Wednesday, 7 October 2020

 பிரித்துப் பார்க்கின்ற அல்லது வேறுபடுத்திப் பார்க்கின்ற உணர்வு பக்தர்களுக்குப் பொருந்தாதது 

-------------------------------------------------------------------------------------------------------------------------

"விஷ்ணுபரிஸ்திதஹ விஷ்ணு விஷ்ணுர் காததி விஸ்ணவே

கதம் ஹஸஸி ரே விஷ்ணு சர்வம் விஷ்ணுமயம் ஜகத்"

ஒருமுறை மாபெரும் தந்த்ர யோகி ஒருவர் தன் அன்பான நாயை மடியில் உட்காரவைத்துக் கொண்டு உணவருந்திக் கொண்டிருந்தார். அந்த நாய் கீர்த்தனையை கேட்பதில் மிகவும் நாட்டம் கொண்டதாய் இருந்தது. எப்போதெல்லாம் கீர்த்தனை பாடப்படுகின்றதோ அப்போதெல்லாம் அந்த நாயும் மகிழ்ந்து ஆடும். உண்மையில் அந்த நாய் பல மனிதர்களைக் காட்டிலும் மிகவும் முன்னேற்றமடைந்ததாய் இருந்தது. இந்த தாந்த்ரீக யோகியும் அவருடைய நாயும் ஒரே தட்டில் உணவை பகிர்ந்து உண்டு கொண்டிருந்தனர். தீண்டாமையை ஆதரிக்கின்ற ஒரு ஞானவாதி அந்த வழியாக வந்தார். இருவரும் ஒரே தட்டில் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட அவர் இது என்ன அசிங்கம், நாயோடு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய் என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அப்போது அந்த தாந்த்ரீக யோகி, "நானும் விஷ்ணு இந்த நாயும் விஷ்ணு. ஆகையால் விஷ்ணுதான் என்னோடு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் நீங்களும் விஷ்ணுதான், இதுதானே உண்மை. அப்படி இருக்க நீங்கள் இப்படி  இழிவாய் பேசுவது ஏன்?" என்றார். இந்த அகிலம் முழுவதும் விஷ்ணுதான், விஷ்ணுவே எங்கும் உள்ளார். அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்.

 

பிரித்துப் பார்க்கின்ற அல்லது வேறுபடுத்திப் பார்க்கின்ற உணர்வு பக்தர்களுக்குப் பொருந்தாதது. அவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான். வேறுபாடுகள் அனைத்தும் மறைந்துபோய் விடுகின்றன. மனிதர்களுக்கு மட்டுமே இத்தகைய மனநிலை கிடைக்கும். அதனால்தான் மற்ற எல்லா உயிரினங்களைக் காட்டிலும் மனிதர்கள் உயர்வானவர்களாக இருக்கிறார்கள். இதற்கு முன்பு இல்லையென்றாலும், இப்போதெல்லாம் மனிதர்களோடு நெருங்கி வாழுகின்ற வாய்ப்பைப் பெற்ற பறவைகளும் விலங்குகளும் கடவுளை நேசிக்கும் மனநிலையை நிச்சயம் அடையும். மனித மனதுக்குள் அடக்கி வைக்கப்பட்டுள்ள இந்த அகிலாண்ட அன்பானது ஒருநாள் தானாக வெளிப்பட்டாக வேண்டும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. மனிதர்களின் நடத்தையை கவனித்துப் பார்த்தால் இறையன்பில் மூழ்கியுள்ளவர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். அத்தகைய மனிதர்கள் ஒரு போதும் மற்றவர்களை ஏமாற்ற நினைக்க மாட்டார்கள். இத்தகைய ஏமாற்றுக்காரர்களைப் பற்றி நான் எப்படி விவரித்திருக்கிறேன் என்று உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும். அவர்கள் எல்லோரும் அதர்மவாதிகள், புன்னியமில்லாத பாவிகள். பெரிய கோவில்கள் கட்டுவதாலும் புனித யாத்ரிகர்களுக்காக தங்கும் விடுதிகள் கட்டிக் கொடுப்பதாலும் இறைவன்மீது அன்பு செலுத்துவதாக இவர்கள் எண்ணுகிறார்கள். அவர்கள் எண்ணம் தவறானது.  இது வீண் முயற்சியாகும். வெறும் ஏமாற்று வேலையாகும். தவறாக சம்பாதித்தப் பணத்தை தானமாக கொடுத்துவிடுவதால் அவர்களுடைய பாவத்தை ஒருபோதும் சரிகட்டி  விட முடியாது. கடவுள் மீதான அன்பை ஒருவர் அவ்வளவு எளிதாய் பெற்றுவிட முடியாது. ஈஷ்வர ப்ரேமை உள்ளவர்கள் ஒருபோதும் பிறரை வஞ்சிக்க மாட்டார்கள், அது அவர்களால் முடியாது. அவர்கள், கொடுமைகள், அநீதி மற்றும் எல்லாவிதமான ஏமாற்று வேலைகளுக்கும் எதிராக தங்கள் குரலை உயர்த்துவர்கள். இத்தகைய தவறுகளை எதிர்த்து நிற்கும் நேர்மையான வீரம் இல்லாதவர்களெல்லாம் பொய்யர்களே - அவர்கள் ஒருபோதும் நியாயமானவர்கள் அல்ல. 'பக்தி ப்ரேமஸ்வரூபினீ' ப்ரேமையுடன் ஒன்றியவர்களின் செயல்கள் எப்போதும் சுயநலமற்ற உண்மையான தயாள குணத்தை ப்ரதிபலிப்பதாய் இருக்கும். 


🌷 ஸ்ரீ ஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌷


(ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து)

No comments:

Post a Comment