ஆனந்த மார்கம் என்றால் என்ன ?
பாபா அளித்த விளக்கம்
என் பிரியமானவர்களே, ஆனந்த மார்கத்தை நான் அனைத்து மனித குலத்திற்காகவும் உருவாக்கி உன்ளேன்.
ஆனந்தமார்கம் என்பது, ஹிந்து மதத்தின் புனிதத்துவத்தையும்,
கிறிஸ்துவ மதத்தின் சேவை மனப்பான்மையையும், இஸ்லாம் மதத்தின் ஆழ்ந்த மதப்பற்று அல்லது கொள்கைப் பற்றையும், ஜைன மதத்தின் நோன்பு, மற்றும் தன்னைத்தான் தண்டித்துக் கொள்ளுதல், எளிமை, கொண்ட கொள்கையில் கடுமை போன்றவற்றையும், சிவன் கொடுத்த தந்த்ராவையும், கிருஷ்ணன் கொடுத்த யோக முறைகளையும், புத்தரின் தர்மசக்கரத்தையும் மற்றும் மார்க்ஸிசத்தைக் காட்டிலும் மேம்பட்டதாக விளங்கும் ப்ரெளட்டின் (PROUT) சமுதாய- பொருளாதார கொள்கைகளையும் தன்னகத்தே கொண்டது. இதுவே நமது ஆனந்த மார்க்கம்.
ஆனந்த மார்கம் என்றால் என்ன ?
ஆனந்த மார்கம் என்பது உலகளாவிய ஆன்மீகக் குழு என்பதைக் காட்டிலும் மேலான ஒன்று. ஆனந்த மார்கமானது ஒவ்வொருவருள்ளும் புதைந்து கிடக்கும் அபூர்வ சக்தியை வெளிக்கொண்டு வரும் பயிற்சியை (தன்னை உணர்தலை) அறிவியல் முறைப்படி இலவசமாகக் கற்றுக்கொடுக்கிறது. இது பல நாடுகளால் ஒடுக்கப்பட்டு, சுதந்திரம் அடைய முயலும் மக்களுக்கு, தேவையின் அடிப்படையில் உதவக்கூடிய ஒரு அமைப்பாகும். இது ஒரு சாதாரண சமூக சேவை இயக்கம் என்பதைவிட மிகமேலான ஒரு அமைப்பாகும். ஆனந்த மார்கம் என்பது மனிதன் தன்னுள் அடங்கி இருக்கும் அபூர்வசக்தியை, ஆற்றலை, உணர்வை, உள்ளுணர்வை அறிந்து கொள்ளுதலையும், சமூக நலன் கொண்ட செயல்பாடு ஆகியவற்றையும் தன்னகத்தே கொண்ட ஓர் தன்னிகரற்ற அமைப்பாகும். ஒரு இயக்கம் என்கிற வகையில் ஆனந்த மார்கம் உலக சரித்திரத்திலேயே தலைசிறந்த ஒன்றாகும். பொருளாதார வீழ்ச்சி, மனஅமைதியின்றி மக்கள் துன்பத்தில் உழல்வது, ஒற்றுமையின்மை, மனிதர்களிடையே வேறுபாடு ஆகிய இவ்வுலகத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்ற அவசியத்தின் அடிப்படையில் இவ்வியக்கம் உலகெங்கும் நிலைபெற்ற சக்தியாக உருவெடுத்து இயங்கிவருகிறது.
இருக்கவேண்டிய இடத்தைவிட்டு இருக்கக்கூடாத இடம் நோக்கி இயந்திர வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இச்சமுதாயத்தை நல்வழிபடுத்தகூடிய செயலை, எப்படி, எங்கிருந்து தொடங்குவது?
ஒவ்வொரு தனிமனிதனின் உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றில் ஏற்படுகின்ற மாற்றத்தினாலும், அறிவியல் முறைப்படி ஒருவருக்குள் அடங்கிக் கிடக்கும் சக்தியை அறிந்து பெருக்கிக் கொள்வதாலும்தான் இந்த நல்வழிக்கு தொடக்கம் ஏற்படும்.
தனி மனிதனாகிய நாம் நமக்குள் ஒரு முழு மனிதனாகி முழுமையாகிவிட்டால்; உடல், உள்ளம், ஆன்மா இவற்றில் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்பட்டு விட்டால், இவ்வுலகில் நல்ல ஒரு சமுதாய அமைப்பை நோக்கி வரும் தீமைகளையும் எதிர்ப்புகளையும் அச்சமின்றி எதிர்நோக்கி, பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியும்.
உலகில் நிலவும் மூடபழக்கவழக்கம், முட்டாள்தனமான செயல்கள், ஜாதி, மதம், இனம், தேசம், மொழி ஆகியவை மனித சமுதாயத்தைப் பிரிக்காத வண்ணம் உலக மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, உழைத்து இம்மனித சமுதாயத்தை, பொருளாதாரம், மனவியல் ஆகியவற்றில் வீழ்ச்சியடையாமல் பாதுகாத்து, மிகவும் பலமான, இனிமையான வேறுபாடற்ற ஒரு மனிதகுலத்தை,நல்ல சமூதாயத்தை உருவாக்க வேண்டும்.
ஆனந்த மார்கம் என்பது உலக மனித சமுதாயத்தை முன்னேற்றி வளர்ச்சிபெறச் செய்வதற்கும் தன்னையறிதல் மூலம் தனிமனிதனின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதற்கும் தங்களை தாங்களே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் அடங்கிய, உலகம் முழுவதிலும் பரவி உறுதியாக இயங்கிவரும் ஒரே இயக்கமாகும்.
ஆனந்த மார்கத்தின் கோட்பாடுகள் என்ன ?
ஆனந்த மார்கத்தின் ஆன்மீகக் கோட்பாடு கூறுவது என்னவென்றால்; ஒவ்வொரு படைப்பும், இப்பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்துள்ள, அனைத்தும் அறிந்த, அனைத்தும் செய்யவல்ல ஒரு சக்தியின் பிரதிபலிப்புகளே என்பதுதான். இவ்விதமாக மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகிய அனைத்தும் இயல்பாகவே தெய்வீகத் தன்மையுடையனவாகும். நாம் நமக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை ஒழுங்காக, முறையாக தியானம் செய்வதன் மூலம் உணர்ந்து நாம் நமக்குள்ளே இருக்கும் அளவில்லா, முடிவில்லா அமைதிப் பெருங்கடலில் கலந்துவிடலாம்.
ஆனந்தமார்கம் என்பதற்கு ஒளிநிறைந்த வழி என்பது பொருள். தனி மனிதனையும் சமூகத்தையும் முறைப்படுத்தி உயர்வடையச் செய்யும் ஒரு நல்வழி.
ஆனந்த மார்கத்தின் செயல் முறைகள் யாவை?
அனைத்து மனிதர்களிடமும் ஒரு பொதுவான விருப்பம் உண்டு. அதாவது நாம் ஒரே எண்ணத்துடன் ஓய்வில்லாமல், அளவில்லாத, உண்மையான, நிலையான இன்பத்தை நோக்கி மன நிம்மதிக்காக இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் அது. அனுபவ ரீதியாக இந்த நிலையான, களங்கமற்ற அமைதியைப் பெறுவதற்கு தியானம் ஒன்றுதான் வழி. தியானம் என்பது மதம் சார்ந்தது அல்ல ; மாறாக இது அறிவியல் முறைப்படி மனம், அறிவு ஆகியவற்றை விரிவடையச் செய்து நம் மனதிற்குள் நாமே ஆழமாகச் சென்று ஒன்றுகலந்து, நமக்குள் பொதிந்து கிடக்கும் அளவில்லா சக்தியை முறையாக உபயோகப்படுத்துகின்ற ஒரு பயிற்சி ஆகும். தியானம் செய்யும்பொழுது நாம் ஒரு முறையான அதிர்வை உடைய ஓசையின் மீது முழுக்கவனம் செலுத்துகிறோம். இந்த ஓசைக்குப் பெயர்தான் “மந்திரம்' என்பது. இந்த மந்திரத்தை நாம் உச்சரிக்கும்பொழுது ஒரு இனிமையான நாதம் நம் மனதிலிருந்து வெளிப்படுவதை நாம் உணர்கிறோம். மந்திரம் என்பது மனம் ஒருமுகப்படுதலுக்குப் படிகளாக அமைகிறது. மந்திரம் ஓய்வில்லாத இவ்வுல எண்ண நினைவுகளில் இருந்தும், கற்பனைகளிலிருந்தும் நம்மை பிரித்து நாம் எங்கிருந்து வந்தேமோ அங்கு, அந்த எல்லையற்ற (நாத) பேரின்பத்திற்கு நம்மை வழிநடத்துகிறது.
தியானத்தால் விளையும் நன்மைகள் யாவை ?
தியானம் செய்வதால் நம் உடல், மனம் ஆகியவற்றில் ஏற்படும் விளைவு பற்றிய விஞ்ஞான பூர்வமான ஆராய்சியின் முடிவு என்னவென்றால், "தியானம் செய்வதால் உடல் ஓய்வுபெறுகிறது. இதயத்துடிப்பும், மூச்சுவிடுதலும் முறைப்படுத்தப்படுவதால் இரத்தஓட்டம் சீராக்கப்படுகிறது. மூளையில் ஆல்பா கதிர் அலைகளை அதிகப்படுத்தி மனம் அமைதிபெற்றுப் புத்துணர்வு பெறுகிறது. தியானம் செய்யும்போது நம் மனம் நல்ல ஓய்வை, அதாவது ஆழ்ந்த தூக்கத்தைவிட அதிகமான ஓய்வை அனுபவிக்கிறது. இதன் விளைவாக அதிகப்படியான (சக்தியை) திறனை நாம் பெற்று புத்துணர்வுடன் இவ்வுலக வேலைகளைத் திறம்படச் செய்ய அற்புதமாக உதவிசெய்கிறது. தியானம் செய்வதால் நம் மனம் மற்றும் அறிவு படிப்படியாக விரிவடைந்து பலம் பெறுகிறது. தியானம் செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையில்,
* அதிக அளவிலான விழிப்புத் தன்மை
*அதிக அளவிலான கவனம், ஞாபகசக்தி
* அதிகரிக்கப்பட்ட உடல் மற்றும் மன ஆற்றல்
போன்ற பல நலன்களைப் பெறுகின்றனர்.
சமீபத்திய ஆய்வின்படி 6 மாதங்களாக தொடர்ந்து தியானம் செய்பவர்களுக்கு கவலை மற்றும் வாழ்க்கையில் வெறுமை ஆகிய உணர்வுகள் அதிகமாக குறைந்து விடுவதையும், கோபப்படுதல், வெறுப்புணர்ச்சி துன்பமான எண்ணங்களின் சுமை ஆகியவை வெகுவாகக் குறைந்து விடுவதையும் கண்டறிந்தனர். மேலும் உடலைச் சார்ந்த ஜலதோஷம், தலைவலி ஆகியவை மறைந்து நம் உடலைவிட்டு விலகிவிடுகின்றன. தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகளில் வெகுவாய் ஒப்புக்கொள்ளப்பட்ட, அனுபவப்பூர்வமாக கூறப்படுகின்ற பலன் என்னவென்றால் இவர்களால் அதிக அளவில் தெளிவாகச் சந்திக்கவும், மிகச்சிறப்பாக செயல்படவும் முடிகிறது, பதட்டம் இல்லாமல் புத்துணர்வோடும் விழிப்போடும் இருந்து முன்பில்லாத அளவு வாழ்க்கையில் மகழ்ச்சி பெறமுடிகிறது என்பதுதான்.
எனினும் ஆனந்த மார்க தியான முறையானது, சாதாரணமான ஓய்வு மற்றும் மனதை ஒருமுகப்படுத்துதல் மட்டுமின்றி இவற்றுக்கும் மேலான ஒரு நுட்பமான முறையாகும். தொடர்ந்து தியானம் செய்பவர்கள் படைப்பின் அடிப்படைத் தத்துவத்தையும், உயிர்களின் அடிப்படை ஒற்றுமையையும் உணர்கின்றனர். இவ்வாறான உணர்வால் உலகில் அனைத்து உயிர்களிடத்தும் அன்புசெலுத்த வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே ஏற்படுகிறது. இதன் பலனாக சமூக நன்மைக்கான ஒரு தூண்டுதல் எற்படுகிறது. சமுதாய மாற்றம் என்பது தனிமனிதர்களின் உடல் மற்றும் மன மாறுபாடுகளின் முன்னேற்றத்தில்தான் தோன்றுகிறது. தியானப் பயிற்சி என்பது நல்லெண்ணம் கொண்டதும், மக்களுக்குத் தொண்டு செய்யக் கூடியதும், மனிதகுல நலனின் அடிப்படையிலானதுமான ஒரு சக்திவாய்ந்த பலனளிக்கும் வழியாகும்.
ஆனந்த மார்கத்தின் பிற ஆன்மீக பயிற்சிகள் என்ன ?
ஆனந்தமார்க்க ஆச்சார்யார்கள் (சந்நியாசி, சந்நியாசினிகள்) தியானம், யோகாசனம் ஆகியவற்றில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்கள். இவற்றை இவர்கள் இலவசமாகக் கற்றுத்தருவது மட்டுமின்றி மனிதனின் உடல், மனம், ஆன்மீக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் 16 கோட்பாடுகளையும் கற்று தருகின்றனர். இவை மனிதனின் முழுமையான பரிபூரண வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஒழுக்கக் கோட்பாடுகளாகும். இவற்றோடு உணவுமுறை, குளிக்கும் முறை மற்றும் பல சிறந்த வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்கின்றனர்.
உடல் பயிற்சியான யோகாசனங்கள் நம் உடலில் உள்ள சுரப்பிகளைக் கட்டுப்படுத்தி, நிலையான, சரியான விகிதத்தில் இயங்கச் செய்கிறது. ஆசனங்கள் நம் தசைகள் மற்றும் நரம்புகளை வலுப்படுத்துகிறது, உள்ளுறுப்புகளுக்கு ஒரு பயிற்சியாகவும் அமைகிறது.
சீரான இரத்த ஒட்டம் அமையச் செய்கிறது. ஆசனங்கள் செய்வதால் நம்மில் தோன்றும் அதிகப்படியான கோபம், பயம், ஆவல் ஆகிய உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிகிறது. இவ்வகையான உணர்ச்சிவசப்படுதல்களுக்கு ஒருசில குறிப்பிட்ட சுரப்பிகளின் தூண்டுதல்களே காரணம். எனவே ஆசனங்கள் செய்வதன் மூலம் சுரப்பிகளை நிலையாக இயங்கச்செய்து தேவையற்ற உணர்வுகளுக்கு இடங்கொடுக்காமல், சிறு விஷயங்களுக்கும் உணர்ச்சிவசப்படாமல் நிலையான உணர்வோடு நிதானமாக, ஆற்றலோடு செயல்பட முடிகிறது. தொடர்ந்து முறையாக ஆசனங்கள் செய்வதன் மூலம் எப்பொழுதும் துடிப்புடனும், இளமையுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், அழகுடனும் இருக்கமுடியும். மேலும் குழப்பங்கள் இன்றி அமைதியாகச் செயல்படுவதால் பெருவாரியான நோய்கள் வராமல் தவிர்க்கப்படுவதுடன் நோய்கள் குணமடையச் சிறந்த வழியாகவும் அமைகிறது.
ஆனந்த மார்க இயக்கத்தில் ஒழுக்கத்தின் பங்கென்ன?
ஒழுக்கமுறைகள் ஆன்மீகப் பயிற்சிகளுக்கு அஸ்தி வாரமாக அமைகிறது. தன்னையறிதலுக்கு (self realization) ஒழுக்க முறைகளும் நன்னடத்தையும் மன உற்சாகமும் இருத்தல் அத்தியாவசியமாகிறது. இவையின்றி தன்னறிவு அல்லது தன்னையறிதல் இயலாததாக ஆகிவிடுகிறது. இன்றைக்குப் பரவலாக மக்களிடையே ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கான விருப்பத்தை நம்மால் காணமுடிகிறது. மக்கள் ஒழுக்கமுள்ள சமுதாய நலனை நோக்கமாகக்கொண்ட ஒரு சிறந்த தலைவனுக்காக ஏங்குகிறார்கள் என்பதை நாம் உணர்கிறோம். ஆனந்த மார்க ஒழுக்கக் கோட்பாடுகளாகிய இயம, நியமக் கோட்பாடுகள் எளிதில் நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளைத் தருவதாலும் இக்கோட் பாட்டை (இயம, நியம) கடைபிடிப்பதால் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்குமிடையே அன்பினால் உருவான ஒழுக்கத்தின் அடிப்படையில் ஓர் பிணைப்பு ஏற்படுகிறது. இவ்வாறாக ஒரு சிறந்த மனிதகுல சமுதாயம் அமைத்திட ஆனந்த மார்க ஒழுக்க கோட்பாடுகள் ஒரு பலமான அஸ்திவாரமாக
அமைகிறது.
இயம, நியமக் கோட்பாடுகளின் 10 அம்சங்கள் :
1.சிந்தை, சொல், செயலால் பிறருக்கு தீங்கு செய்யாதிருத்தல்.
2. நேர்மை, மற்றும் உண்மையாக இருத்தல்.
3.திருடாமை (முறையின்றி எந்தப் பொருளையும் தன்வசப்படுத்தாமை).
4.அடிப்படையில் எல்லா உயிரினங்களும் ஒன்றுதான் என்ற உணர்வு.
5. பிறருடைய அடிப்படை தேவைகளை நிராகரித்து விட்டு அதன்மூலம் ஆடம்பர வாழ்க்கை நடத்த வாய்ப்பு இருந்தும்கூட அவ்வாறு செய்யாமலிருத்தல்; இதன் மூலம் இந்த பூமியின் அடிப்படை, உயிரியல் உரிமைகளைக் கடைப்பிடி த்தல்.
6. உடல் மற்றும் உள்ளத் தூய்மை.
7. இருப்பதை வைத்து உள்ளூரத் திருப்தியடைதல்.
8. தன்னலமற்ற சேவை.
9. உலகத்தில் உள்ள நல்ல நூல்களின் மூலம் இப்பிரபஞ்சத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவுபெறுதல்.
10. பரம்பொருளை ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் தன்னை அறிதல் அல்லது தன்னுணர்வு பெறுதல்.
உலக மக்களின் ஒன்றுசேர்ந்த ஒரே மனித சமுதாயம் அமைக்க இப்பொழுது அகில உலக அளவில் வலுவான தேவைகள் ஏற்பட்டுள்ளன.
புதிய மனிதநேய கோட்பாடு அல்லது திருத்தப்பட்ட மனிதநேய கோட்பாடு என்றால் என்ன?
நியோ ஹியூமானிசம் (புதிய மனிதநேய கோட்பாடு) என்பது ஆனந்த மார்கத்தின் அடிப்படைத் தத்துவம் ஆகும். தியானம் செய்வதன் மூலமாக உள்ளுணர்வும் படைப்புத் தத்துவமும் ஒன்றுதான் என்ற உணர்வை பெறமுடியும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த புதிய மனிதநேய கோட்பாடு என்ற நியோ ஹியூமானிசம். இது கூறுவது என்னவென்றால், இந்த பிரபஞ்சத்தில் (அகில உலகம்) மனிதனுக்கு மட்டுமின்றி எல்லா உயிரினங்களுக்கும் வாழும் உரிமை உண்டு. இதன்மூலம் வழக்கமாக நிலவிவரும் மனிதநேய கோட்பாடு திருத்தப்பட்டதாக அமைகிறது. ஆனாலும் வாழும் உயிரினங்களில் மனித இனம் அதிகமாக சிந்திக்கும் திறனும், புத்திகூர்மையும், ஆக்கத்திறன்களும் கொண்டவையாக இருக்கின்றது. எனவே மற்ற உயிரினங்களின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மனிதனையே சார்கிறது.
நியோ ஹியூமானிசம் என்பது பல்வேறு நாடு மற்றும் மொழிகளைக் கொண்ட மக்கள் அனைவரையும் ஒரே குடும்பமாக சேர்த்து அவர்களுக்குத் தேவையான உரிமைகளையும், மகிழ்ச்சியாக வாழ்வதற்குரிய அனைத்து அமைப்புகளையும் உருவாக்கிக் கொடுப்பதாகும். மேலும் மனிதகுலத்திற்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் இதே வசதிகளை அளிப்பது ஆகும். கண்மூடித்தனமான எண்ணங்களால் ஏற்பட்டுள்ள குறுகிய மனப்போக்கு, மனிதரிடையே உள்ள ஏற்றத்தாழ்வு, ஏமாற்றுதல், ஜாதி, மதம், தேசிய பிரிவினைகள் ஆகியவற்றநிலிருந்து மனித குலத்தை காப்பாற்றி எல்லோரும் ஓரினம் என்ற ஆன்மீக அடிப்படையிலான சமுதாயம் அமைய, சமுதாய நீதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு கோட்பாடு ஆகும். இயந்திரமயமான இந்த உலகில், பொருள்சார்ந்த இவ்வுலகில் நியோ ஹியூமானிச உணர்வானது பொருள் ஆசையால் மக்கள் அவதியுறுவதையும், அமைதி தேடி அழிவுப்பாதையில் செல்வதையும் மாற்றி, நல்வழிப் படுத்துவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வகையிலும் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. நியோ ஹியூமானிசம் ஒரு அர்த்தமற்ற வெறும் கோட்பாடு அல்ல. இது உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிடத்தும் காணப்படும், மற்றும் செலுத்தப்படும் தூய அன்பின் விளக்கமாகும்.
ஆனந்த மார்கத்தை தோற்றுவித்தவர் யார்? எப்பொழுது
நிறுவப்பட்டது?
ஆன்மீக ஆசானும் ஒப்பற்ற இணையற்ற, அளவில்லாத ஞானத்தை உடையவருமாகிய திரு P.R. சர்க்கார் என்பவரால் ஆனந்த மார்கம் தோற்றுவிக்கப்பட்டது. ஜகத்குரு திரு. P.R. சர்க்கார் அவர்கள் இந்தியாவில் உள்ள பீகார் என்னும் மாநிலத்தில் பிறந்தார். இவர் தனது சிறுவயதிலேயே மக்களின் மேல் அன்பு மற்றும் மக்களை நல்வழிப்படுத்துதல், தன்னை உணரச்செய்தல் ஆகிய பல சமூக ஆன்மீகச் செயல்களால் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்.
பண்டையகால அறிவியலான தந்த்ரயோக முறையை தற்காலத்திற்கு ஏற்றவாறு பல மாற்றங்கள் செய்து நமக்கு அளித்துள்ளார். உடல், மன, ஆன்ம வளர்ச்சிக்காக அறிவியல் முறைப்படி ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொருந்தும் வகையில் ஆன்மீகத் தத்துவத்தையும், அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிவகைகளையும் வகுத்துக் கொடுத்துள்ளார். ஆன்மீகத் துறையில் ஒப்பற்ற உயர்ந்த அறிஞர் என்பதாலும் மக்கள் மகிழ்ச்சியே நோக்கமாகக் கொண்டிருப்பதாலும் அவரை நாம் ஸ்ரீ ஸ்ரீ ஆனந்தமூர்த்தி (பேரின்பத்தின் உருவமாக-மக்களின்மேல் அன்புள்ளவர்) என்றும் பிரியமாக பாபா (தந்தை) என்றும் அழைக்கிறோம். இவருடைய வழியைப் பின்பற்றுபவர்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதல்கள் நிகழ்வது அனுபவ பூர்வமாக ஒப்புக்கொண்ட ஒன்றாகும். இந்த நல்வழியைக் (ஆனந்த மார்கத்தை) கடைப்பிடிப்பதன் மூலம் பலவீன முள்ளவர்கள், தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், எதிர்மாறான எண்ணம் கொண்டவர்கள் தங்கள் நிலையிலிருந்து தலைகீழாக மாறி அவரவர்க்குள் புதைந்திருக்கும் அமைதியையும் ஆனந்தத்தையும் அனுபவிக்கின்றனர். அவருடைய தன்னலமற்ற சேவையின் ஆழத்தை நோக்குகின்ற நாம் அவரை உதாரணமாகக் கொண்டு, நம்முடைய திறனையும் சக்தியையும் சமூக சேவைக்காகவும், தாழ்த்தப்பட்டோரையும் ஒடுக்கப்பட்டோரையும் உயர்த்துவதற்காகவும் அர்ப்பணித்துக் கொள்கிறோம்.
ஸ்ரீ ஸ்ரீ ஆனந்தமூர்த்தி அவர்கள் சாதாரண குடும்பத் தலைவனாக, இரயில்வே அலுவலக வேலையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே 1955 ஆம் ஆண்டில் ஆனந்த மார்க இயக்கத்தை தொடங்கினார். இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் மக்களிடையே உள்ளுணர்வை உணர்த்துவதற்காகவும் தன்னையறிதலாகிய(self realization) அறிவைப்பெறச் செய்வதற்காகவும் இயக்கத்தின் ஆண் மற்றும் பெண்களுக்கான பயிற்சி அமைப்புகளை ஆரம்பித்தார். அகில உலக அளவிலான இவருடைய பரந்த நோக்கத்தை பிரதி பலிக்கும் வகையில் ஆனந்த மார்கம் பண்முக அமைப்பாக பல பிரிவுகளைக்கொண்டு சிறப்பாக மக்கள்சேவை செய்துவருகிறது. மனித சமுதாயத்தை உயர்த்தும் வகையில் கல்வி, கலை, மனித இன அடிப்படையிலான பொருளாதாரம், பெண் உரிமை, மீட்புப் பணி, மக்கள் நலன், உயிரியல் உரிமைகள் (ecology), அறிவு மலர்ச்சி ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டு உறுதியாக இயங்கிவருகிறது. ஆனந்த மார்கம் தற்பொழுது ஒரு சமூக ஆன்மீக இயக்கமாக (socio-spiritual) இந்தியாவில் ஒவ்வொரு மூலைகளிலும், உலகத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் கிளை பரப்பி இயங்கி வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பூருலியா மாவட்டத்தில் ஆனந்த நகரை தலைமையகமாகக் கொண்டு இந்திய துணைக்கண்டத்தில் 1400 மையங்களையும், உலக அளவில் 200 நாடுகளில் 1500 மையங்களையும் கொண்டு - உலகின் சமுதாய மாற்றத்திற்காக சக்திவாய்ந்த ஒரு இயக்கமாக இந்த ஆனந்த மார்கம் பரந்து விரிந்து செயலாற்றிக் கொண்டு இருக்கிறது.
ஆனந்த மார்கத்தின் இதர பணிகள் யாவை?
அனந்த மார்க அகிலாண்ட நிவாரண குழு (Ananda Marga Universal Relief Team) என்ற ஆனந்த மார்க அகிலாண்ட நிவாரண குழு ஒவ்வொரு கண்டத்திலும் இயங்கிவருகிறது. இக்குழுவின் செயல்கள், பணிகள் எனக்கூறும் பொழுது வெள்ளபாதிப்பு, தீ விபத்து, நில நடுக்கம், போர் ஆகிய காலங்களில் இன்னலுறும் மக்களுக்கு உணவு, உடை,பாதுகாப்பான தங்கும் வசதி, மருந்து ஆகியவை வழங்குவதாகும். வங்காளப்போர், லெபனான் மற்றும் உகாண்டா யுத்தத்தின் போதும்நிகரகுவா, கூவாதிமேலா, துருக்கி, இத்தாலி போன்ற நாடுகளில் நில நடுக்கத்தின்போதும், இந்தியா மற்றும் கரிபியன் நாடுகளில் புயல் பாதிப்பின் போதும், தென்கிழக்கு நாடுகளில் வெள்ளத்தின் போதும், ஆப்பிரிக்கா நாடுகளில் மாபெரும் வறட்சியால் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் எரிமலைக் குமுறல் பேன்ற ஆபத்துக் காலங்களிலும் ஆனந்த மார்க அகிலாண்ட மீட்புக்குழு உறுப்பினர்களின் ஒய்வற்ற சேவை போற்றத்தக்கது.
ஆனந்த மார்கத்தின் கல்வி, நிவாரண மற்றும் நலப் பிரிவு -(Education Relief and welfare Section-ERAWS) உலகம் முழுவதுமாக பல நிரந்தர மீட்புப்பணி திட்டங்களைக் கொண்டதாக இருக்கிறது. பள்ளிகள், குழுந்தைகள் விடுதிகள் , மருத்துவ முகாம்கள் இலவச சமயற்கூடங்கள், சிறை கைதிகள் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட்டவர்களை நல்வழிப் படுத்தும் அமைப்பாகவும் வாழ்க்கையில் வெறுப்படைந்த இளைஞர்களுக்கான பகுதி, பாதை விடுதிகள், உயிரியல் அடிப்படை உரிமை காத்தல், பெண் உரிமை, பெண் சுதந்திரம் போன்ற திட்டங்களை கொண்டதாகவும் இருக்கிறது. நியோ ஹியூமானிசக் கல்வி (Neo Humanistic Education) முறை ஆனந்த மார்கத்தின் முற்றிலும் நவீனமான கல்வி முறையாகும். இந்தக் கல்விமுறை உலகளவில் உள்ள (2000) கிண்டர்கார்டன் பள்ளிகளிலும், பட்டப்படிப்புக் கல்லூரிகளிலும் பெருளவில் விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் பயிற்றுவிக்கப் படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில பாடங்களையும், உடற்பயிற்சிகளையும் கொண்ட தற்போதைய கல்விமுறையைப் போலல்லாது நியோ ஹியூமானிசக் கல்வியானது குழந்தையின் உடல் மற்றும் உள்ளுணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வளர்ச்சிபெறச் செய்யும் கல்வியாக அமைகிறது.
அனைத்து பாடத்திட்டங்களும் (Curriculam) கற்பவரிடையே பண்பை வளர்க்கும் மதிப்புள்ளதாக அமையவேண்டும். கற்பவரின் மனதில் ஒழுக்கம், தைரியம், ஒருமைப்பாடு, தன்னம்பிக்கை, தன்னை உணர்தல், தன்னறிவு ஆகியவற்றை ஆழமாக பதிய வைப்பதாகவும், கற்பவரிடையே சமூக சேவை எண்ணத்தை உருவாக்கி சமுதாயத்தில் பெறுப்புள்ளவனாக ஆக்கும் வகையிலும் அமையவேண்டும்.
நன்மைகள் பல செய்யும் ஆனந்த மார்கம் ஏன் விவாதத்திற்குரியதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது?
மிக நேர்மையான, உறுதியான திரு. P.R சர்க்கார் அவர்களும் அவருடைய ஆனந்த மார்க உறுப்பினர்களும் லஞ்சம் மற்றும் உழல் ஆகியவற்றைத் தீவிரமாக எதிர்ப்பவர்கள். சமூக நீதிக்காக அரும்பாடுபட்டு உழைப்பவர்கள். ஆகவே கீழ்தரமான எண்ணம், மற்றும் பதவி ஆசை உடையவர்களாலும் இந்திய கம்யூனிச கட்சியாலும் பொய் குற்றம் சாட்டப்பட்டு ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி அவர்கள் 1971-ல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய ஏழு வருட சிறை வாசத்தின்போது அவருக்கு சிறை அலுவலர்களால் கொடிய விஷம் அளிக்கப்பட்டது. ஆனால் திரு. P.R. சர்க்கார் அவர்கள் விஷம் ஏற்றியும் உயிருடன் இருந்தார். பொய்க் குற்றச்சாட்டை எதிர்க்கும் வகையில் சிறையிலேயே ஐந்தரை ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தார். அனைத்து தேசிய நீதிபதிகளின் குழு, அனைத்து தேசிய மனித உரிமை அமைப்பு, அனைத்துலக பொது மன்னிப்பு (International amnesty) அமைப்பு ஆகிய அமைப்புகள் பெருமுயற்சி எடுத்தபோதிலும் ஜாமீனில் வெளிவரா வண்ணம் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அவசரச் சட்டத்தின் (Emergency) காலம் முடிவடைந்ததும் இந்திய உச்ச நீதிமன்றம் திரு. P.R. சர்க்கார் அவர்களையும் அவருடைய நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களையும் விடுதலை செய்தது. ஆனந்த மார்கத்திற்கு கிடைத்த இந்த நீதி நேர்மையற்ற தண்டனையானது ஆனந்த மார்க உறுப்பினர்களை, சமூக நீதிக்காகவும், மனித உரிமைக்காகவும், இன்னும் அதிக அளவில் உழைத்து வெற்றிபெறுவதற்குரிய ஒரு சிறந்த தூண்டுகோலாக அமைந்தது.
திரு. P.R. சர்க்கார் அவர்கள் ஆன்மீக குரு என்பதைவிட
வேறெந்த அளவிலும் சிறந்தவரா?
ஆம், நிச்சயமாக. இவர் ஒரு சிறந்த தத்துவ மேதை, ஒரு கவிஞர், இசை வல்லுநர், உயிரியல் மற்றும் மொழியியல் நிபுணர், தலைசிறந்த ஆன்மீக இயக்கத்தின் தலைவர்.... இப்படி எல்லாத்துறையிலும் அவர் வல்லுனரும் ஆவார். ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி அவர்கள், தன்னுடைய விளக்க உரைகள் மூலமும், புத்தகங்கள் மூலமும் விலைமதிக்க இயலாத அறிவின் பொக்கிஷத்தை நமக்கு அளித்துள்ளார். அவருடைய சிந்தனை மற்றும் செயல்களை தியானம் செய்வதால் மட்டுமேயன்றி வேறுவழியில், நம் ஐம்புலன்களைக் கொண்டு அளவிடவோ உணரவோ இயலாது. ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி அவர்கள் பல துறைகளிலும் நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார். ஆன்மீகம், தத்துவம், உளவியல், கல்வி, சமூகவியல், சுதந்திரம், பண்பாடு, மொழியியல், தாவரவியல், கலை, இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் இவர் எழுதியுள்ள புத்தகங்கள் உலகின் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன, மொழி பெயர்க்கப்பட்டும் வருகின்றன.
அவருடைய உன்ளுணர்வாலும், எதிர்காலத்தை அறியும் திறனாலும் பல துறைகளில் அவர் வழங்கியுள்ள கருத்துக்கள் இதுவரை நாம் கண்டிராத, எண்ணியிராத, கணக்கிட்டிராத ஓர் உலகிற்கு நம்மைக் கொண்டுசெல்கிறது.
எட்டு வருடங்களுக்குள் பிரபாத் சங்கீதம் எனப்படும் (உதயத்தின் கீதங்கள்) 5018 பாடல்களை எழுதிதோடு அத்தனை பாடல்களுக்கும் இசையும் அமைத்துக்கொடுத்துள்ளார். இப்பாடல்களின் இனிமையான ராகங்கள் உலகம் அனைத்திற்கும் பொதுவானதாகவும் பொருந்துவதாகவும், கேட்போர் நெஞ்சத்தில் தேன் வார்க்கும் தன்மையதாகவும் அமைந்துள்ளது. இப்பாடல்களின் இனிமையான ராகங்களும் அவராலேயே அமைக்கப்பட்டுள்ளன. இந்த ராகங்களில் கிழக்கு மற்றும் மேற்கத்திய பண்பாடுகளின் அற்புதமான இணைப்பை நம்மால் எளிதில் உணர முடி கிறது.
15000 ஆண்டுகள் பழமையான ராகங்களும் ஆப்பிரிக்க, ஐரோப்பிய, கிழக்கத்திய, மத்திய கிழக்கு ஆகிய நாடுகளின் கிராமிய மற்றும் நவீன இராகங்களும் திருத்தி வடிவமைக்கப்பட்டதாக பிரபாத் சங்கீதத்தில் கலந்து உள்ளன. இப்பாடல்கள் இயற்றப்பட்ட அந்தந்த மொழிகளிலேயும், அதே அதிர்வுள்ள ராகத்திலும் பாடுவதால் பாடுபவரின் உள்ளுணர்வு தூண்டப்பட்டு, அவர் முடிவில்லா பரம்பொருளுடன் சேர்வதற்கான எண்ணத்தை உருவாக்குகிறது. அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் பண்பை வளர்க்கிறது. ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி அவர்களின் தத்துவத்தின்படி கலை என்பது சேவைக்காகவும் பேரின்பத்திற்காகவும் இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக “பிரபாத் சங்கீதம்” திகழ்கிறது. கலை என்பது குழப்பம் மற்றும் குறைபாடுகளைக் காட்டும் கண்ணாடிகளாக இராமல் மனிதனின் முன்னேற்றத்திற்கும் அவனது நுண்ணிய அறிவு வளர்ச்சிக்கும், மேலான எண்ணத்துடனான நம்பிக்கைக்கும் புத்துணர்ச்சியுடன் செயல்படவும் வழிவகுப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம். இவ்வகை நோக்கம் பிரபாத் சங்கீதத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பிரபாத் சங்கீதம் இசைத்துறையில் ஒரு புது அலை. நியோ ஹியூமானிச செய்திகளான ஆனந்தம், அன்பு, மக்களின் நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்ட ஒரு இனிய புதிய உதயம்தான் இந்த பிரபாத் சங்கீதம்.
நியோ ஹியூமானிசக் கோட்பாட்டை நடை முறைப்படுத்தும் வகையிலும் உயிரியல் அடிப்படை உரிமைத் தத்துவத்தை செயல்முறைப்படுத்தும் வகையிலும் திரு. P.R. சர்க்கார் அவர்கள் உலகில் மிக முக்கியமான தாவரவியல் பூங்காவை கல்கத்தாவில் அமைத்துள்ளார். இதில் (40000) நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட, உலகின் அனைத்து பாகங்களின் தாவர இனங்களைச் சேர்ந்த செடிகள், மரங்கள் ஆகியவை உள்ளன. மேலும் பூமியில் உள்ள உயிரினங்களையும் அவற்றின் வளர்ச்சி மாற்றங்களையும் அவர் கண்காணித்து வந்தார்.
ஸ்ரீ் ஸ்ரீ ஆனந்தமூர்த்தி அவர்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் மிகவும் அதிகமான செயல்வேகத்தோடு செயல்பட்டுள்ளார். இவர் ஒரே நேரத்தில் பிரசங்கங்கள் கொடுப்பது, தொடர்ந்து புத்தகங்கள் எழுதுவது, மிக இனிமையான பாடல்கள் தொடுப்பது. அவருடைய பக்தர்களுக்கு தனிப்பட்ட முறையில் நல்வழிக் குறிப்புகள் அளிப்பது, உலகளவில் பின்னப்பட்டு இயங்கிவரும் ஆனந்தமார்க்க இயக்கத்தின் செயல் பாடுகளை கவனிப்பது, ஆன்மீக சமுதாயப் பணிகளை மேற்பார்வையிடுவது ஆகியவற்றை தொடர்ந்து, ஓய்வின்றி செய்துவந்தார். ஸ்ரீ ஸ்ரீ ஆனந்தமூர்த்தி அவர்கள் மனிதவாழ்க்கையின் ஒவ்வொரு முனையிலும்; ஆனந்த மார்கத்தின் அற்புதமான, சீரான இயக்கத்திற்கும் நம்பிக்கை நட்சத்திரமாக, முடிவில்லா நீரூற்றாக இருந்துவருகிறார். அவரால் இயலாத காரியம் இவ்வுலகில் எதுவுமில்லை.
ஆனந்தமார்கம் ஒரு அரசியல் இயக்கமா?
இல்லை. ஆனந்த மார்கம் ஒரு சமூக ஆன்மீக இயக்கமாகும். சமுதாயத்தின் கூட்டு நலனுக்காக பிரெளட் (PROUT) என்ற ஒரூ அமைப்பை திரு. P.R. சர்க்கார் அவர்கள் நிறுவியுள்ளார். அதாவது அதிக பட்ச உபயோகம் மற்றும் தேவையின் அடிப்படையில் ஒழுங்குமுறை விநியோகம் என்பதே இதன் அடிப்படை. இவற்றில் இயற்கை மற்றும் செயற்கை வளங்கள், அடிப்படை உரிமைகள், சுதந்திரம், உடல், மன, ஆன்ம வளர்ச்சிக்கான வழி முறைகள் ஆகியவை அடங்கும். இதில் சமுதாய மாற்றத்திற்கான சமூக அமைப்புகளும் சமூக (சமாஜ்) அமைப்புகளும் மண்டல வாரியாக இயங்குகின்றன. இவை பொருளாதார தற்சார்புடையதாக சமூகத்தை மாற்ற உதவுகிறது. இந்த சமூக (சமாஜ்) அமைப்புகள் மண்டல அளவிலான மொழி பண்பாட்டை பாதுகாத்து நிலைபெறச்செய்யவும் பெருமுயற்சியுடன் செயல்படுகிறது. பிரெளட் என்பது முதலாளித்துவத்திற்கும் கம்யூனிசத்திற்கும் பதிலாக ஒரு முன்னேற்றகரமான மாற்று அமைப்பாக இயங்குகின்றது
பிரெளட் ஒரே இடத்தில் பொருள் குவிந்து விடுவதைத் தவிர்க்கிறது. இதனால் மிகப்பெரும் பணம் படைத்தவர்களிடம் பொருளும், செல்வமும் தேவைக்கு மேல் அதிக அளவில் சேர்ந்துவிடாமல் தடுப்பதோடு அந்தப் பொருள் பிற எளிய மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, தங்குமிடம், கல்வி, மருத்துவம், மனித உரிமை ஆகியவற்றை எல்லோரும் பெறவும் வழிவகுக்கிறது.
நியோ ஹியூமானிசக் கோட்பாடான அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, ஆதரவு, மனித இனம் மற்றும் அனைத்து உயிர்கள், தாவரங்கள், விலங்குகள் ஆகிய வற்றின் நலனுக்காக கூட்டுமுயற்சி இவைகளின் செயல்முறை விளக்கமே பிரெளட் ஆகும்.
ஒழுக்கம் மற்றும் ஆன்மீக அடிப்படையிலான கொள்கைகளாலும் இவ்வுலக பிரச்சனைகளுக்கு தீர்வுகாண சிறந்த எண்ணங்களைக் காரண காரியங்களோடு இணைத்து பகுத்தறிந்து செயலாற்றுவதாலும் இன்று இந்தியாவிலும் அதற்கப்பால் உலக நாடுகளிலும் பிரெளட் பெருமளவில் வரவேற்கப்படுகிறது.
“மனித இனத்திற்கு எந்த நன்மையைசெய்ய வேண்டுமென்றாலும் மனித குலத்தின்மேல் உள்ள உண்மையான அன்பு அதன் அடித்தளமாக அமைய வேண்டும். லாப நஷ்டக் கணக்கு மட்டும் பார்க்கத் தெரிந்த எந்த ஒரு தலைவனாலும் எந்த காலத்திலும் அன்பான, ஆனந்தமான, உண்மையான சமுதாயத்தை அமைத்து விடமுடியாது. அன்பு என்பது வானளாவிய உயர்ந்த ஒன்று. ஆகையால் தனிப்பட்ட அளவிலான லாப நஷ்ட எண்ணங்கள் எந்த அளவிலும் மனித இனத்தை உயர்த்திடாது.
“நல்ல கட்டுக்கோப்பான சமுதாயம் என்னும் கட்டிடத்தை அமைத்திட அடிப்படையாகத் தேவைப்படும் ஓரே பொருள் உண்மை அன்பைத் தவிர வேறொன்றில்லை.”
- திரு P.R.சர்க்கார்
ஆனந்த மார்க்கம் என்றால் என்ன ?
ஆனந்த மார்க்கம் என்பது பொருளாதார தத்துவமும், ஆன்மீகத் தத்துவமும் இரண்டறக் கலந்த அழகான இணைப்பாகும். இப்பூவுலக சரித்திரத்தில் முதல் முறையாக சமூக செயல்பாடு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றிடையே உள்ள ஆழ்ந்த ஒருமைப்பாடாகும்.
இப்பூமியில் அனைத்து மக்களும் ஒழுக்க அடிப்படையில் நீதியுடனும் மகிழ்ச்சியுடனும் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தும் வழியை நடைமுறைப்படுத்தக்கூடிய அறிவுப்பூர்வமான மனிதகுல இயக்கமாகும்.
“புதிய மனித குலம் என்னும் புதிய சூரிய உதயம் புதிய உலகில் விழித்தெழுவதாக!”
-- P.R. சர்க்கார் --