Tuesday, 6 October 2020

 பாகவத தர்ம இல்லாத மனிதர்கள் விலங்குகளே 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


 "ஆஹார நித்ரா பய மேதூனயிச்ச ஸாமான்யமேதத் பஷுபீர்னரானாம்,

தர்மோ ஹி தேசமதிகோ விஷேஸோ தர்மேன ஹீனஹ பஷுபிஹ் ஸமானாஹ"


இந்த ஸ்லோகத்தில், பாகவத தர்மம் இல்லாத மனிதர்கள் விலங்குகள் போன்றவர்களே என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், பாகவத தர்மத்தை இழந்த மனிதர்கள் விலங்குகளைவிட மோசமானவர்கள் என்று. விலங்குகளுக்கு முன்னேறிய அறிவோ அல்லது மெய்யுணர்வோ கிடையாது, ஆனால் மனிதர்கள் பெற்றுள்ளனர். மனிதர்கள் தங்களுடைய முன்னேறிய அறிவைவோ அல்லது மெய்யுணர்வையோ பயன்படுத்த தவறினால், அதாவது பாகவத தர்மத்தின் வழிமுறைகளை பயன்படுத்த தவறினால், அவர்கள் மனித குலத்தின் எதிரிகள் ஆவர், அல்லது மனித இனத்தின் அவமான சின்னங்களாவர். பாகவத தர்மத்தோடு தொடர்பில்லாத அவர்களுடைய செயல்கள் அனைத்தும் மனித இனத்திற்கும் மனிதர்களின் இயற்கைப் பண்பிற்கும் எதிரானவையே ஆகும். அவர்களுடைய எதிர்காலம் மின்னலால் தாக்கப்பட்ட மரம்போல கருகிப்போவது நிச்சயம். தங்களுடைய வாழ்வை வளமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற  ஆழ்ந்த விருப்பத்தை உடைய நலிந்த மக்கள் பாகவத தர்மத்தை பின்பற்றுவதுதான் சிறந்த வழி. மனித இனம் மற்றும் நாகரிகம் வளர்ச்சியடைவதற்கான இயற்கையான மற்றும் எளிதான வழி பாகவத தர்மத்தின் வழிதான். வேறு வழியே கிடையாது. ஆகையால் மனித இனத்தின் நலனை உண்மையாக விரும்புகிறவர்கள் பாகவத தர்மத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும்.

பாகவத தர்மம் மூன்று காரணிகளைக் கொண்டது. விஸ்தார(விரிவாக்கம்), ரஸ(பாய்ந்து ஓடுவது) மற்றும் சேவா(தொண்டு). விஸ்தார என்ற சொல்லுக்கு சரியான பொருள், மனதை இறைவனை நோக்கிச் செலுத்துவது என்பதாகும். இறைவனை நோக்கிச் செல்லுகின்ற இந்த மன இயக்கமானது புறக்காரணிகளைச் சார்ந்தது அல்ல. இறைவனை நோக்கிச் செல்வதற்கு, ஒருவர் முதலில் எல்லாவிதமான குறுகிய மனப்பான்மைகளையும், கீழான எண்ணங்களையும் கடந்து வெற்றிகொள்ள வேண்டும். எனவே பாகவத தர்மத்தை பின்பற்றுகின்ற ஒருவர், தன்னுடைய மனதின் உள்ளேயே இருக்கின்ற எல்லைகளை உடைய மனப்பாங்குகளுக்கு எதிராகவும், அதேபோல இச்சமுதாயத்திலும் ஈவிரக்கமின்றி பெரிய அளவில் போரிடவேண்டும்.  

குறுகிய எல்லைகளைக் கொண்ட கீழான எண்ணங்கள் மனதிற்குள் அடைபட்டுக் கிடக்கின்றபோது, நம்மைச் சுற்றி பாவங்கள் என்ற தூசிகள் படியக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிவிடும். ஆனால் மனித மனம் விரிவடைகின்றபோது, புன்னியத்தின் ப்ரகாசம் அதிகரித்துக்கொண்டே போய், மனித இனமே தெய்வீகத்தின் சிகரத்தை தொடும்.


 விஸ்தாரஹ ஸர்வபூத்தஸ்ய விஷ்னோர்விஷ்வமிதங் ஜகத்

த்ரஸ்டவ்யமாத்ம வத்தஸ்மாத பேதேன விசக்ஸணேஹ

(விஷ்ணுபுராணம்)


பொருள்: இந்த அகிலமே விஷ்ணுவின் பஞ்சபூத காரணிகளின் விரிவாக்கம்தான். அதனால் அறிவுடைய மனிதர்கள் இந்த அகிலம் முழுவதையும் தனது சொந்தம் என்ற உணர்வோடு பார்ப்பார்கள். 

மனிதர்களால் மட்டும்தான் தங்களுடைய மனதை விரிவாக்கிகக்கொள்ள முடியும். ஏனென்றால் அவர்களுக்கு மட்டும்தான் பாகவத தர்மத்தை பின்பற்றுகின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 

இப்போது கேள்வி என்னவென்றால், மனிதர்கள் எப்படி பாகவத தர்மத்தை பின்பற்ற முடியும் என்பதும், எப்போது அவர்கள் அதை துவங்க வேண்டும் என்பதும்தான்.

மனிதர்கள் பாகவத தர்மத்தை அவர்களுடைய குழந்தைப் பருவம் முதலே, அதாவது ஐந்து வயது முதலே பயிற்சி செய்ய வேண்டும். மனித வாழ்வானது மற்ற உயிரினங்களின் வாழ்வை விட அதிக மதிப்புள்ளது. ஆகையால் ஒவ்வொரு உயிரினமும் தாங்கள் அறியாமலேயே மனித உடலைப் பெறவேண்டும் என்ற ஆவலை கொண்டுள்ளன. ஏனென்றால் மனித உடலுடன்தான் ஆன்மீக பயிற்சிகளையும் பெருமைக்குரிய காரியங்களையும் செய்ய முடியும். பாகவத தர்மத்தை குழந்தைப் பருவம் முதலே பயிற்சி செய்ய வேண்டும் என்று சித்தாந்தங்கள் கூறுகின்றன. பாகவத தர்மத்தை பின்பற்றுகின்றவர்கள் இந்த படைப்பு முழுவதையும் விஷ்ணுவின் தோற்றமாகத்தான், அதாவது பரமபுருஸனுடைய தோற்றமாகத்தான் பார்க்கிறார்கள். ஒரு சிறிய விஷ்ணுவின் சிலை அவர்களுக்கு விஷ்ணுவின் உண்மையான தோற்றமாக தெரிவதில்லை. அவர்கள் விஷ்ணுவின் படைப்பின் தோற்றத்தைத்தான் நேசிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் பரமபுருஸனோடு வைத்திருக்கின்ற அன்பான உறவிலிருந்து பிரிந்திருக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

" அன்யமமதா விஷ்ணோரமதா ப்ரேமஸங்கதா "

விஷ்ணு மீது மட்டுமே வைத்திருக்கின்ற அன்புக்கு ப்ரேம அல்லது தெய்வீக காதல் என்று பெயர். ஏனென்றால் அவர்கள் இந்த பிரபஞ்சம் முழுவதையும் தன்னுடைய மனதுக்குள் வைத்திருக்கின்ற பரமபுருஸன் மீது அன்பை வைத்துள்ளனர். இந்த பஞ்சபூத உலகை படைத்ததன் மூலம் அந்த பரமபுருஸன் தன்னால் படைக்கப்பட்ட பொருள்கள் யாவும் தன்னை தொடர்புகொள்ளும்படி வைத்திருக்கிறான். ஒரு சிறிய புல்லின் கீற்றுக்கூட அவனுடைய படைப்பாகும். ஆகையால் பாகவத தர்மத்தை பின்பற்றுகின்றவர்கள், தங்களுடைய மனதை விரிவாக்குகின்றவர்கள்,  நிச்சயமாக இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளையும் அவர்களுடைய நாயகனின் தோற்றமாகத்தான் பார்ப்பார்கள். அதனால் அவர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் சமமான மரியாதையைத்;தான் தருவார்கள்.

ஆன்மீக முன்னேற்றத்தை ஊக்குவிக்காமல், மனித மனங்களை குறுகிய வட்த்துக்குள் வைத்துவிட்டு, பலவகையான கற்பனை வடிவங்களை கடவுள்கள் என்று சித்தரிக்கின்ற எந்த ஒரு மதமோ அல்லது நெறியோ பாகவத தர்மத்திலிருந்து எட்டமுடியாத தூரத்தில் இருப்பவையே ஆகும். பாகவத தர்மத்தில் வேறுபாடுகளுக்கும் வேற்றுமைகளுக்கும் இடமே கிடையாது. மனித மனங்கள் பிரிந்துகிடப்பதற்கு காரணமாகவும், பிரிக்க முடியாத மெய்பொருளிடம் இருந்து தூரமாக விரட்டியடிக்கின்ற மனப்பாங்கையும் வளர்க்கின்ற ஒரு மதமோ அல்லது தத்துவமோ பாகவத தர்மத்துக்கு எதிரானது ஆகும். பாகவத தர்மத்தை பின்பற்றுகின்ற மனிதர்கள் பிரிவினைகளுக்கும் பிரித்துப்பார்க்கின்றவர்களுக்கும் இடையே ஒற்றுமையையும்,: இணைப்பையும் உருவாக்க தீவிரமாக பாடுபடுவார்கள்.

பாகவத தர்மத்தின் இரண்டாவது காரணி ரஸ என்பது. இந்த பிரபஞ்சத்தில் எது நடந்தாலும், அது இயற்கையாக நடந்தாலும், இயற்கைக்கு அப்பாற்பட்டதாக நடந்தாலும், அது அந்த பரமாத்மனின் விருப்பத்தில்தான் நடைபெறுகிறது. எல்லாமே அவனுடைய கருணையை நம்பித்தான் இருக்கின்றன. மனிதர்கள் எதை நினைத்தாலும், சொன்னாலும், செய்தாலும் அது அந்த இறைவனின் அருளால்தான் நடைபெறுகிறது. இந்த பிரபஞ்சம் முழுவதும் அந்த பரமாத்மனின் மனக்காட்சிதான். அனைத்துமே அந்த பரமாத்மனுடைய நினைவலைகளில் இருந்தே வெளித்தோன்றுகின்றன. இவ்வாறு ஒரே சமயத்தில் அவன் எல்லாவற்றையும் பார்க்கின்றான்.

மனித மனதிற்கும் இறை மனதிற்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், மனித மனம் எதை கற்பனை செய்தாலும் அது சில சமயங்களில்தான் செயல் வடிவம் பெறுகிறது. மனிதர்களுடைய மனதின் காட்சியை புறத்தில் காட்டுவது என்பது, அது முழுமையாக ஒருமுகப்படும்போதுதான் நடைபெறுகிறது. ஆனால் இறை மனதுக்கு எதுவுமே வெளியில் கிடையாது, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அவனுடைய மனதிற்குள்தான் இருக்கிறது. இறைவனுடைய எண்ண அலைகள் நமக்கு வெளியிலே தெரிவதுபோல இருக்கிறது. இறைமனதின் எண்ண அலைகள் யாவும் அவனுடைய ஸ்வரஸ(ஓட்டம்)ஆகும். அதுபோலவே மனித மனதிலிருந்தும் பலவகையான அலைகள் வெளிவருகின்றன. முந்தய விஷயத்தில் இறை மனதின் அலைகள் பரமாத்மனின் ஸ்வரஸவாக இருக்கிறது, பிந்தய விஷயத்தில் மனிதர்களுடைய மனதிலிருந்து உருவாகின்ற பல்வேறு எண்ண அலைகள் ஜீவாத்மாக்களின் ஸ்வரஸவாக(ஓட்டமாக) இருக்கிறது.

ஜீவாத்மாக்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவையாக இருக்கின்றன. அதற்கு காரணம் அவற்றின் தனிப்பட்ட ஓட்டங்களில் உள்ள வித்தியாசம்தான். எல்லா ஜீவாத்மாக்களும் தங்களுடைய சொந்த விருப்பத்தின்படி ஓடுகின்றன. அவை தங்களுடைய மனதின் எண்ணங்களையும் செயல்களையும் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பத்தின்படி ஓடச்செய்கிறார்கள். அதனால்தான் ஜீவாத்மாக்களின் எண்ணங்கள், செயல்கள் மற்றும் வாழும்முறை ஆகியவை மிகவும் வேறுபட்டவையாக இருக்கின்றன. நீங்கள் ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு செருப்பு தைப்பவர் உங்கள் பாதங்களை பார்க்கிறார், ஒரு சலவைத் தொழிலாளி உங்களுடைய ஆடைகளை பார்க்கிறார், ஒரு சவரத்தொழிலாளி உங்கள் தலையைப் பார்க்கிறார். அவர்களுடைய பார்வையில் இருக்கின்ற வித்தியாசம், அவர்களுடைய தனிப்பட்ட மனஓட்டத்தில் உள்ள வித்தியாசத்தால்தான் ஏற்படுகிறது. அவ்வாறே

எல்லா ஜீவாத்மாக்களும் அவரவருடைய எண்ணத்தின் ஓட்டத்தை, பரமாத்மனின் எண்ண ஓட்டங்களுக்குத் தக்கவாறுதான் ஓடவிடுகிறார்கள். ஒவ்வொரு ஜீவாத்மாவின் எண்ண ஓட்டங்களும் நேரடியாக பரமபுருஸனால்தான் கட்டுப்படுத்தப்படுகிறது,  உங்களுடைய அறிவினால் அல்லது விருப்பங்களால் பரமபுருஸன் வழிநடத்தப்படவில்லை என்றும், உங்களுடைய அறிவும் விருப்பங்களும் அவனுடைய விருப்பப்படிதான் நடத்தப்படுகிறது என்றும் நான் அடிக்கடி சொல்லி இருக்கிறேன். அவனை கேள்வி கேட்கின்ற சந்தர்பம் உங்களுக்கு ஒருபோதும் கிடைக்காது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவனைச் சுற்றித்தான் நகர்ந்தாக வேண்டும். உங்களுடைய தனிப்பட்ட ஓட்டமானது பரமாத்மனின் ஓட்டத்தோடு ஒத்துப்போகவில்லையென்றால், உங்களுடைய விருப்பங்கள் ஒருபோதும் நிறைவேறாது. ஒவ்வொருவரும் நிறையவற்றை அடைய விரும்புகிறார்கள் ஆனால் அவர்களுடைய விருப்பங்களில் மிகச்சிறியவற்றைத்தான் பெறுகிறார்கள். ஒருவருடைய விருப்பங்கள் அந்த பரமாத்மனின் அலைகளோடு மிகச்சரியாக ஒத்துப்போகாவிட்டால் அவரால் ஒருபோதும் வெற்றியை பெறமுடியாது.


 கீ ஹபே இச்சாய் இச்சாத்தே கீ ஹய் க்ருஷ்ண இச்சா பினா ஃபல் ஃபலேனா 


தனி ஒருவருடைய விருப்பத்திற்கு ஏதேனும் மதிப்பு உள்ளதா? புரமாத்மனின் ஒப்புதல் இன்றி எதுவுமே வெற்றி பெறாது.

நீங்கள் எதையாவது அடைய விரும்புகிறீர்கள் ஆனால் உங்களுடைய விருப்பம் பரமாத்மனின் ஒப்புதலை பெறவில்லையென்றால், பிறகு உங்களுடைய காரியத்தில் நீங்கள் வெற்றியடையமாட்டீர்கள். இதுதான் பாகவத தர்மத்தின் இரண்டாவது காரணியாகிய ரஸதத்வம் என்பது. ரஸ தத்வம் என்றால் என்ன? மனிதர்கள் பரமபுருஸனிடம் ஆழமான அன்பை வைத்திருக்கும்போது அவர்களுக்கு அவனுடைய இயல்பு என்னவென்று புரிய ஆரம்பிக்கிறது, அவர்களும் அவனுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்கிறார்கள். அத்தகைய பக்தர்கள் இந்த உலகில் வெல்ல முடியாதவர்களாகவும் வெற்றியுடையவர்களாகவும் ஆகிறார்கள். நிறைய மனிதர்கள் அவனுடைய பெருமைகளைக் கண்டு திளைத்துப் போகிறார்கள். ஆனால் சாதகர்கள் அவனைப்போல பெருமையை அடைகின்ற இரகசியத்தையே அறிந்திருக்கிறார்கள். இவ்வாறு ரஸ சாதனாவின் அடிப்படையான பொருள் என்னவென்றால் ஒருவருடைய தனிப்பட்ட விருப்பங்களையும் ஆவல்களையும் பரமபுருஸனை நோக்கி செலுத்துவதுதான். இந்த வழியில் மட்டும்தான் ஒரு சாதகன் நிறைவேறுதல்களையும்(ரித்தி) வெற்றிகளையும்(ஸித்தி) அடைகிறான். சாஸ்திரங்களில் இதற்கு ராஸலீலா என்று பெயர். படைக்கப்பட்ட உயிர்கள் அவனுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு நடந்தாக வேண்டும், வேறு வழி கிடையாது. கல்வி, அறிவாற்றல் மற்றும் பதவி போன்ற அனைத்தையும் அவனை நோக்கி செலுத்தவில்லையென்றால், அவை அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடும். இந்த தலையாய உண்மையை உணர்ந்தபின் அறிவுடைய மனிதர்கள் “ ஓ பரமபுருஸா, உன்னிடம் கேட்பதற்கு ஒன்றும் இல்லை, நீ திருப்தி அடைந்தால் போதும், வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று சொல்லி பரமபுருஸனுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு நடக்க ஆரம்பிக்கிறார்கள். 

பாகவத தர்;மத்தின் மூன்றாவது காரணி சேவா என்பது, அதாவது தன்னலமற்ற தொண்டு. நீங்கள் ஒருவருக்கு எதையேனும் கொடுக்கின்றபோது அவரிடமிருந்து திருப்பி எதையேனும் எதிர்பார்த்தால் அது ஒரு வியாபார கொடுக்கல் வாங்கல் ஆகும். ஆனால் நீங்கள் செய்த சேவைக்காக திருப்பி எதையும் பெறவிரும்பவில்லை என்றால், அதுதான் உண்மையான சேவா என்பது. இங்குதான் உண்மையான சேவைக்கும் வியாபார சேவைக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடு. நீங்கள் செய்தி தாள்களில், பல விளம்பரங்களை பார்த்திருக்கலாம், அதில் சில நிறுவனங்கள், இத்தனை வருடங்களாக நாங்கள் மக்களுக்காக நீண்ட கால சேவை செய்து வருகிறோம் என்றெல்லாம் விளப்பரம் கொடுத்திருப்பார்கள். உண்மையாக யோசித்துப்பாருங்கள், எந்த வியாபார நிறுவனங்களாவது உண்மையான சேவை செய்கிறார்களா? என்று. அது அவர்களுடைய வியாபாரத்தை வேறு வழியில் பெருக்கிக்கொள்வதற்கான யுக்தி இல்லையா?

சேவை என்பது இரண்டு வகையானது. ஒன்று அகச் சேவை மற்றொன்று புறச்சேவை. இந்த பிரபஞ்சம் முழுவதும் பரமபுருஸனுடைய பெருமைகளை பறைசாற்றும் விதவிதமான தோற்றங்களே. ஆகையால் ஒரு மனிதர் குறிப்பிட்ட ஒரு உயிருக்கு சேவை செய்கின்றபோது அது பரமபுருஸனுக்கே சேவை செய்வதாகத்தான் அர்த்தம். நீங்கள் எங்கே இருந்தாலும், நீங்கள் என்ன தகுதியுடையவராக இருந்தாலும், நீங்கள் ஒரு குடும்பஸ்தராக இருந்தாலும், அல்லது ஒரு துறவியாக இருந்தாலும், நீங்கள் இந்த பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் சேவை செய்தேயாக வேண்டும். ஏனென்றால் அனைத்து தோற்றங்களும் அந்த பரமபுருஸனின் தோற்றங்களே. வாழுகின்ற உயிர்களுக்கு நீங்கள் சேவை செய்யும்போது உங்களுடைய கர்வம் தலைதூக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். நான் பரமபுருஸனுக்குத்தான் சேவை செய்கிறேன் வேறு யாருக்கும் அல்ல என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பரம புருஸன் உங்கள் முன்னால் அந்த வடிவில் வரவில்லையென்றால், அந்த உயிருக்கு சேவை செய்கின்ற வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்காது. அவனே உங்கள் முன்னால் ஒரு நோயாளியாக, ஒரு பிச்சைக்காரனாக, உங்களுடைய உதவியைப் பெறுவதற்காக வந்திருக்கிறான். உண்மையில் அந்த உதவியைப் பெறுகின்றவரைவிட நீங்கள் பெருமைக்குரியவர்தான், ஏனென்றால் பரமபுருஸனுக்கு சேவை செய்கின்ற வாய்ப்பை அவன் உங்களுக்குத் தந்திருக்கிறான். இவ்வாறு ஒவ்வொருவரும் புறச்சேவையை செய்தாக வேண்டும்.

ஜபம் செய்கின்ற போதும், தியானம் செய்கின்றபோதும் பரமபுருஸனுக்கு சேவை செய்கின்ற பாவனையோடு பயிற்சி செய்ய வேண்டும். இதுதான் அகச்சேவை என்பது. இதை ஒருவர் செய்துவிட்டால், அவருக்கு மிகவும் பலமான மன ஒருமுகத்தை அடைய முடியும். ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் இந்த சேவையை செய்ய வேண்டும். ஜபம் செய்கின்றபோது இந்த வகையான சேவை ஒருவரிடத்தில் முழுமையாக வந்துவிட்டால் ஒருவர் எல்லாவற்றையும் அடைந்துவிடுவார். சேவை மனப்பான்மை உள்ள ஒரு சாதகர் வெறும் நாம மந்திரத்தை திரும்ப திரும்ப சொன்னாலே மோட்சத்தை பெற்றுவிட முடியும். ஆனால் மிக உயர்ந்த ஆன்மீக பயிற்சிகளை செய்கின்ற ஒரு யோகி இந்த சேவையை செய்யாதபோது, ஆன்மீக வட்டத்துக்குள் எதையும் பெற முடியாது.

அகச் சேவையை சரியான முறையில் செய்யவில்லையென்றால், உண்மையான புறச்சேவை செய்ய முடியாது. அதனால்தான்,  

 'ஆத்மமோக்ஸார்த்தங் ஜகத்தித்தாய ச' என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அகச் சேவை, அதாவது ' ஆத்மமோக்ஸார்த்தம் ' அழிவில்லா நிலைக்கு வழிகாட்டுகிறது, புறச்சேவை, அதாவது ' ஜகத்ஹித்தாயச் ச' உங்களுக்கு உலக நன்மைக்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு அகச்சேவை மற்றும் புறச்சோவை ஆகிய இரண்டும் சமமான மதிப்பை பெற்றுள்ளன. புறச்சேவை உங்கள் மனதை தூய்மை செய்கிறது, அந்த தூய்மையான மனதால் தன்னுடைய இஸ்டாவுக்கு(இறைவனுக்கு) மிகச் சரியான அகச்சேவை செய்ய முடியும். எனவே ஒவ்வொரு சாதகனும் இந்த இரண்டு சேவைகளையும் செய்தாக வேண்டும். புறச்சேவை மற்றும் அகச்சேவை ஆகிய இரண்டையும் செய்வதில் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த இணைதல் நடைபெறுவது சாத்தியமே. இவ்வாறு பாகவத தர்மம் என்பது சமூக தர்மமாக, மனிதனுக்கு உரிய தர்மமாக, அனைவராலும் எளிதில் பின்பற்றக்கூடிய தர்மமாக இருக்கிறது. மனிதர்கள் இதை தெரிந்திருக்கின்றார்களோ இல்லையோ ஆனால் எல்லோருமே இந்த பாகவத தர்மத்தின் மையக்கருவை நோக்கி நகர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய தனித்தனியான பயணமும் கடைசியாக முடிவடைவது அந்த பரமபுருஸனிடத்தில்தான். எப்படி இந்த பூமி சூரியனை சுற்றி வருகிறதோ, நிலவு இந்த பூமியை சுற்றி வருகிறதோ, அதுபோலத்தான் ஒவ்வொரு மனிதரும் பரமபுருஸனை சுற்றி வருகின்றனர். உங்களுடைய சாதனா என்பது உங்களுக்கும் பரமபுருஸனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறைப்பதற்கான முயற்சியே அன்றி வேறொன்றுமில்லை.

ஒருவருடைய௮ நரம்பணுக்கள், சுரப்பிகள் மற்றும் துணை சுரப்பிகள் என்று எல்லாமே ஒருவருடைய தனிப்பட்ட எண்ண ஓட்டத்திற்ன்படிதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், பல்வேறு உடலமைப்புகளும்கூட இந்த தனிப்பட்ட எண்ண ஓட்டங்களுக்கு ஏற்றவாறுதான் படைக்கப்படுகிறது. மனதின் பல்வேறு எண்ண அலைகளும்கூட அந்த தனி மனிதனின் எண்ணம் செல்லுகின்ற பாதைக்கேற்றவாறுதான் புரிந்துகொள்ளப்படுகிறது. எல்லா ஜீவாத்மாக்களும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ இந்த பிரபஞ்சத்தின் மையக்கருவைத்தான் சுற்றிவந்துகொண்டு இருக்கின்றன. எவருமே பரம்பொருளிடமிருந்து பிரிக்கப்படுவதில்லை. வாழுகின்ற உயிர்கள் அதனதன் எண்ண அலைகளுக்கு ஏற்றவாறுதான் வெவ்வேறு வகையான உடலமைப்புகளை பெறுகின்றன. அவ்வாறு பெற்ற அவர்களுடைய மனதோடும் உடலோடும் அவை இந்த பிரபஞ்ச வட்டத்தை சுற்றிவந்து கொண்டு இருக்கின்றனர். இந்த நகர்தலானது அவர்கள் பரம புருஸனிடமிருந்து பிரிந்து இருக்கிறோம் என்ற நினைவு இருக்கின்ற வரைதான் நடைபெறுகிறது. ஆனால் இந்த ஒற்றைத் நீர்துளியானது பரந்து விரிந்த கடலை எந்தக் கணம் கண்டுகொண்டதோ அந்தக் கணத்தில் அது அந்த கடலோடு ஒன்றாய் கலந்துவிடுகிறது. இப்போது இந்த இரண்டுக்கும் இடையே இருந்த இடைவெளியானது மறைந்துபோய் இருவரும், தனித்து இருந்த நிலையும் இல்லாமல் போகிறது. இரண்டும் ஒன்றாய் ஆகிறது. ஆனால் இந்த முடிவான இணைதலை அடைகின்றவரையில் ஜீவாத்மாக்கள் எண்ணெய் செக்கை சுற்றிவருகின்ற மாடுகளைப் போல சுற்றிக்கொண்டே இருந்தாக வேண்டும்.

சாதகர்கள் விஸ்தார, ரஸ மற்றும் சேவா என்ற நற்காரியங்களை செய்து தங்களை பாகவத தர்மத்தில் நிலைநிறுத்திக்கொண்ட பொழுது, அவர்களுடைய பயணம் முடிவுக்கு வருகிறது. அவர்கள் அந்த மையக்கருவோடு, அந்த பரமபுருஸனோடு ஒன்றாய் இணைந்துவிடுகிறார்கள். அந்த நிலையிலே அவர்களுக்கு இந்த தெய்வீக விளையாட்டின் இரகசியம் புரிந்துவிடுகிறது. இதுதான் மனிதர்களின் உண்மையான தர்மம், இதுதான் பாகவத தர்மம்.


🌷 ஸ்ரீ ஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌷


(ஸுபாஷித ஸங்ரஹ 8ம் பாகத்திலிருந்து

No comments:

Post a Comment