கிருஷ்ணன் ஒரு போதும் பால்காரிகளின் வீட்டில் வெண்ணெயைத் திருடவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------------
" ஹரத்தி பாபானீத்யர்த்தே ஹரி ". ' ஹரண் ' என்றால் ' திருடுவது '. அதனால் ஹரி என்றால் " திருடுபவன் " என்று பொருள். இது என்ன விந்தை! ஹரி எதற்காக திருட வேண்டும்? இது இயம நியமத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு புறம்பாக இருக்கின்றதே! இது மிகவும் தவறாயிற்றே! அவன் இந்த கொள்கைகளை மீறி நடப்பான் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படியானால் அவன் எதற்காக இதைச் செய்கிறான்? நிச்சயமாக பரமபுருஸன் தான் படைத்த உயிர்கள் யாவும் செல்வ செழிப்போடும், நலமோடும் வாழவேண்டும் என்றுதான் விரும்புகின்றான். மனிதர்கள் ஒவ்வொரு பிறவியிலும் பாவங்களை சேர்த்துக்கொண்டே இருக்கின்றனர். அவற்றை கழிப்பதற்காக இருபது பிறவிகளாவது எடுத்தாக வேண்டும். அப்படியென்றால் மனித இனத்தின் எதர்காலமே இருண்டுபோய் கிடக்கும் என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதானா? ஒரு பிறப்பில் செய்த பாவங்களின் சுமையே சுமக்க முடியாத பாரமாய் இருக்கின்றபோது, இருபது பிறவிகளாக சேர்த்து வைத்திருக்கின்ற பாவங்களை சுமப்பது எத்தனைத் துன்பமானது என்று கற்பனை செய்து பாருங்கள். மனிதர்களால் இத்தனை பெரிய சுமையை சுமக்க முடியும் என்று எப்படி நம்மால் எதிர்பார்க்க முடியும்?
இங்கே விமோக்ஷனத்திற்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதுதான் பரமபுருஸன். அவன் தன்னுடைய அன்புக்குரிய பிள்ளைகள் மீது ஆழ்ந்த அக்கரை கொண்டுள்ளான். இந்த நிலையில் அவன் என்ன செய்கிறான்? தன்னுடைய பக்தர்களிடம் அவன் சொல்கிறான், " என் குழந்தைகளே, உங்களுடைய பாவங்களை என்னிடத்தில் கொடுத்துவிடுங்கள், இல்லையென்றால் உங்களுக்கு எதிர்காலமே கிடையாது. இத்தனைப் பெரிய பாவச் சுமைகளை எத்தனை பிறவிகளுக்குத்தான் உங்களால் சுமக்க முடியும்? உங்களுடைய சுமையை என்னிடத்தில் தந்துவிடுவதுதான் நல்லது " என்று சொல்கிறான். சரி, அப்படி பரமபுருஸன் கூறினாலும் பக்தர்கள் தங்களுடைய பாவச் சுமையை பகவானிடம் கொடுத்துவிட சம்மதிக்கிறார்களா என்பதுதான் இங்கே எழுகின்ற கேள்வி. இல்லை, அவர்கள் கொடுக்கமாட்டார்கள். அதற்கு மாறாக அவர்கள், " நாங்கள் உனக்கு இனிப்புகளை தருவதற்குத் தயாராக இருக்கிறோம், ஆனால் எங்களுடைய பாவங்களை எப்படி உன்னிடம் தரமுடியும்?, மலர் மாலைகளை எங்களால் தர முடியும் ஆனால் பாவங்களைத் தர முடியாது " என்று கூறுகிறார்கள். எந்த பக்தனும் இதைச் செய்ய ஒத்துக்கொள்ள மாட்டான். எப்போதாவது இதைச் செய்யலாம் என்ற எண்ணம் ஒரு பக்தனுடைய மனதில் தோன்றினாலும் அவனோ அல்லது அவளோ நிச்சயமாக " இல்லை, இல்லை என்னால் என்னுடைய பாவங்களைத் தர முடியாது " என்றே சொல்வார்கள். ஆனாலும் இங்கே உண்மை என்னவென்றால், பகவான் பக்தர்களுக்குச் சொந்தமானவன். ஆகையால் அவர்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு எது தேவையோ அதை நிச்சயமாகச் செய்வான். அதனால் அவர்களுடைய பாவங்களை திருடிக்கொள்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியே கிடையாது. ஆகையால் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களுடைய பாவங்களை எடுத்துக்கொள்கிறான். மற்றவர்களுக்குச் சொந்தமான பொருளை அவர்களுடைய அனுமதி இல்லாமலேயே எடுத்துக்கொள்கின்ற செயலை நாம் என்னவென்று சொல்வோம். திருட்டு என்றுதானே சொல்வோம். எனவே அவன் திருடுகிறான், பாவங்களைத் திருடுகிறான். அதனால்தான் அவனை ஹரி என்று சொல்கிறோம். சரி, பாவங்களைத் திருடியபிறகு பக்தர்களுக்கு என்ன நடக்கிறது? அவர்களுடைய மனம் தூய்மையாகிறது. பொதுவாகவே மனித மனத்தில் பல்வேறு குறைபாடுகளும் பலவீனங்களும் இருக்கும். ஆனால், மனிதர்கள் தங்களுடைய அறிவைத் தூய்மையாக்கி, ஆன்மீகப் பயிற்சிகளைச் சரியாக செய்து வந்தார்களேயானால் அவர்களுடைய மனம் மேல் நிiலையை நோக்கிச் செல்லும். அதாவது ஜடநிலையிலிருந்து நுண்ணிய நிலையை நோக்கிச் செல்லும். உதாரணத்திற்கு வெண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். தயிரை கடைகின்றபோது அதனுடைய முக்கிய சாரமாகிய வெண்ணெயானது மோர் பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. அதுபோலத்தான் பாவங்கள் திருடப்பட்ட பிறகு மனத்தின் உண்மையான சாரமாகிய ஆத்மாவானது அந்த மனத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. அதனால்தான் ஹரியை " வெண்ணெய் திருடன் " என்று விளையாட்டாக அழைப்பார்கள். இதை அப்படியே சொல்லின் பொருளாக பார்ப்பது தவறு. கிருஷ்ணன் ஒரு போதும் பால்காரிகளின் வீட்டில் வெண்ணெயைத் திருடவில்லை.
🌷ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி🌷
(ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து)
No comments:
Post a Comment