" பரமபுருஷனுக்கு மகிழ்வைக் கொடுப்பதன் மூலம் நீங்களும் அதிக அளவில் மகிழ்ச்சி அடைவீர்கள்"
-----------------------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் எல்லோரும் பரமபுருஷனின் சந்ததிகள். அவனே ஒவ்வொன்றையும் படைத்துக்கொண்டிருக்கிறான். மனிதனால் உருவாக்கப்பட்ட வேற்றுமைகளையும், உயரமானவன், குள்ளமானவன், கறுப்பு, வெள்ளை, ஆண், பெண் போன்றவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. அந்த அகிலாண்ட மனத்துடன் உங்கள் மனத்தைப் பொருந்தச் செய்யுங்கள். அது பரமபுருஷனுக்கு மகிழ்வைத் தருகிறதா இல்லையா என்பதைப் பாருங்கள். அவனை மகிழ்விக்கின்ற எல்லாவற்றையும் செய்யுங்கள். தன் குழந்தை பட்டினியால் இறந்து போகவோ அல்லது தன்னுடைய குழந்தைகளுள் ஒன்று மட்டும் தேவைக்கு மேல் அதிகமாக சாப்பிடவோ அல்லது சேமித்து வைத்துக்கொள்ளவோ எந்த தந்தையும் விரும்புவது கிடையாது. இத்தகைய கேடுகள் ஒருபொழுதும் நடைபெறாமல் இருக்கக்கூடிய பொருளாதாரச் சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். அதே போல சமூக வாழ்வில் தன்னுடைய விதவை மகள் ஒரு துறவி போல உடை அணிவதையும், சமூக ரீதியாக துன்புறுத்தப்படுவதையும், பொது விழாக்களில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்படுவதையும் எந்த ஒரு தந்தையும் பார்க்க விரும்புவதில்லை. இத்தகைய கேடுகளுக்கு நீங்கள் ஆதரவு அளிக்கக் கூடாது, எல்லோருக்கும் நீங்கள் சம அளவில் சந்தர்ப்பங்களை அளிக்க வேண்டும்.
தங்கள் குழந்தைகள் அழுவதை பார்க்க பெற்றோர்கள் விரும்புவதில்லை. அப்படி அழுதால், அக்குழந்தைகளை தங்கள் மடிமீது வைத்து, இதமுடன் அன்பு காட்டி, பாராட்டி, அவர்களுடைய கண்ணீர் நிற்கும் வரை ஆறுதல் கூறுவார்கள். எவரும் அழக்கூடிய நிலையே இல்லாத, அங்கே எப்போதும் எல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்கக் கூடிய, எப்போதும் சிரித்திருப்பதற்கு எல்லோருக்கும் தாராளமாக சந்தர்பங்கள் கிடைக்கக்கூடிய, ஒரு சமுதாயத்தை நீங்கள் உருவாக்க வேண்டும். இத்தகைய சந்தோஷத்தையும் களிப்பையும் கண்டு பரமபுருஷன் அளவில்லா மகிழ்ச்சி கொள்வான். பரமபுருஷனுக்கு மகிழ்வைக் கொடுப்பதன் மூலம் நீங்களும் அதிக அளவில் மகிழ்ச்சி அடைவீர்கள், அவன் உங்கள் அருகில் இருப்பதை உணர்வீர்கள். இதுதான் உண்மையான சமூக நியதி. பரமபுருஷனை நோக்கி முன்னேறுகின்ற மனிதர்களுக்கு உதவி புரிவதே உண்மையான ஆன்மீக நியதியாகும். எந்த சூழ்நிலையிலும் யாரும் தேவையற்ற வேற்றுமைகளை உருவாக்கக் கூடாது. பரமபுருஷனுடைய குழந்தைகளின் முகங்களில் பரந்த சிரிப்பைக் கொண்டு வருவதே சமூக நியதியின் நோக்கமாகும். இந்தப் பாதை வழியாகத்தான் நீங்கள் எல்லோரும் செல்ல வேண்டும். நீங்கள் வெற்றியை சந்திப்பது நிச்சயம்.
🌷ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி🌷
(ஆனந்த வச்சனாம்ருதம் 4ம் பாகத்திலிருந்து
No comments:
Post a Comment