Wednesday, 7 October 2020

 பாவிகளுக்கும் பரிவு காட்டுபவன்தான் பரமபுருசன் 

-----------------------------------------------------------------------------------------------------------------------------

மனிதனுக்குள் இருக்கின்ற விரோதிகளில் மற்றும் குறைபாடுகளில் பயம் என்பதுதான் மிகவும் மோசமானது. பயம் என்பது பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது. அதில் ஒன்று தாழ்வு மனப்பான்மையினால் வெளிப்படுவது. அது பொதுவாக பற்றாக்குறை அல்லது குறைபாட்டு உணர்வு போன்றவற்றால் உருவாகிறது. ஒரு ஏழை  ஒரு பணக்காரனுக்கு முன்னால்  தன்னை தாழ்வாக எண்ணிக்கொள்கிறான், வலிமையுள்ளவனுக்கு முன்னால் ஒரு நலிந்தவனும், இறைவனுக்கு முன்னால் பாவம் செய்தவனும் தாழ்வாக எண்ணிக்கொள்கிறான். இத்தகைய பயஉணர்வு மனிதர்களுக்கு மிகவும் கேடுவிளைவிக்கக் கூடியது. ஏனென்றால் அது முன்னேற்த்தின் பாதையில் மிகப்பெரிய தடைகளை உருவாக்கிவிடும். உதாரணமாக  ஒரு மனிதன் விரும்பத்தகாத ஒரு தவறை செய்துவிடுகிறான் என்று வைத்துக்கொள்வோம், அதன் விளைவாய் உருவான தாழ்வு மனப்பான்மை அவனை எந்த ஒரு முக்கியமான பணியையும் மேற்கொள்வதற்கு தடையாய் அமைந்துவிடுகிறது. "நான் ஒரு பாவி, என்னால் எப்படி பரமபுருஸனை சந்திக்கமுடியும்? என்று எண்ணிக்கொண்டு பரமபுருஸனுக்கு முன்னால் நிற்பதற்கு அவன் அஞ்சுகிறான். ஆனால் வேதங்கள் கூறுகின்றன, மனிதர்கள் இத்தகைய எண்ணங்களை மனதில் புகவிடக்கூடாது என்று. அவர்கள் பாவிகள் என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. ஒருவன் இடைவிடாமல் "நான் ஒரு பாவி, நான் ஒரு பாவி" என்று நினைத்துக்கொண்டிருந்தால், அவனுக்குள் இருக்கின்ற இயல்பான மனஆற்றலை அவன் இழந்துவிடுவான். அவர்கள் மனம் திருந்தி  இத்தகைய எண்ணங்களை தவிர்த்துவிடவேண்டும். 

மனிதர்கள் எப்படி நினைக்க வேண்டும்? "நான் நல்லவனோ அல்லது கெட்டவனோ, எத்தகையவனாய் இருந்தாலும், நான் இனி தவறு செய்யமாட்டேன்,  நான் பரமபுருஸனுக்கு சொந்தமானவன், பிறகு எதற்காக தயக்கம், குழப்பம் அல்லது தாழ்வு மனப்பான்மை போன்றவற்றால் என்னுடைய மனதை நலிவுறச் செய்ய வேண்டும்? என்றுதான் எண்ண வேண்டும்.

 கீதையில்,

 “அபிசேத் ஸுதுராச்சாரீ பஜத்தே மாமனன்யபாக்ஸோபி பாபவினிர்முக்த முசியதே பவ பந்தனாத் ”

 என்று கிருஷ்ணன் கூறுகிறான். பாவிகளைவிட மோசமானவர்கள்கூட யாருக்கு சொந்தமானவர்கள்? நிச்சயமாக அவர்கள் பரமபுருஸனுக்கு சொந்தமானவர்கள். ஒருவர்கூட அவனுக்கு அப்பால் இல்லை அல்லது அவனுக்கு வெளியில் இல்லை. இந்த ப்ரபஞ்சத்துக்கு பரமபுருஸனே உரிமையாளனாய் இருக்கின்றபோது, அவனே இந்த ப்ரபஞ்சத்தின் தனித்தலைமை பதியாய் இருக்கின்றபோது, பாவிகளுக்கும் அவன்தானே பதியாய் இருக்கின்றான். பிறகு எதற்காக பாவிகள் அவனைக் கண்டு பயப்படவேண்டும்? அவர்களும் ஒருநாள் அவனை அடைவார்கள்.


 🌷 ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி 🌷


(ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து

No comments:

Post a Comment