ப்ரணிதான என்றால் என்ன?
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ப்ரணிதான என்றால் மனதின் எல்லா இயல்பூக்கிகளையும் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு கொண்டு வந்து, அதாவது மனிதனுடைய மனதின் முழு அமைப்பையும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவித்து, அந்த குவிந்த மனத்தை அந்த பரம்பொருளை நோக்கி செலுத்துவது. இப்படி குவிக்கப்பட்ட மனதின் இயக்கத்துக்குத்தான் ப்ரணிதான என்று பெயர். ப்ரணிதான என்பது ஒரு சமஸ்கிருத பெயர்சொல் ஆகும். இதுதான் ப்ரணிதான என்பதன் உளவியல் ரீதியான விளக்கம். ஆனால் நடைமுறையில் ப்ரணிதான என்றால், அதில் ப்ரணிதான மூல ஓசையின் சந்தத்தோடு மனதின் சந்தமும் இணைந்திருக்க வேண்டும். மூலஓசையின் சந்தம் மட்டும் இருந்தால் அதற்குப் பெயர் ஜபக்கிரியா. ஆனால் அந்த மூலஓசையின் சந்தத்தோடு மனதின் சந்தமும் ஒத்திசைந்து இருந்தால், அதற்குப் பெயர்தான் ப்ரணிதான. உதாரணமாக, நீங்கள் ராம, ராம, ராம, ராம என்று சொல்கிறீர்கள், இதற்குப் பெயர் ஜபக்கிரியா. ஜபக்கிரியாவில் மூன்று வகை இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். ராம, ராம, ராம - இந்த ஓசைக்கு வாச்சனிக ஜப என்று பெயர். அதாவது சத்தமாக உச்சரிப்பது. அடுத்த வகையான ஜபத்தில், ராம, ராம, என்று மெதுவாக சொல்வது, நீங்கள் அந்த ஓசையை உச்சரிக்கிறீர்கள், உங்களால் மட்;டும் அந்த ஓசையை கேட்க முடிகிறது, ஆனால் மற்றவர்களால் அந்த ஓசையை கேட்க முடியாது. இதற்குப் பெயர் உபாம்சு ஜப. மூன்றாவது ஜபமானது, மனதிற்குள்ளே உச்சரிப்பது. அது உங்களுக்கு கேட்கிறது, உங்களுடைய மனதின் காதில் கேட்கிறது, உங்களுடைய உடலின் காதில் கேட்காது. இதற்குப் பெயர் மானசீக ஜப. மானசீக ஜபம்தான் மிகச் சிறந்தது. ஆனால் சாதனா பயிற்சியில் மோட்சத்தை அடைவதில் இந்த ஜபக்கிரியா பெரிய அளவில் உதவாது. அதனால்தான் தந்த்ரவில் கீழ்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது.
உத்தமோ ப்ரஹ்ம சத்பாவோ மத்யமா த்யான-தாரணா
ஜபஸ்துதிஹ் ஸ்யததாமா மூர்த்திபூஜா தமாதமா
என்று.
மிகச் சிறந்த முறை ப்ரஹ்ம சத்பாவ முறைதான். இரண்டாவது இடம் தாரணா மற்றும் தியானம், மூன்றாவது இடம் ஜப ஸ்துதி, இது அதம ஆகும். கடைசி இடத்தில் இருப்பது மூர்த்தி பூஜா அதாவாது சிலை வழிபாடு. இது அதமாதம ஆகும். இங்கே விஷயம் என்னவென்றால், ஜபக்கிரியாவில் மூலஓசையின் சந்தம் மட்டும்தான் இருக்கிறது, ராம, ராம, ராம, ராம. ஆனால் நான் சொன்னேன் அல்லவா? ப்ரணிதானத்தில் இந்த மூலஓசையின் சந்தம் மனதின் சந்தத்தோடும் ஒத்திசைந்து இருக்க வேண்டும் என்று. அதாவது மனதுக்குள் ராம, ராம, ராம என்ற ஓசையை உச்சரிக்கிறீர்கள் அதே சமயம் ராமனைப் பற்றியும் சிந்திக்கிறீர்கள். இதில் ஒத்திசைந்த நிலை பராமரிக்கப்படுகிறது. இந்த ஒத்த சமநிலை இல்லாத ஜபக்கிரியாவில் என்ன நடக்கும்? நீங்கள் ராம, என்று உச்சரிக்கிறீர்கள், அதாவது “ரா” என்ற எழுத்தை உச்சரித்த பிறகு அடுத்த எழுத்தாகிய “ம” என்ற எழுத்தை நினைக்கிறீர்கள். ராம! மீண்டும் “ம” எழுத்தை உச்சரித்த பிறகு நீங்கள் “ரா” எழுத்தை நினைக்கிறீர்கள். இப்போது உங்களுடைய ஜபக்கிரியாவின் அடுத்த நிலை “மரா” என்று ஆகிவிடுகிறது. அதாவது “ம” எழுத்தை உச்சரித்த பிறகு “ரா” எழுத்தை உச்சரிக்கிறீர்கள். இப்போது உங்களுடைய இஸ்ட மந்திரம் “மரா” என்று ஆகிவிட்டது, “ராம” அல்ல. இப்படி ஜபக்கிரியா செய்வதால் ஒரு பயனும் இல்லை. மனதின் சந்தத்தோடு ஒத்த சமநிலை ஏற்படுகின்றவரை அல்லது ஏற்படாதவரை இது பயன் இல்லாததே. எங்கே மூலஒசையின் சந்தத்திற்கும் மனதின் சந்தத்திற்கும் ஒத்த சமநிலை இருக்கிறதோ அதுவே ப்ரணிதான ஆகும். ஆனந்த மார்கத்தில் உங்களுடைய ஈஷ்வர ப்ரணிதானம் ஜபக்கிரியா அல்ல. அது ப்ரணிதானம் ஆகும். இந்த ப்ரணிதானம் தியானத்தின் எல்லைக்குள் வருவது, ஜபக்கிரியாவின் எல்லைக்குள் வருவது அல்ல.
🌸 ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌸
சுபாஷித சங்ரஹ பாகம் 18
No comments:
Post a Comment