Sunday, 22 December 2019

மாமிசம் சாப்பிடுவதால் உண்டாகும் ஆபத்து

🌸 *ஆனந்த மார்க யோக அறிவியல் - சிந்தனைக்கு உணவு* 🌸

மாமிசம் சாப்பிடுவதால் உண்டாகும் ஆபத்துகள் என்னென்ன?(பாகம் -1)

 மிக அதிகமாக மாமிசத்தையும் கொழுப்பையும் சாப்பிட்டு வாழ்கின்ற எஸ்கிமோக்கள் சராசரியாக 27½ வயதுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை. இரஸ்யாவின் கிழக்கு பகுதியில் வாழ்கின்ற பழங்குடி நாடோடிகளான கிர்கர்கள் மாமிசத்தையே உணவாகக் கொண்டு வாழ்பவர்கள். அவர்கள் சீக்கிரமாக முதுமை அடைந்துவிடுகிறார்கள், சீக்கிரமாகவே இறந்தும் விடுகிறார்கள். அவர்கள் 40 வயதை தாண்டுவது கிடையாது. ஆனால் அதற்கு மனித ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள், மாமிசம் சாப்பிடாதவர்களின் உடல் ஆரோக்கியம், பலம், நீண்ட ஆயுள் ஆகியவற்றுக்கு ஆதாரங்கள் தருகின்றன. *உதாரணம்* : பாக்கிஸ்தானில் உள்ள ஹன்ஸா மக்கள், மெக்ஸிகோவில் உள்ள ஒட்டோமி பழங்குடி மக்கள், அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் வாழ்கின்ற பூர்வீக மக்கள். இந்த மக்கள் 110 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் உயிர் வாழ்வது ஒரு சாதாரண விஷயம். உலக சுகாதார புள்ளிவிவரங்கள் தெளிவாக தெரிவிப்பது என்னவென்றால், அதிகமாக மாமிசத்தை சாப்பிடுகின்ற நாடுகளில் வாழுகின்ற மனிதர்கள் இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், தாவர உணவுகளை அதிகமாக சாப்பிடுகின்ற நாடுகளில் உள்ள மக்கள் இதுபோன்ற நோய்களால் மிகக் குறைவாகவே பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கிறது. (உண்மையில், 1977ல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் சட்டமன்ற சத்துணவுக் குழுவானது “மாமிச உணவைக் குறைத்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் தானிய வகைகள் சாப்பிடுவதை அதிகரிப்போம்” என்று பரிந்துரை செய்தது. இதை “அமெரிக்க ஐக்கிய நாட்டின் உணவு இலட்சியம்” என்று அறிவித்தது). *மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்கு ஏன் அதிக நோய்கள் வருகின்றன, ஏன் அவர்கள் குறைந்த ஆயுளில் இறந்து போகிறார்கள்.* விஷத்தன்மை: கொல்லப்படுவதற்கு சற்று முன்பும், கொல்லப்படுகின்றபோதும், பயப்படுகின்ற விலங்கின் உடலில் ஆழமான இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால் உடல் முழுவதும் நச்சுத்தன்மை பரவுகிறது. இவ்வாறு வேதனை-விஷமானது அந்த இறந்த உடல் முழுவதும் பரவுகிறது. மனக்கிளர்ச்சியானது உடலில் மிக அதிகமான உயிர்-வேதியல் மாற்றங்களை உண்டாக்குகிறது என்பது இன்றைக்கு எல்லோரும் அறிந்த உண்மை. குறிப்பாக, இரத்தத்தில் இயக்குநீர் மாற்றங்கள் உண்டாகிறது என்பது உண்மை. அளவுக்கதிகமான கோபம் அல்லது பயம் ஏற்படுகின்றபோது உடலில் நோய் உண்டாகிறது. மனிதர்களைப் போலவே ஆபத்தான தருணங்களில் விலங்குகளின் உடலிலும் இதுபோன்ற உயிர்-வேதியல் மாற்றங்கள் மிக அதிகமாக உண்டாகின்றன. தங்களைச் சுற்றியுள்ள விலங்குகள் வாழ்வுக்கும் பிழைப்பதற்கும் போராடி, தப்பிக்க முடியாமல் இறப்பதை பார்த்துக்கொண்டிருக்கின்ற மற்ற விலங்குகளின் இரத்தத்தில் உள்ள இயக்குநீர்களின் அளவு - குறிப்பாக அட்ரினாலின் என்ற இயக்குநீரின் அளவு தீவிரமாக அதிகரிக்கிறது. அளவுக்கு அதிகமாக இப்படி சுரந்த இயக்குநீர்கள் அந்த விலங்கின் சதையில் தங்கி இருப்பதால், அந்த உடலை சாப்பிடுகின்ற மனிதர்களின் மென்தசைகளில் விஷத்தன்மையை உண்டாக்கி, பிறகு அது அந்த மனிதரின் மனதிலும் பாதிப்பை உண்டாக்குகிறது. அமெரிக்க ஊட்டச்சத்து நிறுவனம் கூறுகிறது, “விலங்குகளின் பிணத்தில் உள்ள சதையில் விஷத்தன்மையான இரத்தமும், அதன் துணைப் பொருள்களும் நிரம்பி உள்ளன” என்று. *புற்றுநோய்* : அண்மையில் தாவர உணவு உண்ணுகின்ற, ஐம்பதாயிரம் நபர் கொண்ட ஒரு குழுவிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த முடிவானது புற்றுநோய் ஆராய்ச்சி உலகத்தையே உலுக்கிவிட்டது. அந்த ஆய்வு மிகத்தெளிவாய் தெரிவிப்பது என்னவென்றால், இந்த மனிதர்களில் புற்றுநோய் உள்ளவர்கள் வியக்கத்தக்க வகையில் மிகக் குறைவாய் இருந்தார்கள் என்பதுதான். இதே எண்ணிக்கை மற்றும் இதே வயதுள்ள ஆண்களும் பெண்களும் உள்ள மற்ற உணவு பழக்கமுள்ள ஒரு குழுவினரோடு ஒப்பிட்டு பார்த்ததில் முதலாவது குழுவைச் சேர்ந்த மனிதர்களிடம் எல்லா வகையான புற்றுநோய் அறிகுறிகளும் மிகக் குறைவாகவே இருந்தது, இவர்களுடைய ஆயுட்காலமும் நீண்டதாய் இருந்தது. அண்மையில் கலிஃபோர்னியாவில் வாழ்கின்ற மோர்மோன் இனத்தவரை ஆய்வு செய்ததில் புற்றுநோயின் அளவு மற்ற மனிதர்களைவிட 50 விழுக்காடு இவர்களிடம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. மோர்மோன்கள் மாமிசம் சாப்பிடுவது மிகவும் குறைவு. மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்கு அதிகமாக புற்றுநோய் வருவது ஏன்? நாட்பட்ட பழைய மாமிசம் பிசுபிசுப்பாகவும் சாம்பல்நிறம் கலந்த பச்சை நிறமாயும் மாறிவிடுவது ஒரு காரணமாய் இருக்கலாம். மாமிச தொழிற்சாலைகளில் இந்த நிறமாற்றத்தை மறைப்பதற்காக நைட்ரைட்டுகள், நைட்ரேட்டுகள் மற்றும் பிற பதனப்பொருள்களைச் சேர்க்கிறார்கள். இந்த பதனப்பொருள்கள் நிறம்மாறிய மாமிசத்தை சிவப்பு நிறமாகக் காட்டுகிறது. ஆனால் அண்மையில் இந்த பதனப்பொருள்கள் புற்றுநோயை தூண்டுகின்றன என்று கண்டறிந்துள்ளனர். டேன்னஸ்ஸீயில் உள்ள ஓக் ரிட்ஜ் நேஷனல் லேபரட்டரியில் புற்றுநோய் ஆராய்ச்சியாளராக பணியாற்றுகின்ற டாக்டர் வில்லியம் லிஜின்ஸ்கி கூறுகையில், “நான் நைட்ரேட் சேர்க்கப்பட்ட உணவை என்னுடைய பூனைக்குகூட கொடுப்பதில்லை” என்று கூறுகிறார். மேலும், பிரிட்டன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் மாமிசம் சாப்பிடுகின்ற மனிதர்களின் குடல் பாக்டீரியாக்களையும் மாமிசம் சாப்பிடாத மனிதர்களின் குடல் பாக்டீரியாக்களையும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தபோது அதிகமான வித்தியாசம் இருப்பதை கண்டறிந்தனர். மாமிசம் சாப்பிடுகின்றவர்களுடைய குடலானது அதிலுள்ள ஜீரண நீருடன் எதிர்வினை புரிந்து புற்றுநோய் உண்டாக்கும் இரசாயனப் பொருள்களை உண்டாக்குகின்றன என்பதை கண்டறிந்தனர். எதனால் வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா போன்ற அதிக மாமிசம் சாப்பிடுகின்ற நாடுகளில் குடல் புற்றுநோயாளிகள் அதிகமாகவும் இந்தியா போன்ற மாமிசம் குறைவாக சாப்பிடுகின்ற நாடுகளில் குறைவாகவும் உள்ளனர் என்பதை விளக்குவதற்கு இந்த சான்றுகளே போதுமானது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குடல் புற்றுநோய்தான் நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் உள்ள இரண்டாம் வகை புற்றுநோயாகும். ஸ்காட்லாந்து மக்கள் ஆங்கிலேயர்களைவிட 20மூ அதிகமாக மாட்டிறைச்சி சாப்பிடுகின்றவர்கள். உலகிலேயே மிக அதிகமான குடல் புற்றுநோயாளிகள் உள்ள நாடுகளில் இந்த நாடும் ஒன்றாகும் *இரசாயன உணவு:* மாமிசம் சாப்பிடுவதை, ‘உணவுச் சங்கிலியின் உச்சியில் உண்பது’ என்று சொல்வார்கள். இயற்கையிலேயே உண்பவர்களில் மிக நீண்ட சங்கிலி அமைப்பு உள்ளது. தாவரங்கள் சூரிய ஒளியை, காற்று மற்றும் நீர் ஆகியவற்றை ‘உண்ணுகின்றன’, விலங்குகள் தாவரங்களை உண்ணுகின்றன, பெரிய விலங்குகள் அல்லது மனிதர்கள் சிறிய விலங்குகளை உண்ணுகின்றனர். இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள விளைநிலங்களில் விஷமுள்ள இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி பயிர்களை வளர்க்கிறார்கள். இந்தப் பயிர்களையும் புல்லையும் சாப்பிடுகின்ற விலங்குகளின் உடல் சதையில் இந்த விஷங்கள் தங்கி இருக்கின்றன. உதாரணமாக, வயலில் னுனுவு என்ற பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது, இது மிகவும் சக்திமிக்க விஷமாகும், இது புற்றுநோய், மலட்டுத்தன்மை மற்றும் தீவிரமான கல்லீரல் நோய்களை உண்டாக்கக்கூடியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த னுனுவு மற்றும் இதுபோன்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் விலங்குகளின் மற்றும் மீன்களின் கொழுப்பில் சேர்த்துவைக்கப்படுகின்றன. ஒருமுறை சேர்ந்துவிட்டால் அது அழிவது கடினம். இவ்வாறு பசுக்கள் சாப்பிடுகின்ற புல் மற்றும் தீவனங்களில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் அவற்றின் உடலில் தங்கி இருக்கின்றன, அந்த மாமிசத்தை நீங்கள் சாப்பிடும்போது அந்த விலங்கு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உடலில் சேர்த்துவைத்திருந்த னுனுவு மற்றும் பிற இரசாயனங்களை நீங்கள் உங்களுடைய உடலில் ஏற்றுக்கொள்கிறீர்கள். உணவு சங்கிலியின் ‘உச்சி’யில்(முடிவில்) மனிதான்தான் கடைசியில் உண்பவனாக இருக்கிறான். அதனால் அவனே அதிகபட்சமான விஷத்தன்மைகொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை ஏற்றுக்கொள்பவனாகவும் இருக்கிறான். ஆனால் மாமிசத்தில் உள்ள விஷத்தன்மை இத்துடன் நின்றுவிடவில்லை. மாமிச விலங்குகள் நன்றாக கொழுப்பதற்காகவும், விரைவாக வளர்வதற்காகவும், மாமிசத்தின் நிறத்தை கூட்டுவதற்காகவும் நிறைய இரசாயனங்களை இந்த விலங்குகளுக்கு கொடுக்கிறார்கள். மாமிசத்தை அதிகமாக உற்பத்தியாக்கி, அதிக இலாபம் ஈட்டுவதற்காக, பசியை தூண்டுகின்ற, நோய் கிருமிகளை கொல்லும் மருந்துகள் மற்றும் பல இரசாயன கலவைகளை இந்த விலங்குகளுக்கு கொடுத்து, அதிகப்படியான உணவை திணிக்கிறார்கள். 18.7.1971 அன்று நியூ யார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தியில், “மாமிசம் சாப்பிடுகின்றவர்கள் எதிர்கொள்ளுகின்ற ஆபத்து என்னவென்றால், விலங்குகளுக்கு கொடுக்கப்படுகின்ற நைட்ரைட்டுகள், நைட்ரேட்டுகள், இயக்குநீர்கள், நோய்எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பல இரசாயனங்களின் கசடுகளும், சல்மோனெல்லா போன்ற நுண்கிருமிகளும் விலங்குகளின் சதைகளில் தங்கி உள்ளன. இவை யாவும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்களாகும் என்பதுதான். இன்னும் சொல்லப்போனால், நிறைய விலங்குகள் அவை மாமிசத்திற்காக வெட்டப்படுவதற்கு முன்னதாகவே இந்த இரசாயன மருந்துகளால் இறந்தேவிடுகின்றன என்பதுதான் உண்மை. ஆய்வுகளில் தெரிந்த உண்மை என்னவென்றால், மாமிசத்திலும் மீன்களிலும் உள்ள இத்தகைய இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்குகிறது, கருக்கலைதல், கர்ப்பிணிகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் மிகுதியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதுதான். அதனால் கருவுற்ற தாய்மார்கள் பிறக்கப்போகும் தங்களுடைய குழந்தைகளின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை காக்கும் பொருட்டு, தங்களுடைய உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். -----மாமிசம் சாப்பிடுவதால் உண்டாகும் ஆபத்துகள் என்னென்ன? - இரண்டாம் பாகம், அடுத்தப் பதிவில் பார்க்கவும்🙏 🌸🙏🌸 (ஆனந்த மார்க - Food for Thought - என்ற புத்தகத்திலிருந்து) .....தொடரும்...

No comments:

Post a Comment