Thursday, 19 December 2019

சிந்தனைக்கு உணவு 3

🌸ஆனந்த மார்க யோக அறிவியல் 🌸

 🌸சிந்தனைக்கு உணவு 3🌸

🌿தமோ குண உணவுகள்: 🌿

மாமிசம், மீன், வெங்காயம், பூண்டு, முட்டைகள், காளான்கள், மது, புகையிலை, மருந்துகள் மற்றும் நொதிக்க வைத்த, ஊசிப்போன மற்றும் கெட்டுப்போன உணவுகள் தமோ குண உணவுகளாகும். உடல் ஆரோக்கியத்தையும் மன உயர்வையும் விரும்புகின்றவர்கள் இந்த உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். ஆனாலும் சில குறிப்பிட்ட தருணங்களில், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு அல்லது ஒரு மனிதருடைய உடல் உழைப்புக்கு ஏற்றவாறு இந்த உணவுகளை சாப்பிடலாம்*. உதாரணமாக, மிகக் கடுமையான குளிர்காலத்தில் மாமிசமும் சிறிதளவு மதுவும் உடலை சூடாக வைத்திருப்பதற்கு தேவையாக இருக்கலாம்.

🌿காளான்கள்:🌿

சைவ உணவு சாப்பிடுகின்ற சிலர் காளான்களை மாமிச உணவில் உள்ள புரதத்திற்கு மாற்று உணவாக கருதுகின்றனர். காளான்களில் அதிகப் புரதப்பொருள் உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அது மனதிற்கும் உடலுக்கும் நச்சுத்தன்மையைத் தரக்கூடியது. ஒளிச்சேர்க்கையில்(சூரிய ஒளியிலிருந்து சக்தி பெறுதல்) வாழுகின்ற மற்றத் தாவரங்களில் உள்ளதுபோல இந்த காளான்களில் பச்சயம் கிடையாது. அதனால் இவை சூரிய சக்தியை பயன்படுத்துவது கிடையாது. அதனால் இவை நிச்சயமாக இறந்துபோன தாவரங்கள், விலங்குகள், விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றிலிருந்துதான்  அதற்குத் தேவையான சத்துக்களை பெறுகின்றன. மரணத்திலிருந்தும், இருளில் இருந்தும் தங்களுக்குத் தேவையான சக்தியை பெறுகின்ற இந்தக் காளான்கள், அவற்றின் தமோகுணப் பண்புகளை அவற்றை  சாப்பிடுகின்றவர்களுக்குள் செலுத்திவிடுகின்றன. சாப்பிடும் வகையைச் சார்ந்த அதிக விலையுள்ள காளான்கள்கூட, அதிகமாக சாப்பிட்டால் ஜீரணமாவதில்லை, மேலும் அவை  மனத்தை மந்தமாக்கி, உடலை சோம்பலாக்கி தூக்கத்தை தூண்டிவிடுகின்றன. பல சமயங்களில் இந்த காளான்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை பெறுவதற்காக செலவளிக்கின்ற சக்தியானது அதிலிருந்து பெருகின்ற சக்தியைவிட அதிகமாக இருக்கிறது.

காளான்கள் விரைவில் அழுகிப்போய், நச்சுத்தன்மையுள்ள பொருளாக மாறிவிடுகின்றன.  உண்ணும் வகையைச் சார்ந்த சில காளான்களை வெப்பமான நாளில் பறித்து, போதிய காற்றோட்டம் இல்லாத இடத்தில் வைத்திருந்தால், அவற்றை வீட்டுக்கு எடுத்துச்செல்லும்போதே அழுகிப்போய்விடுவதுண்டு. அதனால் தாவர உணவை சாப்பிடுகின்ற பலர் இந்த காளான்களை உணவாக எடுத்துக்கொள்வது கிடையாது. ஏனென்றால் நமது உடலை பாதுகாப்பதற்குத் தேவையான எல்லா மூலப்பொருள்களும் புதுமை மாறாத சத்வ உணவுகளிலிருந்துதான் கிடைக்கின்றன.

🌿வெங்காயமும் பூண்டும்:🌿

வெங்காயமும் பூண்டும் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிப்பதாகவும், அவை குடல் புண்களை உண்டாக்குகின்றன அல்லது தீவிரப்படுத்துகின்றன என்றும் பல மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உடலில் அமிலத்தன்மை அதிகமானால் அது நோய்களுக்குரிய காரணங்களில் ஒன்றாய் ஆகிவிடும் என்பதால், வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடானது. மேலும் இவை உடலில் வெப்பத்தை அதிகரிப்பதால், அது மனதையும் பாதிக்கிறது. வெங்காயத்திலிருந்தும் பூண்டிலிருந்தும் வருகின்ற வாசனை கண்களின் திசுக்களை பாதித்து கண்ணீர் வர வைப்பது போல அவை மனதிலும் மிகப்பெரிய அளவில் கிளர்ச்சியை உண்டாக்குகின்றன. அதனால் மன அமைதியை அல்லது உயர்நிலை மெய்யுணர்வை பெற விரும்புகின்றவர்கள் இவற்றை சாப்பிடுவதில்லை.

🌿முட்டை:🌿

முட்டையில் அதிக அளவு கொழுப்புச் சத்து உள்ளது. இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான காரணங்களில் இது முக்கிய காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு முட்டையிலும் 200 மி.கி. கொழுப்பு இருக்கிறது. இது 5 பவுண்டு எடையுள்ள ஒரு மீனில் உள்ள கொழுப்பைப் போல இரண்டு மடங்கு ஆகும். அதனால்தான் மருத்துவர்கள் தங்களுடைய இதய நோயாளிகளை முட்டை சாப்பிடவே கூடாது என்று அறிவுரை கூறுகின்றனர். அதிக அளவு முட்டைகளை சாப்பிடுவதால் காய்கறி உணவிலிருந்து கிடைக்கின்ற எல்லா பயன்களும் முழுமையாய் இழந்துவிடுகிறோம் என்று ஊட்டச்சத்து வல்லுனர்கள் வாதிடுகின்றனர்.

(ஆனந்த மார்க - Food for Thought என்ற புத்தகத்திலிருந்து)

🙏குரு அருள் ஒன்றே துணை🙏

 குறிப்பு:

**இது கடுங்குளிர் பிரதேசங்களுக்கு மட்டுமே பொருந்தும் *உ.ம்:* ஆண்டு முழுதும் உறைபணி சூழந்த அண்ட்டார்டிக்கா போன்ற பிரதேசங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதனால் இதை மற்றவர்கள் சாதகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

நன்றியுடன் அருண்குமார🙏

No comments:

Post a Comment