Wednesday, 7 October 2020

 ' ஆன்மீகப் பயிற்சிக்கான பாதையில் செல்லாதவர்கள், வளர்ச்சியற்ற மனிதர்களாகவே இருப்பர் '

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


இறைவன் வெவ்வேறு உயிரினங்களைப் படைத்துள்ளான். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்ற மூன்று பிரிவில் உள்ள ஒவ்வொன்றிலும்கூட வேறுபாடுகள் உள்ளன. எல்லா விலங்குகளும் எல்லா தாவரங்களும், எல்லா மனிதர்களும் சமமாக இருப்பதில்லை. 

 "சர்வே ச பஸவஹ சந்த்தி தலவத் பூதலே நராஹ

தேஷாம் ஞானப்ரகாஷாய வீரபாவஹ ப்ரகாஷிதஹ

வீரபாவம் சதாப்ராப்ய க்ரமேன தேவதா பவேத்"

அதாவது,  பிறந்த பிறகு ஒவ்வொரு மனிதனும் குழந்தைப் பருவத்தில் இருக்கிறான். அந்தப் பருவத்தில் அறிவு முழுவடிவம் பெறுவதில்லை. எதைப்பற்றியும் முடிவு எடுக்கின்ற அளவுக்கு அறிவு வளர்ச்சி பெறுவதில்லை. எல்லா விஷயங்களிலும் குழந்தையாகவே இருக்கிறான். தவறு செய்யும் சிறு குழந்தையை எப்பொழுதுமே நாம் மன்னித்து விடுகிறோம். அக்குழந்தையை நாம் திட்டுவதில்லை. ஏனென்றால் அதனுடைய அறிவு இன்னும் வளர்ச்சி பெறவில்லை என்பதால். அது சிறுநீர் கழித்து விட்டாலும், மலம் கழித்து விட்டாலும் அதை நாம் வெறுப்பதில்லை. அதே போல செய்கின்ற விலங்குகளையும் யாரும் வெறுப்பதில்லை. 


   அந்தச் சிறு குழந்தை சிறிது வளர்ந்த பிறகு கொஞ்சம் அறிவு வளர்ச்சியைப் பெறுகிறது, அக்காவை பெயர் சொல்லி அழைக்கிறது, அக்காவும் அக்குழந்தையின் மழழைச் சொல் கேட்டு இரசிக்கிறாள். ஆனால் அந்தக் குழந்தை மேலும் வளர்ந்தவுடன் அக்காவோ அல்லது குடும்பத்தில் உள்ள மற்றவர்களோ அதற்குமேலும் அது அவ்வாறு அழைப்பதை பாராட்டுவதில்லை. அப்போது அக்கா கடிந்து கொள்கிறாள். "வேறு எங்காவது என்னைப் பெயர் சொல்லி அழைத்தாலும் பரவாயில்லை, ஆனால்   என்   மாமனார்   வீட்டில்  என்னை அப்படி கூப்பிடாதே, அங்கே என்னை அக்கா என்றுதான் கூப்பிட வேண்டும்" என்று கூறுகிறாள். ஆனால் குழந்தைகள் மிகச் சிறியவர்களாக இருக்கும்போது அவர்களுடைய தவறுகளை கண்டிப்பதில்லை, கண்டிக்கவும் கூடாது. பொதுவாக ஒரு குழந்தை மனப்பக்குவத்தை பெற்ற பிறகு, வைதீக முறைப்படி ஆன்மீகப் பாதையை கற்றுத் தருகிறோம். அதாவது தீக்ஷை அளிக்கப்படுகிறது. அந்த தீக்ஷையின் ஆழ்ந்த கருத்தானது, பரமபுருஷனிடம் வேண்டுவதே ஆகும். “ஓ இறைவா, எனக்குச் சரியான பாதையைக் காட்டு” என்று வேண்டுவதே ஆகும். இத்தகைய பாதையைத் தேடுகின்ற ஒருவர் நிச்சயமாக அதை கண்டு கொள்வார். காயத்ரி மந்திரத்தில்,


 “ஓம் பூ புர்வஹ ஸ்வஹ தத்சவிதுர்வரேன்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோ யோ நஹ ப்ரசோதயாத் ஓம்”


 என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது “ஓ இறைவா, என்னுடைய புத்தியை சரியான பாதையில் வழிநடத்துவாயாக” என்பதே இதன் பொருள். 


   இவ்வாறு வைதீக முறைப்படி  தீக்ஷை பெற்ற ஒருவன் சிறிது மனப்பக்குவம் அடைந்து விட்டதாக கருதப்படுகிறான். அடுத்த நிலையில் இஷ்ட மந்திரத்தையும் குரு மந்திரத்தையும் கற்றுக்கொள்ளக்கூடிய தகுதியை அவன் பெறுகையில், ‘தாந்த்ரிக’ தீக்ஷை அவனுக்கு சொல்லித்தரப்படுகிறது. அப்போது அவன் அதிக மனப்பக்குவத்தைப் பெறுகிறான், புது மனிதனாகிறான். உண்மையில், பரம்பொருளிடத்தில் வேண்டிக்கொண்ட பிறகு அந்த ஈஷ்வரனே தீக்ஷை,  இஷ்ட மந்திரம் போன்றவற்றை சொல்லித் தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறான். ஏனென்றால் அவன் மட்டுமே குரு ஆவான். அதனால்தான் “குருவே ஈஷ்வரன், ஈஷ்வரனே குரு" என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆன்மீகப் பயிற்சிக்கான பாதையில் செல்லாதவர்கள், வளர்ச்சியற்ற மனிதர்களாகவே இருப்பர். மனித உடலை அவர்கள் பெற்று இருந்தாலும், எந்த விதத்திலும் அவர்கள் விலங்குகளைவிட உயர்ந்தவர்களாக இல்லை. அந்த நிலையில் அவர்கள் இறைவனிடம் உண்மையான ஆர்வத்தோடு “தயவு செய்து என்னை இந்த மிருக வாழ்க்கையிலிருந்து முன்னேற்றுவாயாக” என்று வேண்டிக்கொள்ள வேண்டும். இந்த முதற்கட்டத்தில், பக்தர்கள் பரமபுருஷனை ‘பசுபதி’ என்று அழைப்பர். ‘பசு’ என்றால் ‘விலங்கு’, ‘பதி’ என்றால் ‘இறைவன்’ என்று பொருள். அதாவது விலங்குகளின் இறைவன் என்று பொருள். அவன் ஆன்மீகப் பயிற்சிக்கான பாதையில் நடக்க ஆரம்பித்த பிறகு எல்லா பக்கங்களில் இருந்தும் தடைகளையும், இடையூறுகளையும் எதிர்கொள்கிறான். அவனது குடுப்பத்தினர்கள், நண்பர்கள், உறவினர்கள்கூட தடைகளை உண்டாக்குவார்கள். ஆனால் இந்தத் தடைகளையும், வேறு பக்கங்களிலிருந்து வருகின்ற மற்றத் தடைகளையும் ஒருவன் தைரியத்துடன் எதிர்த்துப் போராட வேண்டும். போராட்டமின்றி வெற்றியைப் பெற முடியாது. போராட்டமில்லாத வெற்றியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. 


   இங்கு ஒரு கேள்வி எழுகிறது. ‘போர்களத்தில் சண்டை செய்வதற்கு தகுதி உடையவர் யார்? என்று. கதாநாயகனால் மட்டுமே சண்டை செய்ய முடியும். விலங்கு நிலையிலிருந்து மேலே எழுந்தவனே வீரன் அல்லது கதாநாயகன் என்று அழைக்கப்படுகிறான். அந்த நிலையில் அவன் பரம்பொருளை ‘வீரேஷ்வரா’ என்று அழைக்கிறான். வீரனின் மனநிலையைப் பெற்ற ஒரு பக்தனுக்கு அதற்குமேலும் அந்த இறைவன் பசுபதியாக இருப்பதில்லை. அப்படிப்பட்ட பக்தனால் ஒருபொழுதும் பாவத்தையோ அல்லது அநியாயத்தையோ பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. எந்தக் குற்றத்தையும் அல்லது பாவத்தையும் செய்யவும் முடியாது. ‘க்ரமேன தேவதா பவேத்’ – அதாவது நாளடைவில் அவன் கடவுளாகிறான். அதாவது, கடவுள் தன்மையைப் பெறுகிறான். ‘வீரபாவ’த்திலிருந்து படிப்படியாக மேலேச் சென்று   உண்மையான கடவுளாகி  ‘திவ்ய பாவ’த்தை அடைகிறான். அப்படிப்பட்ட ஒருவனை, எப்பொழுதும் உன்னதமான நடத்தை கொண்டவனை ஒரு ‘தெய்வ மனிதன்’ அல்லது 'ஷிவனைப் போன்றவன்’ என்று அழைக்கிறோம். அப்படிப்பட்;ட ஒருவன் முன்னேற்றப் பாதையில் வெகு தூரம் சென்று, ஒரு நாள் அந்த பரமபுருஷனோடு கலந்து, பிறகு பரமபுருஷனாகவே ஆகிவிடுவான்.     


🌷 ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி 🌷


(ஆனந்த வச்சனாம்ருதம் 4ம் பாகத்திலிருந்து

No comments:

Post a Comment