தூண்டப்படலாம். இப்படியே இந்தக் கலப்பட சுழற்சியானது தொடர்ந்துகொண்டே இருக்கும். இதுவே "மஹாபாதகம்" எனப்படுவது. ஒருவர் புண்ணிய காரியங்களுக்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்பணித்துக்கொள்வதன் மூலம் அதிபாதகத்திற்கு பிராயசித்தம் பெறலாம். இழப்பிற்கு ஈடு செய்வதன் மூலம் பாதகத்திற்கு பரிகாரம் செய்யலாம். ஆனால் மஹாபாதகத்திற்கு ஒருபோதும் பரிகாரமே கிடையாது. இது பாதகங்களிலேயே மிகவும் மோசமானது. இதற்காக ஒருவர் தன்னுடைய உயிரையே புனித காரியத்திற்காக அர்ப்பணம் செய்யவேண்டும். எந்தஒரு சுகத்தையும் தேடுதல் கூடாது. இராமாயண கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். இராமனோடு நடந்த யுத்தத்தில் இராவணன் தோற்கப் போகும் தருவாயில், அவனுடைய இறைவனாகிய, அவனுடைய ஆற்றலின் மூலப்பொருளாகிய   ஷிவபெருமானிடம்  வேண்டினான். ஆனால்  அவன் மற்றொருவருடைய மனைவியை அபகரித்ததன் விளைவாக ஷிவபொருமான் மிகவும் மனம் கசப்புற்று இருந்ததால் அவனுக்கு உதவ விரும்பவில்லை. இராவணனைக் காப்பாற்ற வேறு எவருமே இல்லை. இராவணன் வேறு ஒரு குருவின் சீடனாக இருந்திருந்தால் அவனுடைய உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் ஷிவபெருமானே அவனுடைய குருவாய் இருந்ததால் அவன் உயிரைக் காப்பாற்ற வேறு யாருமே இல்லை. வேதங்களில், " ஷிவே ருஸ்டே குருஸ்ராட்டா குரவோருஸ்டே நாகஷ்சன" என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஷிவன் ஒரு மனிதனிடம் கோபப்பட்டால் அந்த மனிதனுடைய குரு அவனை காப்பாற்றலாம். ஆனால் ஷிவனே குருவாய் இருந்தால் பிறகு அவனை யாராலும் காப்பாற்ற முடியாது . இவ்வாறு ஷிவனே இராவணனுடைய குருவாய்  இருந்ததால் ஷிவனுக்கு இராவணன்மீது கோபம் வந்தபோது இராவணனைக் காப்பாற்றுவதற்கு  யாருமே இல்லை.

ஷிவபெருமானிடம் அவருடைய மனைவியாகிய பார்வதி கேட்கிறாள், "இராவணன் உங்களுடைய பக்தனாயிற்றே, அவனை தயவு செய்து காப்பாற்றுங்கள்" என்று. ஆனால் ஷிவனால் எப்படி அவனை காப்பாற்ற முடியும்? இராவணன் ஒரு மஹாபாதகன். பார்வதி கூறினாள், "இராவணன் ஒரு அதிபாதகன்தானே" என்று ஆலோசனை கூறினாள். அதற்கு ஷிவபெருமான், "இல்லை, இராவணன் சீதையை ஒரு திருடனாய் வந்து அபகரித்திருந்தால் அவனை ஒரு அதிபாதகன் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அவன் ஒரு துறவியின் வேடத்தில் வந்து அபகரித்துவிட்டான்" என்றார். இது இச்சமுதாயத்தில் ஒரு தொடர் விளைவை உண்டாக்கிவிடும். எதிர்காலத்தில் எந்த ஒரு திருமணமான பெண்ணும் ஒருபோதும் இனிமேல் ஒரு துறவியை நம்பமாட்டாள். அவர்கள் ஒரு துறவியைப் பார்த்தால் மாறுவேடத்தில் மற்றொரு இராவணன் இருப்பதாகவே நினைப்பார்கள். அயோக்கியர்களும் துறவிகளின் ஆடையணிந்து இத்தகைய குற்றங்களை செய்வார்கள். உண்மையில் இன்றைக்கும் அவர்கள் இதை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய குற்றங்கள் காலமெல்லாம் தீய விளைவுகளை உண்டாக்கக்கூடியவை என்பதால் சந்தேகமில்லாமல் இது மஹாபாதகம்தான்| என்று கூறி இராவணனுடைய உயிரைக் காப்பாற்ற மறுத்துவிட்டார் ஷிவபெருமான். பார்வதி அப்போது, "அப்படியென்றால் நான் அவன் உயிரைக் காப்பாற்றுகிறேன்" என்றாள். " சரி நீ வேண்டுமானால் முயற்சி செய் ஆனால் நீ வெற்றியடையமாட்டாய்" என்றார் ஷிவபெருமான். பார்வதியும் அவ்வாறே இராவணனை காப்பாற்ற முயற்சி செய்து தோற்றுப்போனாள். 

பாவத்தில் இரண்டுவகை இருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். ஒன்று பாதகம் மற்றொன்று ப்ரத்யவாய. அதேபோல புண்யத்திலும் இரண்டுவகை உண்டு. ஒன்று ப்ரத்யக்ஸ புண்யம் மற்றொன்று அப்ரத்யக்ஸ புண்யம் - அதாவது நேரடியான புண்யம் மற்றொன்று மறைமுகமான புண்யம். பசியால் வாடுகின்றவர்களுக்கு உணவளிப்பதாலும், படுத்தபடுக்கையாய் கிடக்கின்ற நோயாளிகளுக்கு சேவை செய்வதாலும் ப்ரத்யக்ஸ அல்லது நேரடியான புண்;யம் ஒருவருக்கு கிடைக்கிறது. ஒருவர் செய்த சேவை தொடர் விளைவுகளை உண்டாக்கக்கூடிய தன்மையைப் பெற்றிருந்தால் மறைமுக புண்யத்தை அவர் பெறுகிறார். உதாரணம்: சமுதாயத்திற்கு தொண்டு, மரம் நடுதல் போன்றவை. வெய்யில் மற்றும் தூசி நிறைந்த பாதைகளில் ஆலமரங்களை நட்டுவைத்தால் அவை ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு, களைத்து வருகின்ற பயணிகளுக்கு நிழல் கொடுத்துக்கொண்டிருக்கும். இதுபோன்ற காரியங்களில் வருவது மறைமுக புண்யம். பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களும் உடலால் நலிந்தவர்களும் நேரடி புண்யத்தை பெறுவது கடினம். காரணம், அவர்களுடைய சாதகமற்ற சமுதாய சூழ்நிலைதான். இந்த நேரடி புண்யத்தை மிகச் சிலர்தான் பெறுகிறார்கள் என்பதுதான் உண்மை.  ஆனால் மறைமுக புண்யத்தை எல்லோராலும் பெற முடியும். முயற்சி செய்தால் நேரடி புண்;யத்தையும் எல்லோரும் பெற முடியும் என்பதும் உண்மைதான். பண வசதி இல்லாதவர்கள் உடலால் சேவை செய்யலாம், உடலால் வலிமையற்றவர்கள் அறிவுசார்ந்த சேவையை செய்யலாம். ஏதேனும் ஒரு வழியில் ஒவ்வொருவராலும் சேவை செய்ய முடியும். இதுதான் புண்யத்தைப் பற்றியும் பாவத்தைப் பற்றியும் உள்ள விளக்கங்கள். 


🌸ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி🌸


(ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து