சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டிய தருணம் ஏற்கனவே வந்துவிட்டது
--------------------------------------------------------------------------------------------------------------------------
மனித வாழ்வு பல்வேறு வகையான பழக்க வழக்கங்களை கொண்டதாக உள்ளது. சாப்பிடுகின்ற மற்றும் குடிக்கின்ற பழக்கம், ஆடைகள் அணிகின்ற பழக்கம், ஆடிப் பாடுகின்ற, வீடுகளை கட்டுகின்ற, மருத்துவ சிகிச்சை செய்துகொள்கிற என்று பலவகையான பழக்கவழக்கம் உள்ள மனிதர்கள் உள்ளனர். இந்த பழக்க வழக்கங்கள் அனைத்தும் சேர்ந்ததுதான் கலாச்சாரம் என்பது. இதில் எதையாவது ஒன்றை மட்டும் கலாச்சாரம் என்று சொல்ல முடியாது. இவை அனைத்தும் சேர்ந்ததுதான் கலாச்சாரம் என்பது. மனித வாழ்வின் இத்தனை வெளிப்பாடுகளையும் அதாவது, நாட்டியம், இசை மருத்துவம், நாகரீகம் மற்றும் வாழ்வின் அனைத்து பகுதிகளையும் ஒரு ஒழுங்குமுறையில் கொண்டுவர சதாஷிவன் விரும்பினார். இது மாபெரும் மாற்றமாக இருந்தது, ஒரு புரட்சிகரமான மாற்றமாக இருந்தது. அதற்குமுன் இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்ந்ததே இல்லை. சாதாரண தலைவர்களாலோ அல்லது ரிஸிகளாலோ இதுபோன்ற எட்டிபிடிக்க முடியாத மாற்றங்களை கொண்டுவர முடியவில்லை. மாறிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களையும் மாற்றிக்கொள்கின்ற மனிதர்களுக்கு உதவ நினைக்கின்றவர்களை நான் “ ஸத்விப்ர ” என்று கூறினேன். ஆனால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்குகின்றவர்களை “ மஹாசத்விப்ர ” என்று சொல்வேன். மாற்றங்கள் ஏற்படுகின்ற சூழ்நிலைகளில் மிகச்சரியாக அனுசரித்து வாழ்வதற்கான வழிகளை மக்களுக்கு சரியாக காட்டி, சரியான பாதையில் வழிநடத்துபவர்கள்தான் சத்விப்ரர்கள்.
ஆனால் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திடுவது சத்விப்ரர்களின் பணி அல்ல, அது மஹாசத்விப்ரரின் கடமை. மஹாசத்விப்ர என்பது வேதாந்த சொல்லாகும். வேதங்களில் இவர் “ தாரக ப்ரஹ்ம ” என்று அழைக்கப்படுகிறார். சதாஷிவன் அத்தகைய ஒரு தாரக ப்ரஹ்ம ஆவார். அவர் வாழ்வின் அனைத்து பகுதிகளுக்கும் வழிகாட்டும் ஒரு ஆற்றல் மிக்க வழிகாட்டி. ஷிவனுக்கு பிந்தய காலத்தில் சமுதாய முன்னேற்றத்தின் வேகம் குறைந்து போனது. அது தன் இயக்க ஆற்றலை இழந்து சரிவை நோக்கிச் சென்றது. சமுதாய இயந்திரத்தின் பல்வேறு பாகங்கள் துரு பிடிக்க ஆரம்பித்தன. அந்த சூழ்நிலையில் சமுதாயத்தை முன்னே நகர்த்தி செல்வதற்கும் மக்களை சரியான பாதையில் வழிநடத்துவதற்கும் வல்லமை பொருந்திய மற்றொரு மாமனிதர் தேவைபட்டார். இவ்வாறு 3500 ஆண்டுகளுக்கு முன் மற்றொரு மஹாபுருஸனான ஸ்ரீ கிருஸ்ணர் பிறந்தார். அவரும் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்தார், சக்திமிக்க சமுதாய முன்னேற்ற அலைகளை அவர் புகுத்தினார்.
சதாஷிவன் மட்டும் தனியாகத்தான் சமுதாயத்தில் பெரும்பான்மையான மாற்றங்களை கொண்டுவந்தாரா என்று ஒருவர் கேட்கலாம். இல்லை நிச்சயமாக இல்லை! அவருக்கு உதவியாக நிறைய சாதகர்கள், பக்தர்கள், அறிவு மேதைகள் மற்றும் பாமர மக்களும் இருந்தனர். வேதாந்தத்தில் அவர்களை ஷிவனுடைய “ கணங்கள் ” என்று சொல்லி இருக்கிறார்கள். மற்ற கடவுள்களும் பெண் கடவுள்களும் பல்வேறு அணிகலன்களை அணிந்திருந்தனர், சிலர் காது வளையங்கள் மற்றும் கிரீடம் அணிந்திருந்தனர், மற்றவர்கள் சங்கு, தாமரை மற்றும் சக்கரம் போன்ற ஆயுதங்களை வைத்திருந்தனர். ஆனால் ஷிவனிடம் இருந்த ஆயுதங்களும் ஆபரணங்களும் அவருடைய பக்தர்கள் மட்டுமே. அவர்கள் சிறிதும் சோர்வின்றி அவருடைய குறிப்பாணைகளுக்கு ஏற்றவாறு பணி செய்தனர்.
சரி, ஸ்ரீ கிருஸ்ணரின் காலத்தில் என்ன நடந்தது? அவரும் சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றங்களை உண்டாக்கினார். புரட்சிகரமான அந்த பணியில் அவருக்கு உதவியாக இருந்தவர்கள் யாரும் புத்திசாலிகளும் அல்ல, அறிவு மேதைகளும் அல்ல, அல்லது அவர்கள் அனைவரும் வேத விற்பன்னர்களோ அல்ல. அவர்களுள் பலர் சாதாரண சமுதாய மக்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை, அவர்கள் அனைவரும் உண்மையான பக்தர்களாகவும் சமுதாய நன்மைக்காக ஸ்ரீகிருஸ்ணரின்(வ்ரஜகிருஸ்ணன்) குறிப்பாணைகளின்படி உண்மையாக உழைப்பவர்களாகவும் இருந்தனர். அவர்களுடைய சொத்து என்பது அவர்களுடைய இலட்சியமாகிய இஸ்ட தெய்வம்தான், அந்த கிருஸ்ணன் மீது உள்ள உண்மையான பக்தி மட்டும்தான். அவர்களுடைய பக்தியின் காரணத்தால்தான் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் வெற்றியாளர்களாக இருந்தனர். மக்கள் அவர்களுடைய அறிவைவிட உண்மை மற்றும் நேர்மையால்தான் சாதனைகளை புரிந்தனர்.
இந்த காலத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சமுதாயத்தில் இன்றைக்கு பல்வேறு வகையான பிரச்சனைகள் எழுந்துள்ளன. இன்றைய சூழ்நிலைகளை சமாளிப்பதற்காக புது வகையான ஏற்பாடுகள் - மனம், உடல் மற்றும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. சமுதாயத்தின் சிறு சிறு ஓட்டைகளிலும் ஊழல் மற்றும் சுரண்டல் நுழைந்துவிட்டது. இந்த எதிர்மாறான சூழ்நிலையில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக, நேர்மையாளர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இந்தப் பணியில் வெற்றிபெற வேண்டுமானால், மக்கள் தங்களை முழுமையாக தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு தீய காரியத்தை செய்வதற்கு முன் எப்படி ஒருவர் தன்னை தயார் செய்துகொள்கிறாரோ அதே போல நல்ல காரியத்தை செய்வதற்காகவும் தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும். நல்ல மனிதர்கள் எப்போதும் நல்லதையே செய்வார்கள்.
ஒவ்வொரு செயலை செய்வதற்கு முன்பும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருக்கும். உண்மையில் அத்தகைய மிக நீண்ட ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. மாற்றம் என்பது இன்றைக்கு தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. இதற்கு மேலும் தாமதிப்பதற்கு நேரம் கிடையாது. ஸ்ரீ கிருஸ்ணர் பிறந்து ஏறத்தாழ 3300 ஆண்டுகள் கழிந்துவிட்டன, ஷிவபெருமான் பிறந்து ஏறத்தாழ 7000 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்றைய மனிதர்கள் அன்றைய மனிதர்களைப் போல தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். மனித சமுதாயத்தின் நலனை திரும்ப கொண்டுவருதற்காக, அவர்கள் ஒரு புதிய கொள்கையோடு, ஒரு புதிய யுத்தத்தை தொடங்க வேண்டும்.
கடந்த காலங்களில் அதாவது ஷிவனுடைய மற்றும் கிருஸ்ணருடைய காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தபோது, ஒரு புதிய வேதாந்தம், ஒரு புது வாழ்க்கை முறை, ஒரு புதிய வெளிச்சம், மக்களுக்கு முன்னேறிச் செல்வதற்கான ஊக்கத்தை தந்தது. அதனால்தான் அவர்களுடைய பணியை நம்ப முடியாத குறுகிய காலத்தில் அவர்களால் முடிக்க முடிந்தது. மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வருவதற்கு போராட்டம் என்பது – அது குறுகியதோ அல்லது நீண்டதோ, ஆனால் போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது. மனிதர்கள் ஒரு வல்லமை பொருந்திய மனிதரின் கீழ் நின்று போராடும்போது அந்த வேலை மிகக் குறைந்த காலத்தில் முடிந்துவிடும். அப்போது மக்கள் தீவிரமாக சிந்தித்து சமுதாயம் சந்தித்துக்கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனைகள் என்னென்ன என்பதை தீர்மானித்து, அதற்கு தீர்வு காணும் வழிகளையும் ஏற்பாடுகளையும் செய்வார்கள். அப்படி அவர்கள் தயார் ஆகிவிட்டால், வெற்றியை அவர்கள் மிக விரைவாக அடைந்து விடுவார்கள்.
இன்றைய மனித சமுதாயத்தை நாம் உலகலாவிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும், பிரித்து பார்க்கின்ற கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. பெரியதோ அல்லது சிறியதோ அனைத்து பிரச்சனைகளையும் நாம் தீர்த்தாக வேண்டும். மிகப்பெரிய பிரச்சனைகளை உடனடியாக தீர்ப்பதற்கான வேலைகளை ஆரம்பித்தாக வேண்டும். ஏனென்றால் சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டிய தருணம் ஏற்கனவே வந்துவிட்டது. நாம் அதிக தாமதம் செய்தால் இருளும் அதிகமாக சூழ்ந்து விடும். இன்றைக்குத் தேவையான ஒரு புதிய வேதாந்தம், ஒரு புதிய மனிதநேய கோட்பாடு, ஒரு புதிய சமூக-பொருளாதார சிந்தனை ஆகிய அனைத்தும் இந்த சமுதாய நலனை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஏற்கனவே வந்துவிட்டது.
அதனால்தான் இனிமேலும் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று நான் சொல்கிறேன். பயனுள்ள செயல்களில் உங்கள் நேரத்தை செலவழியுங்கள்;. “ ஷுபஸ்ய ஷீக்ரம் அஸுபஸ்ய காலஹரணம் ” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு புதிய புனித பணியை துவங்குவதற்கு முன் நீங்கள் கிரஹ பலன்களையும் பஞ்சாங்கமும் பார்த்துக்கொண்டிருக்க தேவையில்லை, உடனடியாக துவங்குங்கள். ஆனால் எதாவது கெடுதல் உண்டாக்க கூடியதை செய்வதற்கு முன் அதை செய்வதற்கு எவ்வளவு தாமதம் செய்ய வேண்டுமோ அவ்வளவு தாமதம் செய்யுங்கள். கால தாமதம் ஏற்பட ஏற்பட, மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, அந்த தீய காரியத்தை நீங்கள் செய்ய வேண்டாம் என்று தீர்மானித்து விடுவீர்கள்.
உங்கள் புனித பணியை செய்கின்றபோது உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இந்த நடைமுறை உலகில், இந்த சார்பியல் உலகில் மிகவும் மதிப்புள்ளது நேரம்தான். ஒரு முறை நேரத்தை இழந்துவிட்டால் அது திரும்பவும் வராது. ஆதனால் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்களுக்கு வளம் உண்டாகட்டும், உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்.
🌷 ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌷
(ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து)
No comments:
Post a Comment